24 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றிய தங்கக் கை மனிதன்!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக டிரெண்டான ஒரு பெயர், ஜேம்ஸ் ஹாரிஸன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இரத்த தானம் செய்து, கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியவர் இவர். மட்டுமல்ல, இவரது இரத்தம் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. யார் இந்த ஜேம்ஸ் ஹாரிஸன்?  ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஜுனீ எனும் நகரில், 1936ம் வருடம் பிறந்தார், ஜேம்ஸ் கிறிஸ்டோபர் ஹாரிஸன். சிறு வயதிலிருந்தே அவருக்கு ஊசி என்றால் பயம்.
இந்த பயத்துக்கு நடுவில்தான் அவர் இரத்த தானமே செய்திருக்கிறார். ஜேம்ஸுக்கு 14 வயதாக இருந்தபோது, நெஞ்சுப்பகுதியில் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்காக அவரது உடலுக்குள் புதிய இரத்தம் ஏற்றப்பட்டது. இந்த இரத்தத்தை யாரென்றே தெரியாத சிலர் தானம் செய்திருந்தனர்.
இந்த நிகழ்வு ஜேம்ஸுக்குள் ஒரு புதிய வெளிச்சத்தை உண்டாக்கியது. ஆம்; உடல் நலம் சீரான பிறகு தனக்குக் கிடைத்ததைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரத்த தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், 18 வயது நிரம்பியவர்கள்தான் இரத்த தானம் செய்ய முடியும் என்று ஆஸ்திரேலியாவில் சட்டம் இருந்தது. 14 வயதான ஜேம்ஸ், 18 வயது வரை காத்திருந்தார்.
முதல் முறையாக 1954ல் இரத்த தானம் செய்தார். மூன்று, நான்கு முறை இரத்த தானம் செய்த பிறகே, ஜேம்ஸின் இரத்தம் வலிமையாகவும், அசாதாரணமான நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்ததாகவும் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தச் சிவப்பணு சிதைவு நோயிலிருந்து தடுக்கும் எதிர்ப்பாற்றல் ஜேம்ஸின் இரத்த பிளாஸ்மாவில் இருந்தது. இரத்தம் மட்டுமல்லாமல், பிளாஸ்மாவையும் தானம் செய்ய ஆரம்பித்தார்.
இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என்று அவரது இரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் தொடர்ந்தது. 2011ல் தனது 1000வது இரத்த தானத்தை செய்தார் ஜேம்ஸ். கடந்த 2018ம் வருடம் மே 11ம் தேதி 1,173வது இரத்த தானத்தைச் செய்தார். அப்போது அவரது வயது 81. ஆஸ்திரேலியாவின் சட்டப்படி 81 வயதுக்கு மேல் இரத்த தானம் செய்ய அனுமதியில்லை. அதனால் 1,173வது தானத்துடன் நிறுத்திக்கொண்டார் ஜேம்ஸ்.
ஜேம்ஸின் அரிய பிளாஸ்மா 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. இவரது பிளாஸ்மாவுக்கு இருந்த அசாதாரணமான எதிர்ப்பு சக்தி, பல்வேறு நோய்களிலிருந்து பிறந்த குழந்தைகளைப் பாதுகாத்திருக்கிறது. இதில் இவரது பேரன்களும், பேத்திகளும் கூட அடக்கம். மட்டுமல்ல, இவரது இரத்தம் கர்ப்பிணி பெண்களுக்கும் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, அவருக்குச் செலுத்தப்பட்ட புதிய இரத்தத்தால் இந்த அசாதாரணமான எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, தனது 88வது வயதில் மரணமடைந்தார் ஜேம்ஸ். ‘தங்கக் கை கொண்ட மனிதன்’ என்று உலகம் முழுவதும் ஜேம்ஸுக்குப் புகழஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. த.சக்திவேல்
|