மணமகள்..!



கடந்த வாரம் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல பாடி பில்டரும் உடற்பயிற்சி பயிற்சியாளருமான சித்ரா புருஷோத்தம், தனது தனித்துவமான திருமண புகைப்படங்களால் இணையத்தையே அலறவிட்டார்.  உண்மையில் இப்படியொரு வெட்டிங் போட்டோகிராபியை இதுவரை இதற்குமுன் யாரும் கண்டிருக்கமாட்டார்கள். 
ஏனெனில், இதில் ரவிக்கை அணியாமல் காஞ்சிபுரம் சேலையைக் கட்டியபடி, கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு, பாடி பில்டிங் போட்டியில் நிற்பதுபோல கைகளின் புஜங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார் சித்ரா புருஷோத்தம்.

இதனாலேயே இந்த வெட்டிங் போட்டோகிராபி வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் அத்தனை வைரலாகிவிட்டன. கிட்டத்தட்ட எழுபது லட்சம் பேருக்கும் மேல் இந்த வீடியோவை இணையத்தில் ரசித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே சித்ரா புருஷோத்தமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டோகிராபி வைரலாக, மேலும் பலர் பார்த்துள்ளனர். 

இந்தியாவில் பாடி பில்டிங் என்பது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு விளையாட்டாக இருந்துவருகிறது. இதில் பெண்களும் ஜொலிக்கலாம் என தொடர்ந்து உடலை மேருகேற்றி பாடி பில்டிங்கில் அசத்தி வருபவர் சித்ரா புருஷோத்தம்.

அதுமட்டுமல்ல. உடல் வலிமைக்கு பாலினம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்தும் வருபவர். ஆண்களைப் போல பெண்களும் பாடி பில்டிங்கில் சிறக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் பாடிபில்டிங் துறைக்குள்ளேயே வந்தார். பின்னர் நம்பிக்கையுடன் நன்கு பயிற்சியெடுத்தார். இதனால், ஃபிட்நெஸ் மற்றும் ஃபேஷனில் மிஸ் இந்தியா ஃபிட்நெஸ், மிஸ் சௌத் இந்தியா, மிஸ் கர்நாடகா, மிஸ் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு டைட்டில்களை வென்றார்.

அப்படியாக உடல்நலம் மற்றும் நல்வாழ்வு சார்ந்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார். அவர் தரும் உடற்பயிற்சி குறிப்புகளும் ஆலோசனைகளும் பலருக்கு நேர்மறையான சிந்தனைகளையும் கொடுத்தன.சமீபத்தில் அவர் தனது காதலரான கிரண்ராஜை கரம்பிடித்தார். அதற்காக எடுக்கப்பட்ட வெட்டிங் போட்டோகிராபி ஷூட்டில்தான் இப்படியான போஸ்களைக் கொடுத்துள்ளார்.

பி.கே