ஏம்மா மின்னல்... போம்மா மின்னல்..!
கண்களைத் திறந்து பார்ப்பதற்குள் மாயமாக மறையும் அழகுப் பெண்களை ‘என்னம்மா மின்னல்...’ என்று நாம் நையாண்டி செய்வதுண்டு. ஆனால், இந்தியாவில் மின்னல் என்பது அழகு தேவதை மட்டும் அல்ல... மரண தேவதையும்தான் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. உதாரணமாக ‘லைட்னிங் ரெசிலியண்ட் இண்டியா கேம்பேய்ன்’ எனும் மின்னல் குறித்த ஒரு தன்னார்வ அமைப்பு இந்தியாவில் 1967 முதல் 2020 வரைக்கும், அதாவது இந்த ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 53 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 1309 பேர் மின்னல் தாக்கி உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று குண்டைப் போடுகிறது.
இதை வழிமொழியும் வகையில் இந்தியாவின் ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகம்’ இந்தியாவில் இயற்கை சீரழிவுகளால் 8060 இறப்புகள் ஏற்பட்டால் அதில் 2887 இறப்புகள் மின்னல் வெட்டால் இறந்திருக்கின்றனர் என்கிறது. இது மொத்த இறப்பில் 35.8 சதவீதம். இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், நிலச்சரிவு, வெப்பக் காற்றைவிட மின்னல் உயிர்களை மின்னல் வேகத்தில் பறிப்பது அவலமான செய்திதான். சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பிரபாகரனிடம் இதுகுறித்து பேசினோம்.
‘‘‘லைட்னிங் ரெசிலியண்ட்’ ஆய்விலேயே 1967 முதல் 2002 வரை இந்தியாவில் மின்னலால் ஏற்பட்ட மரணங்கள் வருடத்துக்கு சராசரியாக 38 என கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், 2003 முதல் 2020 வரை இந்த மரணம் வருடத்துக்கு சராசரியாக 61 ஆக அதிகரித்திருக்கிறது.
காரணம் க்ளைமேட் சேன்ஜ் எனும் காலநிலை மாற்றம்தான்...’’ என்று சொல்லும் பிரபாகரன் இது குறித்து மேலும் விளக்கினார்.‘‘ஒருகாலத்தில் சூழலியல்வாதிகள் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்ட உயர்வு, புவி வெப்பமயமாதல், மழைப்பொழிவு அதிகரிப்பு, வறட்சி மற்றும் வெப்ப அலைகளில் எப்படி மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று மட்டுமே ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தனர்.
ஆனால், இன்று பருவநிலை மாற்றத்தால் சுனாமி, பூகம்பம், மின்னலுக்கான தொடர்புகளையும் கண்டுபிடித்திருக்கின்றனர். பூமியானது ஒரு டிகிரி வெப்பம் உயரும்போது மின்னல் நிகழ்வானது 12 சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிட்டிருக்கின்றனர்.
உதாரணமாக பூமி வெப்பமாகும்போது நிலத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி காற்றில் கலக்கும். பருவகாலத்தில் மேகங்களில் கலக்கும் இந்த ஈரப்பதம், காற்றிலும் கலந்திருக்கும். மழைக்காக மேகம் சூழ்ந்துகொள்ளும்போது காற்று மேலே செல்ல முயற்சிக்கும். ஈரப்பதமோ கீழே விழ எத்தனிக்கும். இந்தச் சூழ்நிலையில் காற்றும், ஈரப்பதமும் வேறு வேறு திசையில் பயணிக்க முயற்சிக்கையில் மேகத்திலிருந்து மின்னல் உருவாகும். இதில் காற்று பாசிடிவ் எனர்ஜி என்றால், ஈரப்பதம் நெகடிவ் எனர்ஜியாக இருக்கும். இந்த காற்று, ஈரப்பதம் பிரிவுதான் மின்னலாக வெளியாகிறது. இந்த மின்னல் வெடிப்பில் மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதுதான் மரணத்தை ஏற்படுத்துகிறது...’’ என்கிறார் பிரபாகரன்.
மின்னல் நிபுணரான மனோரஞ்சன் மிஸ்ரா என்பவர் செய்த ஓர் ஆய்வின்படி இந்தியாவில் 96 சதவீத மின்னல் மரணங்கள் கிராமங்களில்தான் நிகழ்கிறது என்கிறார். அதிலும் பழங்குடிகள்தான் 68 சதவீதம் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார். இதற்கான காரணங்களை அடுக்கும் மிஸ்ரா மழைக்கான பருவகாலங்களின்போது விவசாயிகள் தங்கள் உடல்களை நீர்நிலைகளில் இருக்கும்படி வைத்துக்கொள்வது, வெட்டவெளிகளில் இருக்கும் மரங்களுக்கு அடியில் மழையில் ஒதுங்குவது, மண் கூரை வீடுகள் மற்றும் மின்னல் அதிகம் வரும் நேரங்களான 12 மணி முதல் 7 மணிவரை பரந்த வெளிகளில் வேலை செய்வது போன்றவைதான் மரணங்கள் அதிகமாக நிகழ்வதற்கான காரணங்களாகச் சொல்கிறார்.
அரசும் மின்னல் தொடர்பாக சில முயற்சிகளைச் செய்தாலும் ‘மழைக்காலங்களில் வெட்டவெளிகளைத் தவிர்ப்பது, ஒருவேளை அங்கே இருந்தாலும் கால்களை ஒட்டவைத்துக்கொண்டு தலையைக் குனிந்தவாறு நிற்பது’ போன்ற பாதுகாப்பு ஆலோசனைகளையும் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
ஆனாலும் மின்னல் தாக்கியவர்களின் உடலில் சாணத்தைத் தேய்த்து மின்சாரம் தாக்கிய உடலின் சூட்டைத் தணிப்பதற்காக பாமரத்தனமான வைத்தியங்களில்தான் கிராமத்தினர் இன்னும் மும்முரம் காண்பிக்கின்றனர். இது அறிவியலா என்று யாரும் சொல்லமுடியாவிட்டாலும் இப்போதைக்கு கிராமத்து விவசாயிகளுக்கு இந்த முரட்டு வைத்தியங்கள்தான் உதவுகின்றன என்பதே உண்மை.
டி.ரஞ்சித்
|