ஆஸ்கர் விருதுப் பெற்ற ஆவணப்படம்!
97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி ஸ்டூடியோவில் மார்ச் 3ம் தேதி நடைபெற்றது. ‘அனோரா’, ‘எமிலியா பெரெஸ்’ போன்ற படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன.விஷயம் அதுவல்ல.‘நோ அதர் லேண்ட்’ என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதைப் பெற்றதே... அதுதான் செய்தி.  இது இஸ்ரேலிய அரசால் புலம்பெயரும் ஒரு பாலஸ்தீனிய குடும்பத்தைப் பற்றிய கதையைச் சொல்லும் படம்.இந்த ஆவணப்படத்தை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளர்களான பேசெல் அத்ரா, ஹம்தான் பலால், யுவல் ஆப்ரகாம் மற்றும் ரேச்சல் சோர் ஆகிய நால்வர் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண். 
விருது பெறும் மேடையில் அவர்கள் செய்த செயல்தான் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆம். பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து கவனம் ஈர்த்தனர். காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆஸ்கர் மேடையில் வலியுறுத்தினர்.  இயக்குநர் அத்ரா பேசும்போது, ‘இந்த உலகம் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதி குறித்து யோசிக்க வேண்டும். தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் நான் தந்தையானேன். என் மகளுக்கும் என்னைப் போன்றதொரு வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது. ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படம் நாங்கள் எதிர்கொள்ளும் கடினமான வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு, ஆண்டாண்டு காலமாக அதை அனுபவித்துக் கொண்டே எப்படி எதிர்த்தும் போராடுகிறோம் என்பதையும் காட்டுகிறது’ என்றார். படத்தின் இன்னொரு இயக்குநரான ஆப்ரகாம் பேசும்போது, ‘இந்தப் படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். காரணம் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இணைந்து குரல் கொடுத்தால் அந்தக் குரல் வலுவானதாக இருக்கும்.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். காசா பேரழிவையும், அந்த மக்களின் துயரத்தையும் பார்க்கிறோம். அவர்களின் துயர் முடிவுக்கு வரவேண்டும். அக்டோபரில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.நான் குடிமைச் சட்டத்துக்கு உட்பட்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனால், என்னுடன் இந்தப் படத்தை இயக்கிய பேசெல் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கிறார். அது அவர் வாழ்க்கையை சிதைக்கிறது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எல்லா பிரச்னைக்கும் வேறு ஒரு பாதையில் தீர்வு இருக்கிறது. அது அரசியல் தீர்வு. இன ரீதியிலான ஆதிக்க சிந்தனைகளை விடுத்து எங்கள் இருநாட்டு மக்களுக்குமான உரிமைகளை வழங்கக்கூடிய தீர்வு அதுவே. நாங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை ஏன் உங்களால் யோசிக்க முடியவில்லை? எனது மக்கள் பாதுகாப்பாக இருந்தால், பேசெலின் மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக இருப்பார்கள்’ என்றார்.
இவை எல்லாம் உலக திரைப்பட கலைஞர்கள் மத்தியில் பல்வேறுவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.ஓர் ஆவணப்படத்தை எடுத்தோம்... உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதைப் பெற்றோம்... அடுத்து ஒரு பெரியபடம் எடுப்போம்... பெரும்பணம் சம்பாதிப்போம்... என்று மகிழ்ந்திருக்காமல் உலகம் வேடிக்கை பார்க்கும் ஒரு பெரிய சிக்கலைப் பேசி படைப்பாளிகள் சமூகப் பொறுப்பு மிக்கவர்கள் என்பதை இவர்கள் காண்பித்திருப்பது ஒருசிலரையாவது யோசிக்க வைக்கும் என சமூக செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.
எஸ்.ராஜா
|