Must Watch
 ரேகசித்திரம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப் படம், ‘ரேகசித்திரம்’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. சூதாட்டப் பழக்கத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி விவேக், மீண்டும் பணிக்குத் திரும்புகிறார். முதல் வழக்கே ஒரு தற்கொலையைப் பற்றியது. 1985ல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓர் இளம் பெண்ணைப் புதைத்துவிட்டதாக முகநூலில் லைவ்வில் வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார் ராஜேந்திரன்.
அவர் தற்கொலை செய்துகொண்ட இடத்துக்கு அருகில் , விவேக் தலைமையிலான போலீஸ் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறது. ஒரு பெண்ணின் எலும்புக்கூடும், முக்கியமான தடயமும் கிடைக்கிறது. இறந்துபோன அந்த இளம் பெண் யார்? எதற்காக அந்தப் பெண் கொலை செய்யப்பட்டாள்? கொலையாளிகளை விவேக் கண்டுபிடித்தாரா போன்ற கேள்விகளுக்குத் திரில்லிங்காக பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
சமீப நாட்களில் மலையாளத்திலிருந்து ஏராளமான கிரைம்திரில்லர் படங்கள் வெளிவந்தன. அதில் தனித்து நிற்கிறது இந்தப் படம்.ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுவாரஸ்யத்தை அப்படியே தக்க வைத்திருக்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் ஜோபின் டி. சாக்கோ.
அன்ஸ்டாப்பபிள்
சமீபத்தில் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளி வரும் ஆங்கிலப் படம் , ‘அன்ஸ்டாப்பபிள்’. இப்படம், அந்தோணி ரோபிள்ஸ் எனும் மல்யுத்த வீரரின் நிஜ வாழ்க்கையைத் தழுவியது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோணிக்கு பிறக்கும்போதே வலது கால் இல்லை.
சிங்கிள் மதரின் அரவணைப்பில் ஒரு கால் இல்லாமல் வளர்கிறான் சிறுவன் அந்தோணி. உடல் ரீதியான சவாலும் மற்றும் சமூகத்தில் காட்டப்படும் பாரபட்சமும் அந்தோணியின் மனதை வலிமையாக்குகிறது.
பள்ளியில் படிக்கும்போது அந்தோணிக்கு மல்யுத்தம் அறிமுகமாகிறது. பள்ளியின் மல்யுத்த அணியில் சேர விரும்புகிறார். ஆனால், சக மாணவர்களும், பயிற்சியாளரும் அந்தோணிக்கு மல்யுத்தம் சரிப்பட்டு வருமா என்று சந்தேகிக்கின்றனர்.
அந்த சந்தேகத்தை உடைத்து தனது திறமையை நிரூபிக்கிறார் அந்தோணி. பள்ளி முடிந்து, கல்லூரிக்குச் சென்று, அங்கேயும் சவால்களைச் சந்தித்து, மல்யுத்தத்தில் முத்திரை பதிக்கும் அந்தோணி எப்படி மல்யுத்தத்தில் தவிர்க்க முடியாத வீரராக மாறினார் என்பதே மீதிக்கதை.
விளையாட்டில் வெற்றி பெற உடல் வலிமையைவிட, மன உறுதியே முக்கியம் என்பதை வலியுறுத்தும் அந்தோணியின் வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் வில்லியம் கோல்டன்பெர்க். நடானியன்
‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப் படம், ‘நடானியன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. தெற்கு தில்லியில் வசித்து வரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், பியா. பதின்பருவத்துக்குரிய அனைத்து ஆசைகளையும் கொண்ட பெண்.
பெரிய பணக்காரக் குடும்பமாக இருந்தாலும், எது கேட்டாலும் கிடைக்கும் என்றாலும் கூட மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கிறாள் பியா. ஆணாதிக்கம் மிகுந்த பியாவின் தந்தை, அம்மாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் வீட்டில் பியாவுக்கு அமைதியே இல்லை. வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் பியாவின் பள்ளி வாழ்க்கையிலும் குறுக்கீடு செய்கிறது.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்ற மாணவனிடம் வாரத்துக்கு ஒரு தொகையைக் கொடுத்து தனது பாய் ஃபிரண்டாக இருக்கச் சொல்கிறாள் பியா. மகிழ்ச்சியான குடும்பப் பின்னணியிலிருந்து வருகின்ற அர்ஜுன், பெற்றோருடன் நெருக்கமாக இருக்கிறான்.
பியாவுக்கும், அர்ஜுனுக்கும் இடையிலான உறவு என்னவாகிறது என்பதே மீதிக்கதை. பதின்பருவத்தின் பல்வேறு பக்கங்களை ரொமான்டிக் காமெடி கலந்து சொல்லியிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் சௌனா கௌதம். தண்டேல்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப் படம், ‘தண்டேல்’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. திறமையான மீனவன் ராஜு. சத்யாவுடன் தீவிரமாக காதலில் இருக்கிறான்.
ராஜுவுக்கு கடலும், சத்யாவும் இரண்டு கண்கள். இந்நிலையில் ராஜுவிடம் கடலுக்குப் போய் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சொல்கிறாள் சத்யா. தனது காதலியின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டு, கடலுக்குச் செல்கிறான் ராஜு. எதேச்சைதாக பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் சென்று விடுகிறான் ராஜு. அவனை பாகிஸ்தானின் காவல்துறையினர் கைது செய்துவிடுகின்றனர். பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட ராஜு விடுதலை செய்யப்பட்டானா? ராஜுவும் சத்யாவும் இணைந்தார்களா என்பதை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறது திரைக்கதை.
ஏழு வருடங்களுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை, தனது எல்லைக்குள் புகுந்துவிட்டதாகச் சொல்லி பாகிஸ்தானிய படை பிடித்துச் சென்றது.
இந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நாசைதன்யாவும், சாய் பல்லவியும் முக்கியமான கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் சந்தூ கொண்டேட்டி.
தொகுப்பு: த.சக்திவேல்
|