குடும்பமாக பார்க்கலாம்... ஆனால், குழந்தைகள் பார்க்க முடியாது!
கொஞ்சம் குழப்பமான பெருசு இவரு!
‘சார் நான் ஒன்னு சொல்லட்டுமா? செத்தா உங்க அப்பன மாதிரி சாகனும் சார். மாஸ்...’ டீசரிலேயே புருவத்தை உயர வைக்கிறது ‘பெருசு’. வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் நடிப்பில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளங்கோ ராமு இயக்கியிருக்கும் ‘பெருசு’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தன் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் வழியாக தயாரிக்கிறார்.‘‘குடும்பமா பார்க்கக்கூடிய பக்கா காமெடி படம். ஆனா, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான்...’’ எடுத்த எடுப்பிலேயே பேச்சில் பொடி வைக்கிறார் வைபவ்.
 ‘பெருசு’?
இரண்டு உதவாக்கரை பிரதர்ஸ், அவங்க அப்பாவுடைய மரணம். அந்த மரணத்தில் சொல்ல முடியாத ஒரு குழப்பம் நடக்குது. அதன் பின்னர் அப்பாவுக்கான இறுதிச் சடங்கு முடிஞ்சதா இல்லையா என்பது மீதிக் கதை. ஆனால், கதையாக அது என்ன பிரச்னை, முழுக் கதை என்ன அப்படின்னு சொல்ல முடியாது. காரணம் அந்த ஒன்லைனில்தான் மொத்த சுவாரசியமும் அடங்கி இருக்கு.
 உங்க கேரக்டர்..?
ஒரு உதவாக்கரை மகன், பொறுப்பில்லாத புருஷன், அறிவும் கொஞ்சம் கம்மிதான். இப்படியான கேரக்டர்தான் என்னுடையது. என் அண்ணன் சுனில் எனக்கு அண்ணனாகவே இந்த படத்தில் நடிச்சிருக்கார். ஆரம்பத்தில் இந்தக் கதை சொல்லும்பொழுது எனக்கே நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருந்துச்சு.
தமிழ் சினிமா பார்வையாளர்கள் கிட்ட இந்தப் படம் வொர்க் அவுட் ஆகுமா... இப்படி எல்லாம் தோணுச்சு. எதையும் முயற்சி செய்து பார்த்தாதானே ஆடியன்ஸ் பல்ஸ் புரியும்? தமிழ் சினிமாவில் ரொம்ப வித்தியாசமான கதை, அந்த நம்பிக்கையில் இந்த கதைக்கு ஓகே சொன்னேன். இயக்குநர் இளங்கோ ராம்..?
இளங்கோ ராம் இலங்கைக்காரர். ஏற்கனவே இந்தக் கதையை ஒரு மணி நேர குறும்படமாக ‘Tentigo’ என்கிற பெயரில் எடுத்து நிறைய உலக சினிமா விழாக்களில் பாராட்டுக்களும், விருதுகளும் வாங்கியிருக்கார். மேலும் அந்த படம் ஆங்கிலத்திலும் இருக்கு. அந்தக் கதையை தமிழுக்கு ஏத்த மாதிரி அடாப்ட் செய்து உருவாக்கியிருக்கார் இளங்கோ ராம். பக்கா ஃபேமிலி டார்க் காமெடி படம் அப்படின்னு சொன்னா அது இதுதான்.
குடும்பமா செம ஜாலியா பார்க்கலாம்; ஆனா, குழந்தைகள் பார்க்க முடியாது. இந்தக் கட்டுப்பாடே தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசா இருக்கும். இயக்குநர் இளங்கோ ராமை பொறுத்தவரை அவருடைய சிந்தனையும் எண்ணங்களும் உலக அளவில் இருக்கு.
இந்தக் கதையை எந்த மொழிக்கு டப்பிங் செய்தாலும் ரீமேக் செய்தாலும் அப்படியே அந்தந்த ஊருக்கு செட் ஆகும். யாரும் சொல்ல நினைக்கும், பேச நினைக்கும் பிரச்னைகள தைரியமா சமூகத்து முன்னாடி ஜாலியாக பேச வைக்கணும்னு இயக்குநர் நினைக்கிறார். என்னுடைய கரியரில் இந்த படம் நிச்சயம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு... மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க..?
இன்டர்நெட் ட்ரெண்டிங் கேர்ள் நிஹாரிகா இந்தப் படத்தில் எனக்கு மனைவியா நடிச்சிருக்காங்க. தமிழில் அவங்க அறிமுகமாகப் போகிற முதல் படம் இதுதான். அவங்க இல்லாம கருணாகரன், சாந்தினி, ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், முனிஸ்காந்த், கார்த்திக் சுப்புராஜ் சாரோட அப்பா கஜராஜா சார், தனம் அம்மா, தீபா அக்கா... இப்படி ஒரு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க.
மிகப்பெரிய பேனராக கார்த்திக் சுப்புராஜ் சார் வந்தது இந்தப் படத்துக்கு இன்னொரு பலம். புது இயக்குநர்கள், புதுமையான கதைக்கு எப்பவுமே பக்கபலமா ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் நிற்கும். இந்தப் படத்திலும் கார்த்திக் சுப்புராஜ் சார் இறங்கி வேலை செய்திருக்கார். பிரமோஷனிலும் கூட அவரே முன்வந்து பேசுறது படத்துக்கு பெரிய சப்போர்ட்டா இருக்கு.
உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?
‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படமும் டார்க் காமெடி கான்செப்டில் படப்பிடிப்புகள் முடிஞ்சு போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருக்கு. ‘ஆலம்பனா’ படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கு. ‘பெருசு’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு அடுத்தடுத்து இந்த ரெண்டு படங்களும் வெளியாகும்.
ஷாலினி நியூட்டன்
|