தமிழ் to மலையாளப் படங்களுக்கும்... சுட்டி டிவி, கொச்சு டிவி கார்ட்டூன்களுக்கும் டப்பிங் கொடுத்தவர்...
இன்று நடிகராக ஜொலிக்கிறார்..!
சிலரின் முகம் அடிக்கடி பார்த்ததாக இருக்கிறதே எனத் தோன்றும் அல்லவா! அப்படி ஒரு பரிச்சயமான முகம் நடிகர் கலேஷ் உடையது. சமீபத்தில் வெளிவந்த ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் ஹீரோ இவர். அதுமட்டுமல்ல. ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமியின் மருந்து மோசடியைக் கண்டுபிடிக்கும் அபிநயாவின் காதலராக, குமார் கேரக்டரில் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். அடுத்து, ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவியின் லவ்வராக வந்து கவனம் ஈர்த்தார்.
 இதேபோல் மலையாளத்தில், ‘ஹிருதயம்’ படத்தில் செல்வா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தவிர, தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்யப்படும் பல படங்களுக்கு நம் ஹீரோக்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருபவரும் கலேஷ்தான். இப்போது நடிகராக ஜொலிக்கிறார். இத்துடன் சென்னை ‘கூத்துப்பட்டறை’, ‘ஏவம்,’ ‘ஓவியம்’ போன்ற முக்கியமான நாடகக் குழுக்களால் வார்த்தெடுக்கப்பட்ட இளைஞர் என்ற அடையாளமும் கலேஷிற்கு உண்டு.

‘‘நான் பிறந்தது வளர்ந்த தெல்லாம் கேரளாவிலுள்ள ஆலப்புழா. அப்பா ராமானந்த் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா ரமாவுக்கு சென்னை. இப்ப ஆலப்புழாவும், சென்னையும் என் இரு ஊர்களாக இருக்குது. ஆனாலும் எங்கள் பூர்வீக ஊர் பாலக்காட்டிலுள்ள மங்களம் கிராமம்...’’ என அத்தனை தெளிவாக தமிழில் பேசும் கலேஷிற்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வமாம்.  ‘‘நான் ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பவே நாடகம் பண்ணிட்டிருந்தேன். ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தெல்லோ’, ‘மெக்பத்’ நாடகங்கள் எல்லாம் மேடையில் போட்டிருக்கோம். குரல் இல்லாமல் வெறும் ஆக்டிங் மட்டுமே இருக்கும் மைம் நாடகங்களும் அரங்கேற்றியிருக்கோம். எஞ்சினியரிங் படிக்கும்போது நிறைய கல்ச்சுரல்ஸ்ல நாடகம் பண்ணினேன். அப்ப நிறைய நண்பர்கள் இருந்தாங்க. பாராட்டுகளும் நிறைய கிடைச்சது. அப்போதிலிருந்தே சினிமாதான் மனசில் இருந்தது. வீட்டில் அப்பா, அம்மாகிட்ட சொன்னேன். முதல்ல டிகிரி, அப்புறம் சினிமானு கண்டிஷன் போட்டாங்க. ஏனெனில், என் அண்ணன் பிரசாந்த் நல்லா படிச்சு இப்ப அமெரிக்காவில் ஃபேமிலி யோடு செட்டிலாகிட்டார். அதனால், படிப்பு முக்கியம்னு அப்பாவும் அம்மாவும் வலியுறுத்தினாங்க. இருந்தும் சினிமா மீதான நாட்டம் குறையல.
ஆனா, எனக்கு சினிமா ஃபீல்டுல யாரையும் தெரியாது. அப்பா, அம்மாவுக்கு சினிமா பத்தியே தெரியாது. இதனால் ரொம்ப பயந்தாங்க. ஒருவழியாக பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். அப்படியே சென்னைக்கு வந்திட்டேன்...’’ என்றவர், சினிமா சான்ஸ் தேடி நிறைய அலைந்திருக்கிறார்.
