உலகமே வியக்கும் கிளி தம்பதி!



‘மெய்யழகன்’, ‘சிங்கப்பூர் சலூன்’ படங்களில் காட்டப்பட்டது இவர்கள் வீடுதான்...

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்கிறார் வள்ளுவர். அதாவது கிடைத்ததை பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுதல் தலையான அறம் எனக் குறிப்பிடுகிறார். இந்தக் குறளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால் அது சென்னையைச் சேர்ந்த சுதர்சன் சா, வித்யா தம்பதியினர்தான்.  
குடும்ப வருமானத்தில் எண்பது சதவீதத்தை பல வாயில்லா ஜீவன்களின் உணவிற்காக மட்டுமே செலவழிக்கும் அற்புதமும் ஆச்சரியமும் நிறைந்த தம்பதியினர் இவர்கள். குறிப்பாக, கிளிகளுக்கு இவர்கள் உணவளிப்பதும், அதை உண்ண ஆயிரக்கணக்கான கிளிகள் இவர்கள் வீட்டைத் தேடித் தினமும் வருவதும் அத்தனை வைரல்.

இதனால் சாதாரண சுதர்சன், இப்போது ‘Parrot’ சுதர்சனாக மாறி நிற்கிறார். சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’, ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்களில் சுதர்சன் சா வீடு பிரதானமாகக் காட்டப்பட, அது அவரை இன்னும் கவனப்படுத்திவிட்டது. ‘‘கடந்த பதினைந்து ஆண்டுகளாக நாங்க இந்தச் சேவையை பண்ணிட்டு இருக்கோம். 
ஆனா, இப்ப ஐந்து ஆண்டுகாலமாகவே நிறைய பேருக்குத் தெரிய வந்து வைரலாகிட்டோம். அதோடு என் வீடும், உணவு உண்ண வரும் கிளிகளின் காட்சியும் திரைப்படங்கள்ல வந்ததால் இப்ப பலரும் எங்களை ஆச்சரியமாகப் பார்க்கறாங்க...’’ எனச் சிரித்தபடியே பேசும் சுதர்சனுக்குச் சொந்த ஊரே சென்னைதான்.

‘‘சிந்தாதரிப்பேட்டையிலுள்ள இந்த வீட்டுலதான் நான் பிறந்து வளர்ந்தேன். மூணு தலைமுறைக்கும் மேல் சென்னையில் வசிக்கிறோம். என் தாத்தா பாரிஸ்ல முதல்முதலாக எலக்ட்ரிக்கல் கம்பெனி தொடங்கி நடத்தியவர். அப்பல்லாம் எலக்ட்ரிக்கல் வயர்கள் எல்லாம் பிரிட்டன்ல இருந்து கப்பல்ல வரும்னு தாத்தா சொல்வார். 

பிறகு என் அப்பா வெங்குசா, தாத்தாவுடன் எலக்ட்ரிக்கல் கடையைப் பார்த்துக்கிட்டார். சென்னையில் உள்ள முக்கியமான கோயில்களுக்கு எல்லாம் நாங்கதான் வயரிங் பண்ணிட்டு இருந்தோம். அதுல எங்க தாத்தா சம்பாதித்து வீடுகள் எல்லாம் வாங்கினார்.

நான் எம்.எஸ்சி இயற்பியல் முடிச்சேன். அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க வேறு வேலைக்குப் போகாமல் எலக்ட்ரிக்கல் கடையைப் பார்த்துக்கிட்டேன்.
இப்படியிருந்த நேரம் ஒருநாள் அப்பா கேன்சர்ல இறந்திட்டார். அவர்தான் குடும்பத்தை நிர்வகிச்சிட்டு இருந்தார். அவரின் திடீர் இறப்பை என்னால தாங்கிக்க முடியல. அந்தத் துக்கம்தான் என்னை இந்தச் சேவைக்குள் கொண்டு வந்தது. 

அப்போ மனவேதனையில் மொட்டைமாடிக்கு வந்து அமைதியாக உட்கார்ந்திட்டே இருப்பேன். ஒருநாள் அமாவாசை அன்னைக்கு பக்கத்து வீட்டு அம்மா, ‘கா, கா’னு கத்திட்டு இருந்தாங்க. எதுவும் வரல. அப்பதான் நாம நாலு வேளைக்கும் சாப்பிடுறோம். இந்தப் பறவைகள் எல்லாம் எங்க போய்ச் சாப்பிடும்னு திடீர் யோசனை வந்தது.

அதனால், முதல்ல காகங்களுக்கு மீந்துபோன உணவை வைக்க ஆரம்பிச்சேன். அப்படியே சிட்டுக்குருவி, புறா உள்ளிட்ட பறவைகள் வந்தாங்க. பிறகு கிளிகள் நிறைய வர ஆரம்பிச்சாங்க. ஒருவேளை இது கிளிகளுக்கான ஏரியாவானு தெரியல. அல்லது அவற்றுக்கான அமைப்பு இங்க இருக்கானு புரியல. ஆனா, நிறைய கிளிகள் பறந்து வந்தாங்க. 

