98 வயதில் ஜிம்னாஸ்டிக்!



கடந்த 2012ம் வருடம், மார்ச் 26ம் தேதி. அன்று லீவ்டேஃபி என்ற யூடியூபர் தனது சேனலில் இரண்டு ஜிம்னாஸ்டிக் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோக்களில் ஜோஹன்னா குவாஸ் என்ற பெண்மணி கம்பிகளின் மீதும், தரையிலும் ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அந்த வீடியோக்கள் 6 நாட்களில் 11 லட்சம் பார்வைகளை அள்ளி, வைரலாகின. மட்டுமல்ல, ஜெர்மனி மற்றும் சர்வதேச நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் குவாஸை நேர்காணல் எடுக்க மொய்த்தன.

அத்துடன் ஜெர்மனியின் முதன்மையான ஒரு டாக் ஷோவில் சிறப்பு விருந்தினராக குவாஸ் கலந்துகொண்டார். தவிர, சீனாவைச் சேர்ந்த 188 நாளிதழ்களில் குவாஸைப் பற்றிய செய்திகள் பிரசுரமாகின. அடுத்த சில நாட்களிலேயே அந்த வீடியோக்கள் 20 லட்சம் பார்வைகளைத் தாண்டிவிட்டன.

குவாஸிடம் அப்படியென்ன  ஸ்பெஷல் என்கிறீர்களா?

அந்த வீடியோக்களில் இடம்பெற்ற ஜிம்னாஸ்டிக் சாகசங்களைச் செய்த போது குவாஸின் வயது 86.மட்டுமல்ல, உலகிலேயே அதிக வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற கின்னஸ் சாதனையையும் தன்வசமாக்கினார் குவாஸ். இதுபோக சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சிறப்பு விருது உட்பட ஏராளமான விருதுகள் குவாஸைகௌரவித்தன.

யார் இந்த ஜோஹன்னா குவாஸ்?

ஜெர்மனியில் பிறந்து, வளர்ந்தவர் குவாஸ். சிறு வயதிலிருந்தே துடிப்பான ஒரு குழந்தையாக இருந்தார். ஐந்து வயதிலேயே ஆண் குழந்தைகளுடன் போட்டிபோட்டு கம்பிகளில் ஏறுவது, குட்டிக்கரணம் அடிப்பது, தலைகீழாக நிற்பது என பல வித்தைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். பத்து வயதிலேயே ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகளைத் தன்வசமாக்கினார். குவாஸுக்கு 11 வயதாக இருந்தபோது நாஜி ஜெர்மனி பெண்களை சில வேலைகளில் ஈடுபடுத்தியது.

சிறுமியாக இருந்தபோதே நாஜிப் படைகளால் விவசாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். அவருக்கு சம்பந்தமில்லாத, நாஜிப் படைகளுக்கு வேண்டப்பட்ட குடும்பத்தின் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய வேலையும் குவாஸுக்குக் கொடுக்கப்பட்டது. ஜிம்னாஸ்டிக் விளையாட மட்டுமல்ல, அதைப்பற்றி நினைக்கக்கூட குவாஸுக்கு நேரம் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் வந்தது. போரில் உயிர் பிழைத்திருப்பதே பெரும் சாதனை எனும்போது ஜிம்னாஸ்டிக் மட்டுமில்லை, வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக்கூட குவாஸால் முடியவில்லை. போர் முடிந்தது. 1950களில் விளையாட்டு ஆசிரியையாக பணி செய்ய ஆரம்பித்தார். தவிர, தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். 

குவாஸிடம் பயிற்சி பெற்றவர்கள் ஒலிம்பிக் வரை சென்றனர். குவாஸும் 40 வயதை நெருங்கினார். வயதின் காரணமாக அவரால் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் குவாஸுக்கு ஜிம்னாஸ்டிக் மீதிருந்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை.

தினமும் வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். ஜெர்மனியில் சீனியர் சிட்டிசன்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அறிமுகமாகின. அந்தப் போட்டிகளில் 56 வயதில் கலந்துகொண்டு, முதல் பரிசைத் தட்டினார். அவ்வப்போது ஆச்சர்யமாக நடக்கும் முதியவர்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்துகொண்டு வாகை சூடினார். 

இப்படிச் சென்றுகொண்டிருந்த குவாஸின் சாகசப் பயணத்தைப் பற்றி வெளி உலகுக்கு பெரிதாகத் தெரியாது. 2012ல் யூடியூப்பில் வெளியான அந்த ஜிம்னாஸ்டிக் வீடியோக்கள்தான் குவாஸுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. இப்போதும் குவாஸின் சாகசப் பயணம் தொடர்கிறது. அவரது வயது 98.

த.சக்திவேல்