‘‘அம்மா ஊர் சென்னைங்கிறதால மாமா வீட்டில் தங்கிக்கோனு சொன்னாங்க. வீட்டுல அம்மா தமிழ்லதான் பேசுவாங்க. அப்படியாக நானும் மலையாளம் கலந்த தமிழ்ல பேசுவேன். சென்னை வந்ததும் ‘கூத்துப்பட்டறை’ முத்துசாமி சாரை சந்தித்து அங்க பயிற்சி எடுத்தேன். அவர்தான் தமிழ்ல எழுத, படிக்க நல்லா கத்துக்கோனு ஊக்கப்படுத்தினார். அப்படியாக தமிழ் நல்லா கத்துக்க ஆரம்பிச்சேன். இப்ப தமிழ் ஸ்கிரிப்ட்டை முழுவதும் படிக்கிற அளவுக்கு தேர்ந்துட்டேன். அப்புறம், ‘ஏவம்’ தியேட்டர் குரூப்னு சென்னை ஆர்.ஏ.புரம்ல இருக்கு. இங்க கார்த்திக்குமார்னு ஆக்டர் இருக்கார். இவரின் ‘ஏவம்’ குரூப்பின் பயிற்சிப் பட்டறையிலும் பயிற்சி எடுத்தேன். பிறகு நடிகை கலைராணி மேடத்திடமும் பயிற்சி எடுத்தேன்.
அப்புறம் மியூசிக் டைரக்டர் ஏ.ஆர்.ரஹ்மான் சார், கே.எம் மியூசிக் காலேஜ்னு அரும்பாக்கத்தில் வச்சிருந்தார். மியூசிக் பத்தி தெரிஞ்சிக்க அந்த காலேஜில் சேர்ந்தேன். இது ஒரு வருட கோர்ஸ். இதன்மூலம் பையன் ஏ.ஆர்.ரஹ்மான் காலேஜ்ல படிக்கிறான்னு வீட்டுல நம்பிக்கை ஏற்படும்படி செய்தேன். இந்தக் கோர்ஸ் முடிஞ்சதும் கூத்துப்பட்டறைக்கும், ஏவம் குரூப்பிற்கும் போய் ரிகர்சல் பண்ணிட்டே இருந்தேன். ஏதாவது ஒரு சிறு வாய்ப்பு கிடைக்காதானு தேடி அலைஞ்சேன். பிறகு மும்பை போய் ஒரு இந்தி தியேட்டர் குரூப்ல ஆறு மாசம் இருந்தேன்.
மறுபடியும் சென்னைக்கு வந்தேன். இங்க நாடகக்குழுக்களுடன் நடிக்கிறதும், சான்ஸ் தேடுறதுமா வாழ்க்கை போச்சு. அப்புறம், குறும்படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்ப, ‘குஞ்சனந்தண்டே கடா’னு மம்மூட்டி சார் நடிச்ச படத்துல ஒரு சின்ன ரோல் கிடைச்சது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினேன். அடுத்து, ‘தனி ஒருவன்’ படத்துல ஒரு ரோல் வந்தது. முதன்முதலில் குமார் என்கிற கேரக்டரில் டயலாக் பேசி நடிச்சபடம் அது. எனக்கு பாராட்டுகளும் கிடைச்சது.
ஆனா, இதன்பிறகு எந்த படமும் அமையல. அப்ப என் வாய்ஸ் நல்லாயிருக்குனு சொன்னாங்க. அதனால், டப்பிங் ட்ரை பண்ணினேன். முதல்ல ‘சுட்டி டிவி’யில் தமிழ் கார்ட்டூனுக்கு வாய்ஸ் கொடுத்தேன்.அடுத்து மலையாளத்தில் ‘கொச்சு டிவி’யிலும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தேன். அப்படியாக தமிழ்ல இருந்து மலையாளம் செல்லும் படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் வாய்ப்பு அமைஞ்சது.
‘ஈஸ்வரன்’ படத்தின் மலையாள மொழியாக்கத்தில் சிம்பு சாருக்கு வாய்ஸ் கொடுத்தேன. அடுத்து, ‘கத்தி சண்டை’ படத்துல விஷால் சாருக்கு வாய்ஸ் தந்தேன். 2015ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை ஆறு வருஷங்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும், தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் பயணமானேன்.
