பிறமொழியில் தீபாவளி படங்கள்!



தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத்துணிகள், பலகாரங்களுடன் சேர்ந்து புதிதாக வெளியாகும் திரைப்படங்களும் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி, கன்னடம் என முக்கிய மொழிகளில் எல்லாம் பெரிய நட்சத்திரங்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் எடுத்து தீபாவளியன்று வெளியிடுவதற்காக காத்திருப்பார்கள். 
தீபாவளியன்று ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா திருவிழாவே நடக்கும். ஆனால், இன்று தீபாவளிக்குப் படங்கள் வெளியாவதே பெரிய விஷயமாக இருக்கிறது . அப்படி வெளியாகும் பிற மொழிப்படங்களின் பட்டியல் இதோ...

பஹீரா

தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கன்னடப்படும் இது. ‘கே.ஜி.எஃப்’ புகழ் பிரசாந்த் நீல் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். முரளி, ருக்மிணி வசந்த் நடித்திருக்கும் இப்படத்தை டி.ஆர். சூரி இயக்கியிருக்கிறார். பிரசாந்த் நீல் திரைக்கதையை எழுதியிருப்பதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகம்.

சிங்கம் எகெய்ன்

பாலிவுட்டே பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆக்‌ஷன் படம், ‘சிங்கம் எகெய்ன்’. கடந்த 2010ம் வருடம் ஹரியின் இயக்கத்தில் வெளியான ‘சிங்கம்’ வசூலில் சக்கைப்போடு போட்டது. இப்படத்தை இந்தியில் ‘சிங்கம்’ என்ற பெயரிலேயே ரீமேக் செய்தார் ரோஹித் ஷெட்டி. இந்தியிலும் சக்கைப்போடு போட, ‘காப் யுனிவர்ஸ்’ என்ற ஒரு யுனிவர்ஸை உருவாக்கி ‘சிங்கம் ரிடர்ன்ஸ்’, ‘சிம்பா’, ‘சூர்யவன்சி’ என நான்கு படங்களை இயக்கினார் ரோஹித்.

இந்த வரிசையில் அவர் இயக்கும் ஐந்தாவது படம்தான் ‘சிங்கம் எகெய்ன்’. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார், கரீனா கபூர், தீபிகா படுகோன் என இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோருமே நடித்திருக்கின்றனர். 

சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கான் வருகிறார். நவம்பர் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படம் வெளியாகும் முன்பே ரூ.130 கோடிக்கு  ஓடிடி உரிமையை வாங்கிவிட்டது ‘அமேசான் ப்ரைம்’.

லக்கி பாஸ்கர்

இந்தத் தீபாவளிக்கு வெளியாகப்போகும் முக்கியமான தெலுங்குப் படம் இது. மலையாளம், இந்தி, தமிழிலும் வெளியாகிறது. படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. ஒரு சாதாரண மனிதன் எப்படி பெரிய பணக்காரனாக வளர்கிறான் என்பதை திரில்லிங்காக சொல்லியிருக்கின்றனர். 

முதன்மை கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி நடிக்க படத்தை இயக்கியிருக்கிறார், வெங்கி அட்லூரி. தனுஷ் நடித்த ‘வாத்தி’யை இயக்கியவர் இவர்.  ‘வாத்தி’ முடிந்தவுடன் துல்கர் சல்மானைச் சந்தித்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார் வெங்கி. கதையைக் கேட்கும்போதே துல்கருக்குப் பிடித்துப் போக, உடனே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக வேண்டியது. பல்வேறு காரணங்களால் தீபாவளிக்கு தள்ளிப்போய்விட்டது.

பூல் புலையா 3

பாலிவுட்டில்ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால், அதன் இரண்டாம், மூன்றாம் பாகம் வருவது புதிதல்ல. இதற்கு சமீபத்திய உதாரணம் ‘பூல் புலையா 3’.  கடந்த 2007ம் வருடம் ‘பூல் புலையா’ வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. மலையாளப்படமான ‘மணிச்சித்தரத்தாளு’வை (தமிழில் ‘சந்திரமுகி’) அடிப்படையாக வைத்து, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான இந்திப்படம்தான், ‘ பூல் புலையா’.  

இதன் வெற்றியைத் தொடர்ந்து 2022ம் வருடத்தில் ‘பூல் புலையா2’ வெளியாகி, ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியது. இந்தப் படத்தில் திகில் கதையை, நகைச்சுவையாகச் சொல்லியிருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. 

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி வெளியாகக் காத்திருக்கிறது ‘பூல் புலையா 3’. கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் என முக்கிய மான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இரண்டு ஆவிகளுக்கிடையேயான மோதலை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறது இப்படத்தின் கதை. அனீஸ் பாஸ்மீ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜீப்ரா

இரண்டு பேருக்கு இடையிலான மோதல்தான் ‘ஜீப்ரா’ எனும் தெலுங்குப் படத்தின் மையம். ஃபைனான்சியல் கிரைம் திரில்லர் வகைமையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஈஸ்வர் கார்த்திக். சத்யதேவ், தனஞ்செயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், அம்ருதா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

த.சக்திவேல்