ஆட்டோ cabல் காவல் உதவி க்யூஆர் குறியீடு!
மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட ஆட்டோ மற்றும் வாடகைக் கார்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ‘காவல் உதவி க்யூஆர் குறியீடு’களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.  சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சென்னை பெருநகர காவல்துறை, ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகைக் கார்களுக்கு க்யூஆர் குறியீடு அடிப்படையிலான அவசர கால பதில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிகழ்நேர கண்காணிப்பு, அவசர கால பதில் வழிமுறைகள் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன வழித்தளங்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை வழங்க, இந்த தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துகிறது.
சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு 88,859 தனிப்பயனாக்கப்பட்ட (Customized) மற்றும் பிரத்யேக தனித்துவமான க்யூஆர் குறியீட்டை உருவாக்கியுள்ளது. இந்த க்யூஆர் குறியீடு ஆட்டோ, வாடகைக் கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.அவசரநிலை ஏற்பட்டால், எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால் ஆட்டோவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியவரும்.
கூடுதலாக, அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதிசெய்யும் வசதியும் இதில் உள்ளது.இப்புதிய க்யூஆர் குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரியவரும் என்பதுதான். சபாஷ்!
ஜான்சி
|