Must Watch



லாங்லெக்ஸ்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை மிரட்டிய திகில் படம், ‘லாங்லெக்ஸ்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது. எழுபதுகளில் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம். மர்மமான குரல் கேட்க, அதைப் பின் தொடர்ந்து செல்கிறாள் ஓர் இளம்பெண். 

விநோதமான ஒப்பனையுடன் ஒருவன் நின்றுகொண்டிருக்க, கதை நிகழ்காலத்துக்கு வருகிறது. அதே நகரத்தில் பல குடும்பங்களில் கொலைகளும், தற்கொலைகளும் நடக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தனது குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கான பின்னணியைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர்.

கொலை நடந்த வீடுகளில் கண்டெடுக்கப்படும் கடிதங்களில் ‘லாங்லெக்ஸ்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் உள்ள கையெழுத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்படவில்லை என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். இதற்குப் பின்னணியில் ஒரு சீரியல் கில்லர்தான் இருக்கவேண்டும் என்று கணிக்கின்றனர். 

‘லாங்லெக்ஸ்’ என்பது மனிதனா அல்லது வேறு ஏதாவதா என்பதை திரில்லிங்காக சொல்லியிருக்கிறது திரைக்கதை. வித்தியாசமான திரில்லிங் அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம். காட்சிகளால் மட்டுமல்லாமல், இசையாலும் மிரட்டியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஆஸ்குட் பெர்கின்ஸ்.

கேள் கேள் மெயின்

‘நெட்பிளிக்ஸி’ல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திப்படம், ‘கேள் கேள் மெயின்’. மூன்று ஜோடிகள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால், ஒவ்வொருவரும் வித்தியாசமான இயல்புகளைக் கொண்டவர்கள். 

ஜெய்ப்பூரில் நடக்கும் ஒரு திருமணத்தில் மூன்று ஜோடிகளும் கலந்துகொள்கின்றனர். மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இருப்பதால் ஒரு விளையாட்டை விளையாட முடிவு செய்கின்றனர். அந்த விளையாட்டின் படி ஆறு பேரின் மொபைல் போன்களை ஓரிடத்தில் வைக்க வேண்டும்.

எந்த போனுக்கு கால் அல்லது மெசேஜ், இ-மெயில் வந்தாலும் மற்ற ஐந்து பேருக்கும் போனுக்கு வந்த கால், மெசேஜ் பற்றிய விவரங்கள் தெரிய வேண்டும்.  ஆரம்பத்தில் நகைச்சுவையாக செல்லும் விளையாட்டு, எப்படி ஒருவரைப் பற்றிய ரகசியங்களை வெளியில் கொண்டு வந்து அதிர்ச்சியடைய வைக்கிறது என்பதே மீதிக்கதை. ‘பர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ எனும் இத்தாலியப் படத்தின் அஃபீஷியல் ரீமேக்தான் இந்தப்படம். அக்‌ஷய் குமார், டாப்ஸி என நட்சத்திரப் பட்டாளம்நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார், முடாசர் அசீஷ்.

நுணக்குழி

கலகலப்பான, ஜாலியான ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘ஜீ5’ தளத்தில் வெளியாகியிருக்கிறது, ‘நுணக்குழி’ எனும் மலையாளப்படம்.

ஒரு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார், எபி. தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது அதை அவரே வீடியோவாக எடுக்கிறார். அலுவலகத்தில் தனது லேப்டாப்பில் அந்த வீடியோவைப் பார்ப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று.

எதிர்பாராத ஒரு நாள் வருமான வரித்துறையினர் எபியின் நிறுவனத்தை சோதனை செய்ய வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரி வீடியோ இருக்கும் லேப்டாப்பை எடுத்துச் சென்றுவிடுகிறார். எப்படியாவது அந்த லேப்டாப்பை திரும்ப வாங்க வேண்டும் என்று அதிகாரியைத் தேடிச் செல்கிறார் எபி. ஆனால், அந்த அதிகாரியோ இயக்குநராக விரும்பும் தனது உறவினருடன் ஒரு நடிகரைச் சந்திக்க செல்கிறார். 

அங்கே நடக்கும் ஒரு மது விருந்தில் கலந்துகொள்கிறார். எபிக்கு லேப்டாப் கிடைத்ததா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.படத்தின் ஆரம்பத்திலிருந்து, இறுதி வரை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

தொகுப்பு: த.சக்திவேல்