சாயாவில் டஃப் கொடுக்கும் பாகிஸ்தான்!



தேயிலை உற்பத்தியில் யார் முதலிடம் வகிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

சீனாதான் டாப் ஒன். இந்தியா? இரண்டாவது இடம். சீனா வருடத்தில் 3.18 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது என்றால் இந்தியா 1.36 தான்.
சரி... யார் டீயை அதிகம் அருந்துகிறார்கள்?

நிச்சயம் சீனாவோ இல்லை இந்தியாவோ இல்லை. துருக்கி!துருக்கிதான் டீ பருகுவதில் டாப் ஒன்னில் இருக்கிறது. இரண்டாவது இடம் அயர்லாந்து. மூன்றாவது இடம் பிரிட்டன்.
சீனா, இந்தியாவுக்கு எந்த இடம்?

சீனா 21வது இடம் என்றால் இந்தியா 29வது இடம். ஆனால், பாகிஸ்தான் 4வது இடத்தில் இருக்கிறது. துருக்கியர்கள் வருடத்துக்கு 3.16 கிலோ கிராம் டீ அருந்தினால், சீனா 0.51 கிலோ கிராம். இந்தியா 0.33 கிலோ கிராம். சீனா, இந்தியா போன்ற நாடுகள் டீ உற்பத்தியில் ஜமாய்க்கிறது என்றால் மற்ற நாடுகள் டீ சாப்பிடுவதில் ஜமாய்க்கின்றன. 

உதாரணமாக 4ம் இடத்தில் டீ பருகுவதில் முன்னணியில் இருக்கும் பாகிஸ்தான் தன் டீ தேவையை அதிகமாக இறக்குமதி செய்துதான் சமாளிக்கிறது. தேயிலையின் வரலாறு ரொம்ப சுவாரசியமானது. வெட்டுக் குத்து முதல் போர் வரை இந்த சல்லிக்கு ஆகாத டீயால் நிகழ்ந்துள்ளதாக டீ வரலாற்று ஆசிரியர்கள் மானாவரியாக எழுதியிருக்கிறார்கள்.

நம்ம பாலா எடுத்த ‘பரதேசி’, நம்ம தமிழ்நாட்டின் டீ வரலாற்றுப் பதிவுக்கு முக்கிய இடம் கொடுத்ததை பலர் அறிவார்கள். உதாரணமாக சீனர்கள் ஒருகாலத்தில் திபேத்திய போர்க் குதிரைகளை வாங்குவதற்காகவே உள்ளூரில் டீ உற்பத்தியை அதிகரித்தார்கள் என்று வரலாறு பேசுகிறது. 

டீ குடிப்பதில் 18வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஒரு பகுதியில் டீயில் சர்க்கரையை தூளாகப் போடுவதில்லை. சர்க்கரைக் கட்டிகளைத்தான் போட்டுக் குடிக்கிறார்கள். இப்படி டீ குடிக்கும்போது ஆரம்பத்தில் டீ கசப்பாக இருக்கும். பிறகு மெல்லிய இனிப்பு. பிறகு கடைசியாக மொத்த இனிப்பு.

முதலிடத்தில் இருக்கும் துருக்கி, டீ அருந்துவதில் முதலிடத்தைப் பிடித்ததும் சில நூறு ஆண்டுகளில்தான். அதற்கு முன்பு காபிதான் ரொம்ப பிரபலம் அங்கே. ஆனால், காபிக் கடைகளில் ஆண்கள் எல்லாம் சேர்ந்து அரசியல் சதி செய்கிறார்கள் என்பதற்காக அரசாங்கம் டீயை பிரபலப்படுத்தியது. இத்தனைக்கும் துருக்கியில் டீ விளைச்சல் மிகக் குறைவு. 

ஆனாலும் சில இடங்களில் புதுவிதமாக டீயை உற்பத்தி செய்ய துருக்கி அரசாங்கம் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டது. டீ அருந்துவதில் முன்னணியில் இருக்கும் பாகிஸ்தானில் பாகிஸ்தானின் சொத்து எல்லாமே டீயில் செலவாகிறது என்று அந்நாட்டு அரசியல்வாதிகள் தலையில் அடித்துக்கொண்டாலும் பாகிஸ்தானியர்கள் டீயை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

டி.ரஞ்சித்