ராக்கெட் அல்ல...வாவ் கெட்!



செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் ராக்கெட், செயற்கைக்கோளை மேலே செலுத்திய பின் தனியாகப் பிரிந்து எரிந்துவிடும்; அல்லது கடலில் விழுந்துவிடும்.

ஆனால், மீண்டும் பூமிக்கே அதுவும் ஏவப்பட்ட இடத்திற்கே அந்த ராக்கெட் வந்துசேர்ந்தால் எப்படியிருக்கும்?

அப்படியொரு வேலையைத்தான் இந்தத் தீபாவளி நேரத்தில் செய்து நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தன்னுடைய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் சூப்பர் ஹெவி ராக்கெட் பூஸ்டரை விண்ணில் ஏவி சோதித்தது.

இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த சூப்பர் ஹெவி ராக்கெட், பூமியின் ஈர்ப்புவிசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்ப, அதை, ‘மெக்காஸில்லா’ எனப்படும் 400 அடி பிரம்மாண்ட இயந்திர பிடிமானம், ‘சோப்ஸ்டிக்’ எனும் தனது இருகரங்களால் கச்சிதமாக பிடித்துக்கொண்டதுதான்.

இந்த அரிய நிகழ்வினை வீடியோவாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட விண்வெளி விஞ்ஞானிகள் பலரும் ஆச்சரியப்பட்டனர். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மாபெரும் மைல்கல் என்கின்றனர்.   

அதென்ன ஸ்டார்ஷிப்?

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் என்பது அதன் விண்கலம் மற்றும் சூப்பர் ஹெவி ராக்கெட் இரண்டும் கூட்டாகச் சேர்ந்த அமைப்பாகும். இது பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கும் அப்பால் உள்ள கிரகங்களுக்கு விண்வெளி வீரர்களையும், பொருட்களையும் கொண்டு செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுவும் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து அமைப்பாக இதனை வடிவமைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ். அதாவது, செயற்கைக்கோளைச் செலுத்தியபின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் சூப்பர் ஹெவி ராக்கெட் மீண்டும் பூமிக்கே திரும்பிவிடும்.

பின், அடுத்தமுறை ஏவுவதற்கு மீண்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதைத்தான் தற்போது ஐந்தாம் கட்ட சோதனையாக நடத்தி வெற்றிகரமாக முடித்துள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.
இதற்குமுன் நடத்தப்பட்ட முதல் நான்கு கட்ட சோதனைகளின் போதும் இந்த பூஸ்டர் ராக்கெட் பூமியில் தரையிறங்கும் முன்பே நடுவானில் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தில் 150 மெட்ரிக் டன்கள் வரை பேலோடு (Payload) கொண்டு போக முடியும். இதனால், இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த விண்கலம் என்று ஸ்பேஸ்எக்ஸ் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது ஒரு மெட்ரிக் டன் என்பது ஆயிரம் கிலோகிராமிற்குச் சமம். ஆக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ பேலோடுகளை இதில் கொண்டு செல்ல முடியும். இதன் உயரம் 121 மீட்டரும், விட்டம் 9 மீட்டரும் கொண்டதாக வடிவமைத்துள்ளனர். 

இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் உயரம் மட்டும் 50 மீட்டராகும். இதில்தான் பேலோடு இருக்கும். இதற்கான உந்துவிசையை இந்த சூப்பர் ஹெவி ராக்கெட் பூஸ்டர் அளிக்கும். இந்த சூப்பர் ஹெவி ராக்கெட் பூஸ்டர் 33 ராப்டார் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஸ்பேஸ்எக்ஸ் இணையதளம், இந்த ஸ்டார்ஷிப் பூமியின் எந்த புள்ளியிலிருந்தும் எந்த ஒரு புள்ளிக்கும் ஒரு மணிநேரம் அல்லது அதைவிட குறைந்த நேரத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது என்றும் மெச்சுகிறது.அதாவது உலகில் எந்த இடத்திற்கும் இதன்வழியே குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும் என்கிற ஆச்சரியத் தகவலையும் அதன் தளத்தில் பகிர்ந்துள்ளது.

இதிலுள்ள மறுபயன்பாட்டு ராக்கெட் சாதனை என்பது ஒரு தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல; விண்வெளிப் பயணத்தின் எதிர்காலத்தை நோக்கிய இன்றியமையாத பாய்ச்சலும்கூட. ஏனெனில் தற்போது செவ்வாய், சந்திரன் உள்ளிட்ட நீண்டதூரக் கிரகங்களில் பல்வேறு நாடுகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

எதிர்காலத்தில் இந்தக் கிரகங்களுக்கு விண்வெளி வீரர்கள் செல்லும்போது அதிக பேலோடு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். அதற்கு சக்திவாய்ந்த ராக்கெட்டுகள் தேவை. அதன்மூலமே அதிக பேலோடுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லமுடியும்.

இந்த இடத்தில்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த இந்த மறுபயன்பாட்டு ராக்கெட் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டால் விண்கலத்தை ஏவுவதற்கான நேரமும், செலவும் குறையும் என்பது கூடுதல் சிறப்பு.

பேராச்சி கண்ணன்