இனி சட்டம் படிக்காமல் வக்கீலாகலாம்... வெளிநாட்டினரும் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம்!
இந்திய வழக்குரைஞர்களுக்கு ஆப்பு வைக்கிறதா பாஜக?
பொழுது விடிந்தால்போதும். இந்தியாவுக்கு ஏதோ ஒரு பிரச்னை தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கும்.
 சென்றவாரம் இந்தித் திணிப்பு. இந்தவாரம் தொகுதி மறுசீரமைப்பு. அடுத்தவாரம் என்னவாக இருக்கும்?
அடுத்தவாரம் இல்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் மற்றும் ஒரு பிரச்னை தலைதூக்கலாம் என ஆருடம் சொல்கிறார்கள் நிபுணர்கள். அதுதான் ‘அட்வகேட் ஆக்ட்’ எனப்படும் வழக்குரைஞர்களுக்கான சட்டம்.  இந்தச் சட்டத்தில்தான் அரசு சில திருத்தங்களை கொண்டுவர உள்ளதாகவும்; ஆனால், சம்பந்தப் பட்ட துறைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே இந்தச் சட்டம் கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லும் சட்ட நிபுணர்கள் இந்தச் சட்டமும் மற்ற சட்டத் திருத்தங்கள் மாதிரியே விரைவில் நிறைவேறிவிடும் என சத்தியம் செய்கிறார்கள்.
அட்வகேட் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தச் சட்டம் இந்தியாவில் 1965ல் கொண்டுவரப்பட்டது. இதுதான் இந்தியாவில் செயல்படும் வழக்குரைஞர்களை கட்டுப்படுத்தும் சட்டம். இது தவிர மாநில அளவில் செயல்படும் வழக்குரைஞர்களின் அமைப்பான ‘பார் கவுன்சிலின்’ செயல்களைக்கூட இந்தச் சட்டம்தான் வரையறுக்கிறது.
இத்தோடு ஒன்றிய அளவில் இருக்கும் ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’ எனும் வழக்குரைஞர்களின் அமைப்பையும் கட்டுப்படுத்துகிறது. இனிமேல் இந்த அட்வகேட் சட்டத் திருத்தம் வழக்குரைஞர்களை மட்டுமல்லாமல் வழக்குரைஞர்களின் கூட்டு அமைப்புகளான பார் கவுன்சில்களின் செயல்பாட்டிலும் பெரிய பாதிப்பைக் கொண்டுவரும் என விமர்சிக்கிறார்கள் சட்ட நிபுணர்கள். இந்தச் சட்டம், சட்டத் திருத்தம், அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞரான பிரசாத் ராஜேந்திரனிடம் கேட்டோம். ‘‘இந்தச் சட்டத் திருத்தம் மூலம் ‘அட்வகேட்’ என்ற சொல்லே இனிமேல் காணாமல் போய்விடும். காரணம், இனிமேல் ‘லா ஃபேர்ம்ஸ்’ (law firms) அதாவது ‘சட்ட நிறுவனம்’ எனச் சொல்லி ஒரு வியாபார நிறுவனம் போல் யார் வேண்டுமானாலும் ஒரு சட்ட நிறுவனத்தை தொடங்கி நீதிமன்றங்களில் வாதிடலாம். இதனால் சட்டம் படித்து வழக்குரைஞர்களாக வேண்டிய தேவை இருக்காது.
இதுவரை இந்தியாவில் சட்ட நிறுவனங்களே இல்லையா எனக் கேட்கலாம். இருக்கிறது. ஆனால், சட்ட நிறுவனமாக அவை இந்தச் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தனிப்பட்ட வழக்குரைஞர்கள்தான் அரசிடம் தொழிலுக்கான உரிமையை வைத்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட இதுபோன்ற நிறுவனம் இனி அட்வகேட் என பொதுப்படையாக பதிவு செய்யும்போது அதில் சட்டம் படித்த வழக்குரைஞர்கள்தான் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் யாரும் நீதிமன்றத்துக்கு வந்து வாதிடலாம்.
சட்ட நிறுவனம், அதில் வழக்குரைஞர்கள் இல்லாமல்போவது என்பவற்றால் இனிமேல் பாதிக்கப்படப்போவது வழக்குரைஞர்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களும்தான்.