நடிகர்கள் ஜீவா, ஆர்யா, சந்தானம், விக்ரம்பிரபுனு பலருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கேன். இப்பவரை இருநூறு படங்களுக்கு மேல் டப்பிங் பேசிட்டேன். அப்பெல்லாம் நம்ம குரல் நடிக்குது. நாம் எப்ப நடிக்கப் போறோம்கிற ஆதங்கம் மனசில் இருக்கும். அப்புறம், ‘ஹிருதயம்’ மலையாளப் படத்தின் வாய்ப்பு வந்தது.
அதுல நல்ல கேரக்டர். அது என்னை நிறைய கவனிக்க வச்சது. அடுத்து ‘கார்கி’ படத்துல சாய் பல்லவியின் காதலனாக வருவேன். இதுவும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதனால், மம்முட்டி சாருடன், ‘கிறிஸ்டோபர்’ படத்திலும், மோகன்லால் சாருடன் ‘நெரு’ படத்திலும் நடிக்க வாய்ப்பு அமைஞ்சது. இந்தப் படங்களும் நல்ல பெயரை வாங்கித் தந்தன.
இப்ப, ‘காதல் என்பது பொதுவுடைமை’ கவனிக்க வச்சிருக்கு. இந்தப் படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் சாரை 2014ம் ஆண்டே தெரியும். நானும் அவரும், ஒரு ஷார்ட் பிலிம்ல சேர்ந்து நடிச்சோம்.
அப்போதிலிருந்து நல்ல பழக்கம்.அவர், ‘லென்ஸ்’ படம் இயக்கும்போதே மெயின் ரோலுக்கு என்னை கூப்பிட்டார். டெஸ்ட் ஷூட்ல எட்டு வயசுப்பெண்ணுக்கு அப்பாவாக பண்ணிப் பார்த்தார். அப்ப நான் கொஞ்சம் யங்காக இருந்தேன். அதனால், ‘சார் நீங்களே நடிக்கலாமே’னு சொன்னேன். அப்படியாக அந்த ரோலை அவர் பண்ணினார்.
அடுத்து, ‘தலைக்கூத்தல்’ படத்திலும் என்னை நடிக்க கேட்டார். பிறகு அந்த ரோலை நடிகர் கதிர் பண்ணினார். இப்ப கடைசியாக, ‘காதல் என்பது பொதுவுடைமை’ ரவீந்திரா கேரக்டர்தான் சரியாக அமைஞ்சது.
இதிலும் அவர், ‘நீ பண்றியா’னு கேட்டதும், ‘சார் ஒர்க்அவுட் ஆகுமா’னு கேட்டேன். நான் தயாரிப்பாளர்கிட்ட பேசிட்டேன். அவரும் ஓகே சொல்லிட்டார்னு சொன்னார். நல்லவேளை நான் நடிச்ச, ‘ஹிருதயம்’, ‘கார்கி’, படங்களை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பார்த்திருந்தார். இந்தப் படத்தில் நானும் லிஜோமோல் ஜோஸும், அனுஷாவும் சேர்ந்து நடிச்சோம். வினீத் சார், ரோகினி மேடம்னு எல்லோர் கூடவும் சேர்ந்து நடிச்சது பெருமையாக இருக்கு...’’ என்றவர், தொடர்ந்தார்.
‘‘இதன்பிறகு ஊர்வசி மேடம் தயாரிச்ச ‘எல்.ஜெகதம்மா’ என்ற படத்தில் நடிச்சேன். இதுல ஊர்வசி மேடமும் நானும் லீட் ரோல் பண்ணியிருக்கோம். அடுத்து ‘பேசஸ்’ படத்தில் ஹீரோவாக நடிச்சிருக்கேன்.
இதே டைம்ல ‘காதல் என்பது பொதுவுடைமை’ வந்து பெயர் வாங்கித் தந்தது.இப்ப நிறைய படங்கள்ல நடிக்க வாய்ப்பு வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நானும் நிறைய கதைகள் கேட்டுக்கிட்டே இருக்கேன். நல்ல கதையா தேர்ந்தெடுத்து நடிக்கணும் என்பதே என் ஆசை...’’ என முத்தாய்ப்பாய் சொல்கிறார் கலேஷ் ராமானந்த்.
ஆர்.சந்திரசேகர்
|