ஆரம்பத்துல மேலதான் பறந்தாங்க. அவங்கள இங்க வரவழைச்சு சாப்பாடு கொடுக்கணும்னு ஆசைப்பட்டு என் மனைவியிடம் சொன்னேன். அவங்களுக்கு இந்தமாதிரி உணவளிக்க ரொம்பப் பிடிக்கும்.

உண்மையில் இந்தச் சேவை செய்ய என்னை ஊக்கப்படுத்தினது அவங்கதான். பிறகு தொடர்ந்து உணவு வைக்கும்போது நிறைய கிளிகள் வர ஆரம்பிச்சாங்க. என் மனைவிக்கு மூச்சுப்பிரச்னை இருக்கு. அவங்களும் என்கூட மாடிக்கு வந்து உணவு வச்சிட்டு உட்காரும்போது கொஞ்சம் ஆசுவாசமானாங்க. அப்படியே இந்த சேவைக்குள் இறங்கிட்டோம்...’’ என்று உணர்வுபூர்வமாகப் பேசும் சுதர்சனைப் பின்தொடர்ந்தார் வித்யா. 

“கிளிகளுக்குச் சாப்பாடு கொடுக்கிறப்ப இருக்கிற மனதிருப்தி வேறெதிலும் கிடைக்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்ப ஆறாயிரம் கிளிகளுக்கு மேல இங்க வருது. ஜனவரி மாசம் 10 ஆயிரம் கிளிகளுக்கு அதிகமாகவே வரும். இதுதவிர முந்நூறு புறாக்களும், 200 சிட்டுக் குருவிகளும் வருகின்றன.

இதனுடன் காகங்கள் நிறைய வரும். ஆரம்பத்துல சாப்பாட்டை கீழ கொட்டுறாங்க... அப்படி இப்படினு நிறைய பிரச்னைகளைச் சந்திச்சோம். அப்புறம், சுத்தியிருக்கிற மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. ஒருமுறை இரண்டு பேருமே வெளியூர் போயிட்டோம். அதனால்,கிளிகளுக்குச் சாப்பாடு வைக்க முடியல. 

அப்ப நிறைய கிளிகள் இங்க சுத்தி சுத்தி வந்திருக்கு. அதைப் பார்த்திட்டு, ‘ஏன் இப்படி வெளியூர் போயிட்டீங்க. அதுங்க வந்து கத்திட்டே இருந்துச்சு’னு கோபப்படாத குறையாக சொன்னாங்க. அந்தளவுக்கு சுத்தியுள்ளவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. இப்ப சாப்பாடு கீழ விழுந்தாலும் எதுவும் சொல்றதில்ல.

இருந்தும் நாங்களும் யாருக்கும் தொந்தரவு இல்லாதபடி எங்க வீட்டிற்குள்ளே விழுகிறமாதிரிதான் உணவு வைக்கிறோம்...” என வித்யா நிறுத்த சுதர்ஷன் சா தொடர்ந்தார்.
“ஒருநாளைக்கு கிளிங்களுக்கு மட்டும் காலையும், மாலையும் சேர்த்து அறுபது கிலோ அரிசி, 8 டூ 10 கிலோ வேர்க்கடலைனு  வைக்கிறோம். 

அப்புறம், அந்தந்தக் காலங்களுக்கு ஏற்ப வரும் சீசன் பழங்களான கொய்யா, ஆப்பிள், மாம்பழம், தர்ப்பூசணினு என்ன இருக்கோ அந்தப் பழங்களையும் வெட்டி வைப்போம். இதுதவிர, தானியங்கள்ல சோளம், கம்புனு எங்களிடம் என்ன இருக்கோ அதையும் வைக்கிறோம்.

இதுல புறாக்கள் கோதுமையும், வேர்க்கடலையும் சாப்பிடுவாங்க. ஆனா, இப்ப புறாக்கள், கிளிகளின் உணவுகளையும் சேர்த்து சாப்பிடுறாங்க. அப்ப கிளிகள் என்ன பண்றாங்கனா, கிள்ளிவிடுவாங்க. இதனால, புறாக்கள் அந்தப்பக்கம் வர்றதில்லை. ஆனா, புறாக்கள் ரொம்ப தைரியமானவங்க. மனிதர்கள் இருந்தாலும் பயப்படாமல் வந்து சாப்பிடுவாங்க.

கிளிகள் ரொம்ப சென்ஸிட்டிவ். அவங்க ஆயிரம் பேர்களாக ஒரு கேங்கா வந்து இறங்குவாங்க. முதல்ல சிக்னல் கொடுத்து எல்லோரும் ஒரு மரத்துக்கு மொத்தமாக வருவாங்க. பிறகு ஒண்ணுபோல் வந்து சாப்பிடுவாங்க. அந்நேரம் புறா, சிட்டுக்குருவி யார் இருந்தாலும் விரட்டிவிட்டுடுவாங்க.

