அது என்ன Micro RNA?



மருத்துவத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களது கண்டுபிடிப்புகள் என்ன?பேராசிரியர் அம்ப்ரோஸ் (வயது 70) மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியிலும், பேராசிரியர் ருவ்குன் (வயது 72) ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியிலும் பணிபுரிகின்றனர்.

விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் இருவரின் ஆராய்ச்சி, மரபணுக்களில், மைக்ரோ RNA எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இருந்தது. இதனடிப்படையில் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையான திசுக்களால் ஆனது என்பதையும் விளக்க முயற்சிக்கின்றன.மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள DNA-வில் நமது மரபணு சார்ந்த தகவல்கள் இருக்கின்றன.

எலும்பில் உள்ள உயிரணுக்கள், நரம்பில் உள்ள உயிரணுக்கள், தோலில் உள்ள உயிரணுக்கள், இதயத்தில் உள்ள உயிரணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் இந்த மரபணு தகவல்களை வெவ்வேறு சிறப்பு வழிகளில் பயன்படுத்துகின்றன. 

இது எவ்வாறு நடக்கிறது என்பதை விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் இருவரின் ஆராய்ச்சி விளக்க உதவுகிறது.மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, மைக்ரோ RNA உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-க்களின் ஒழுங்குமுறை புற்றுநோய், பிறவி காது கேளாமை, எலும்புக் கோளாறுகள் போன்ற உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையில் முற்றிலும் புதிய முறையை வெளிப்படுத்தியது. இது மனிதர்கள் உட்பட பல உயிரணுக்களால் உருவான உயிரினங்களுக்கு இன்றியமையாதது...” என்று பரிசுக்கு இவர்களைத் தேர்வு செய்த நோபல் சபை கூறியுள்ளது.இவர்கள் இருவருக்கும் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000, இந்திய ரூபாய் மதிப்பில் ₹68,039,873.64) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.  

என்.ஆனந்தி