இதோ வந்துவிட்டது இ-டேஸ்ட்!இதோ வந்துவிட்டது இ-டேஸ்ட்!



இந்த நிமிடம் புதிதாக இருக்கும் டெக்னாலஜி, அடுத்த நிமிடத்தில் பழையதாக மாறக்கூடிய ஒரு டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். அப்படி புதிது புதிதான டெக்னாலஜிகள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன. 
அந்த வகையில் புது வரவு, இ-டேஸ்ட்.அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளை ஆண்டிப்பட்டியில் இருந்துகொண்டே ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதைப் போல, உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள பேக்கரியில் இருக்கும் கேக்கை, நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் சுவைக்க முடியும். இதற்கு இ-டேஸ்ட் என்று பெயர்.

அமெரிக்காவில் உள்ள ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து இ-டேஸ்ட் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

இ-டேஸ்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியை நம்முடைய வாயுடன் பொருத்த வேண்டும். இக்கருவியில் உள்ள வேதியியல் சென்சார்களும், ஒயர்லெஸ் டிஸ்பென்சரும் நம்முடைய சுவை உணர்வைத் தூண்டும்.

இது நம்மை மகத்தான ஒரு டிஜிட்டல் சூழலுக்குள் அழைத்துச் செல்லும். அங்கே மீன், கேக், சூப் என சகல உணவுகளையும் டிஜிட்டல் முறையில் சுவைக்கலாம்.

எப்படி விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியைக் கண்களில் மாட்டிக்கொண்டால், வேறொரு உலகத்துக்குச் செல்கிறோமோ அதுபோலவே இந்த இ- டேஸ்ட் சுவையும் உண்மைக்கு நிகரான அனுபவத்தை தரும் என்கின்றனர்.

இதுவரை நிறைய முறை இ-டேஸ்ட் கருவியை வைத்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனை செய்துவிட்டனர். உண்மைக்கு நிகரான சுவையைத் தருகிறது என்று 70 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். மீதியிருக்கும் 30 சதவீதமும் வெற்றியடையும் நிலையில் மக்களின் பயன்பாட்டுக்கு இ-டேஸ்ட் வரலாம்.

“சுவையும், வாசனையும் நினைவுகள் மற்றும் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை. எங்களுடைய சென்சார் மூலம் உங்களுக்கு சுவையும், வாசனையும் கடத்தப்படும்...” என்கிறார் இ-டேஸ்ட் தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான லீ. இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய அடிப்படையான ஐந்து சுவைகளையும் இ-டேஸ்ட் மூலம் உணரலாம்.

மட்டுமல்ல, சுவையும், வாசனையும் நமது மூளையின் செயல்திறன், ஞாபகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் இந்த இ-டேஸ்ட் தொழில்நுட்பம் மருத்துவத்துறைக்கும் பயன்
படும் என்கின்றனர் நிபுணர்கள். தவிர, உணவு மாதிரிகளைச் சோதனை செய்யவும், உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற சுவைகள் சரியான விகிதத்தில் இருக்கிறதா என்று சோதனை செய்யவும் இ-டேஸ்ட் பயன்படும்.  

இன்று உலகம் முழுவதும் விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனி விர்ச்சுவல் ரியாலிட்டி பயனாளிகள் விளையாடிக்கொண்டே இ-டேஸ்ட் மூலம் டிஜிட்டலில் பல வகையான உணவுகளைச் சுவைக்கலாம்.

த.சக்திவேல்