தில்லியைக் கலக்கும் வித்தியாசமான தேர்தல் அறிக்கை!



இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கிறபோது தில்லி தேர்தலின் வெற்றி தோல்விகள் ஓரளவு புலப்பட்டிருக்கலாம். ஆனால், தில்லி தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பித்தபோது மிக முக்கியமான கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரம் சூடாகிக்கொண்டிருந்த தருவாயில், தில்லி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் இருந்த பலவகை விலங்கினங்களும் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தில்லிவாசிகளைக் கவர்ந்தன!

அந்தத் தேர்தல் அறிக்கையில் என்ன இருந்தது?

‘ஏர்போர்ட், மருத்துவமனை மற்றும் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் கறிக் கடைகளை எல்லாம் அப்புறப்படுத்தவேண்டும். வண்டி இழுப்பதற்கு எல்லாம் எங்களை பயன்படுத்தக்கூடாது. 
எங்களைக் கொடுமைப்படுத்துபவர்களை அதிகமாக தண்டிக்கவேண்டும்...’இதுமாதிரி சுமார் 30க்கும் மேற்பட்ட வேண்டுகோள்களைப் பட்டியலிட்டு, ‘இதற்கு எல்லாம் ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கே தில்லி மக்கள் வாக்களிக்கவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டது இந்த வித்தியாசமான தேர்தல் அறிக்கை.

சரி... யார் வெளிட்டது இந்த அறிக்கையை? விலங்குகளா?

தில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு முக்கியமான பாடப் பிரிவு சட்டத் துறை. இதில் விலங்குகளுக்கான சட்டப் பிரிவு ஒரு விசேஷமான பிரிவாக இருக்கிறது.இந்தப் பிரிவும் தில்லியில் உள்ள இன்னொரு தன்னார்வ நிறுவனமான ‘பாவ்ஸ்’ (PAWS) என்ற அமைப்பும் இணைந்துதான் இந்த விலங்கு நலத் தேர்தல் அறிக்கையைக் கடந்த டிசம்பர் மாத நடுவில் வெளியிட்டது.

இந்தத் தேர்தல் அறிக்கையை தில்லியில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளிடையே வினியோகித்தது. இத்தோடு இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த அறிக்கையை மக்கள் முன் வைத்தது. இந்தத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வேண்டுகோள்களை செவிமடுக்கும் கட்சிக்குத்தான் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

இதையெல்லாம் கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் என்றைக்காவது இதுமாதிரியான அறிக்கைகள் எதிர்காலத்திலாவது பலன்தரும் என்ற நம்பிக்கையில் இந்த இரண்டு அமைப்புகளுமே இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தன.

சரி... அறிக்கையில் வேறு என்ன இருந்தது?

‘தில்லியில் மோசமான நிலையில் இருக்கும் சுமார் 77 அரசு கால்நடை மருத்துவமனைகளை புத்தாக்கம் செய்யவேண்டும். விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களின்போது உடனடியாக செயல்படக்கூடிய ஆம்புலன்ஸ்கள் இருக்கவேண்டும். விலங்கு வதை, விபத்து, இறப்பை... மக்கள் அரசுக்கும் தன்னார்வலர்களுக்கும் சொல்லக்கூடிய 4 இலக்கத்திலான ஹெல்ப்லைன் நம்பர் வேண்டும்.

தில்லியைச் சுற்றி கழிவுகளைக் கொட்டிக்கொண்டு மோசமான நிலையில் பராமரிக்கப்படும் 2000 சொச்சம் பால்பண்ணைகளை மூடவேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக கறிக்கடைகளில் வெட்டப்படும் விலங்குகளுக்கு தடை கொண்டுவரவேண்டும். விலங்கு இனப்பெருக்கத்துக்காக செயல்படும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவேண்டும்.

விலங்குகள் தொடர்பான அரசு நோய் தடுப்பு க்ளினிக்குகளின் தரத்தை உயர்த்தவேண்டும். பள்ளிப் பாடப் புத்தகத்தில் விலங்கு நலம் தொடர்பான பாடத்தைச் சேர்க்கவேண்டும். விலங்கு நலம் தொடர்பாக மக்களுக்கு பாடம் எடுக்கவேண்டும்... என இந்த லிஸ்ட் இன்னும் சிலவற்றையும் சொல்கிறது. யார் யாரோ தேர்தல் அறிக்கை வெளியிடும் கொடும் காலத்தில் இதுமாதிரியான அறிக்கைகள் காலத்தின் தேவை என்றுதான் சொல்ல வேண்டும்!

டி.ரஞ்சித்