இதுதவிர 150 ஆடுகள், 50 பூனைகள், தெருவோர நாய்கள்னு தனியா உணவளிக்கிறோம். முன்னாடி கழுகுகளுக்கும் உணவளிச்சோம். அவை நிறைய வந்ததால் அக்கம் பக்கத்தினர் பயந்திடுவாங்கனு நிறுத்திட்டோம். எங்களுடைய சேவையைப் பார்த்திட்டு ஒரு பத்திரிகையில்  செய்தி வந்தது. அதைப் படிச்சிட்டு இங்குள்ள நிறைய பேர் என்னை கிளினு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதனால நானே, ‘பேரட்’ சுதர்சன்னு அடைமொழி வச்சுக்கிட்டேன்...” என்றவர், திரைப்பட ஷூட்டிங் பற்றிப் பேசினார்.

“சென்னையில் நான் கிளிகளுக்கு உணவளிப்பதை சமூக ஊடகங்கள்ல பதிவிடுவேன். இதனால், சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்ல என் வீடு முதன்மையாக வருது.
இதைப் பார்த்து ஜப்பான், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், நார்வே, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ்னு பல்வேறு நாடுகள்ல இருந்து நிறைய வெளிநாட்டுக்காரர்கள் என் வீட்டுக்கு வந்தாங்க; வர்றாங்க.

அப்படித்தான், ‘சிங்கப்பூர் சலூன்’ பட இயக்குநர் கோகுல் சாரும் என்னைத் தொடர்பு கொண்டார். அந்தப் படத்துல எங்க வீட்டையும், கிளிகளுக்கு உணவளிக்கிற காட்சியையும் எடுத்தார். அப்ப இயக்குநர் கோகுல் சார், சத்யராஜ் சார் எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்தாங்க.அப்புறம் கோகுல் சார்  படத்தின் டைட்டில்ல, ‘பேரட் சுதர்சன்’னு புகைப்படத்துடன் நன்றி கார்டு போட்டு எங்களைப் பெருமைப்படுத்தினார்.

அதேபோல ‘மெய்யழகன்’ படத்தின் கிளிகள் காட்சிகளும் இங்கதான் எடுத்தாங்க. அது இன்னும் நிறைய பேர்கிட்ட எங்களை கொண்டு போய் சேர்த்தது. அப்போ படத்தின் இயக்குநர் பிரேம் சார், நடிகர் சூர்யா சார், கார்த்தி சார் எல்லாரும் குடும்பத்துடன் வந்தாங்க. அரவிந்த்சாமி சார்  தன்னுடைய மகளுடன் வந்தார். அவங்க எல்லாம் எங்க சேவையைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க.

அப்புறம் எங்க உறவினர்கள் போல பாசமா பழகி பேசிட்டு இருந்தாங்க. அவங்க எல்லோருமே பெட் லவ்வர்ஸ். பிறகு கிளிகளுக்கு உணவளிச்சாங்க. இதைப் பார்த்து நிறைய கூட்டம் வந்திடுச்சு...” என்றவரைத் தொடர்ந்தார் வித்யா. “எங்களைப் போல நிறைய பேர் செய்யணும்னு ஆசைப்படுறோம். அதுக்காகவே எல்லா ஊடகங்களுக்கும் தயங்காமல் பேட்டி கொடுக்குறோம். நாங்க புகழ்பெறுவதற்காக இந்தமாதிரி செய்யல. இதன்வழியாக வாயில்லா ஜீவன்களுக்கு மத்தவங்களும் உணவளிப்பாங்க என்பதால் செய்றோம்.

இதுக்கிடையில் சென்னை ஐஐடியில் இருந்து வந்து எங்களின் ஆக்ட்டிவிட்டியை டாக்குமெண்ட் செய்தாங்க. அவங்களும் பாராட்டினாங்க...” என்றார் வித்யா. “இப்ப நாங்க வெளியூர்களுக்கு எல்லாம் போறதில்ல. ரொம்ப முக்கியமான திருமணம், உறவினர்களுக்கு உடல்நிலை சரியில்ல... அப்படிங்கிற சூழல்ல மட்டும் தனித்தனியாக போவோம். 

நான் வீட்டுல இருந்தால் அவர் போவார். அவர் இருந்தால் நான் போவேன். ஏன்னா, இந்தக் கிளிகள் எங்கள் மீது நிறைய நம்பிக்கை வைச்சிருக்கிறாங்க. இந்த இடத்திற்கு வந்தால் சுதர்சனும், அவர் மனைவியும் நமக்கு உணவளிப்பாங்கனு நம்புறாங்க. அந்த நம்பிக்கையை நாங்க கெடுக்க விரும்பல...” என ஆத்மார்த்தமாகச் சொல்கின்றனர் சுதர்சன் சா, வித்யா தம்பதியினர்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்