இவர்கள்தானே பல்வேறு சட்டப் பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடுவது..? தனியார் சட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வாதாடுகிறது என்றாலே அதில் சாதாரண ஏழைகள் எப்படி பணம் செலவழித்து தங்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்...’’ என்று கேட்கும் பிரசாத், இந்திய சட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள்கூட இனிமேல் வழக்குரைஞராக இந்தியாவில் பதிவு செய்யலாம் என்கிறார்.
‘‘உள்ளூர் சட்ட நிறுவனங்கள் மாதிரியே வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கும் இந்தியாவில் செயல்பட இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்யும். இது மேலும் சட்டத்தை கார்ப்பரேட் மயமாக்கவே செய்யும் என உறுதியாகச் சொல்லலாம். இந்தியாவில் சட்டத் தொழிலுக்கான உரிமையை தனிப்பட்ட வழக்குரைஞருக்கு வழங்குவது ஒன்றிய அரசில் இருந்த ‘இந்திய பார் கவுன்சில்’ (Bar Council Of India - BCI) எனும் ஒரு சுயேச்சையான அமைப்பு.
ஆனால், இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் உள்நாட்டு சட்ட நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்குத் தொழில் செய்ய உரிமம் கொடுப்பது இந்த பார் கவுன்சிலாக இருக்காது. நேரடியாக ஒன்றிய அரசின் அனுமதியே போதுமானதாக இருக்கும் என்று பரிசீலனையில் இருக்கும் இந்த அட்வகேட் சட்டத் திருத்தம் சொல்கிறது. இது எல்லாம் பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும் செயல்...’’ என அழுத்தமாகச் சொல்லும் பிரசாத் மேலும் இந்த அட்வகேட் சட்டத் திருத்தத்தின் பிரச்னைகளை விளக்கினார்.
‘‘சட்டத் திருத்தம் ஏற்கப்பட்டால் இனிமேல் வழக்குரைஞர்கள் போராட்டம், அர்த்தால், ஊர்வலம் என எந்தவிதமான எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபடமுடியாது. இந்தியாவில் ‘ரைட் டு ப்ராடஸ்ட்’ எனும் ஒரு சட்டமே போராடுவதற்கான உரிமையை மக்களிடம் கொடுத்திருக்கும்போது வழக்குரைஞர்கள் மட்டும் போராடக்கூடாது என்பதெல்லாம் மனித உரிமைக்கு எதிரானது.பார் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது உச்சநீதிமன்றத்துக்கு அடுத்து இந்திய சட்டங்களைக் காக்கும் ஓர் அமைப்பு. இந்த கவுன்சில்தான் இந்தியாவில் சட்டக் கல்வியை வகுக்கும் - கண்காணிக்கும் அமைப்பு.
ஆனால், புதிய சட்டத் திருத்தம் பார் கவுன்சிலையே ஒழிக்கும்படியாக வெளியிலிருந்து ஒரு கமிட்டியை கொண்டுவர இருக்கிறது. இந்தியாவில் மாநில அளவில் பார் கவுன்சில்கள் உள்ளன. இந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான் ஒன்றிய அளவில் இருக்கும் பார் கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்தெடுப்பர்.
ஆனால், அரசு ஒன்றியத்தில் உள்ள பார் கவுன்சிலில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை உள்ளே புகுத்தும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குரலுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். மொத்தத்தில் இந்திய பார் கவுன்சில், அதன் அடிப்படையான மாநில பார் கவுன்சில்களுக்கு எல்லாம் இனிமேல் வேலையே இல்லாமல் போய்விடும். இனிமேல் வழக்குரைஞர்களின் உரிமையை எல்லாம் இந்த நியமன உறுப்பினர்கள் அபகரித்துக் கொள்வார்கள்.
மொத்தத்தில் இந்தியாவில் சட்டத் தொழிலே காணாமல்போய்விடும். அதற்கும் ஒரு திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். இனிமேல் சட்டத் தொழிலை, ‘தொழில்’ எனச் சொல்லாமல் சேவை என வரையறுக்கச் சொல்கிறது இத்திருத்தம். இது வழக்குரைஞர்கள் மேலேயே வழக்குகள் பாய்வதற்கான வாய்ப்பையும் வழங்கிவிடும்...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் பிரசாத்.
செய்தி: டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|