தீபாவளி போனஸ் ஏன் முக்கியம் என்பதுதான் படமே!



‘‘எந்த மதமும் சாராமல் காத்திருப்பது ‘தீபாவளி போனசு’க்குத்தான். தீபாவளி கொண்டாடும் மக்கள் மட்டுமல்ல, கொண்டாடாத மக்களும் கூட இந்த போனஸ்க்காக ஒரு வருடம் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு உழைக்கும் மக்களுக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரிய பூஸ்ட் இந்த போனஸ்தான். 
கதையும் அது சார்ந்துதான் நடக்குது. அதனால்தான் ‘தீபாவளி போனஸ்’ என்கிற தலைப்பு இந்தப் படத்துக்கு பொருத்தமாக இருந்தது...’’ கடைக்கோடி உழைப்பாளிகளின் குரலாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஜெயபால். ஜேமுதல் படம் வரை உங்களின் பயணம் குறித்து சொல்லுங்கள்..?

மதுரை ஆண்டாள்புரம் பகுதிதான் எனக்கு சொந்த ஊர். அப்பா கூலித் தொழிலாளியாக இருந்தார். சின்ன வயதில் இருந்தே வறுமையின் பிடியில் இருந்தவன் நான். எங்களுக்கு எப்போது தீபாவளி வரும்ன்னு இருக்கும். ஆனால், என்னுடைய அப்பா, அம்மாவுக்கு வறுமை காரணமாகவே ‘ஏன்டா இந்த தீபாவளி வருது’ என்கிற மனநிலைதான் இருக்கும். ஆனாலும் அந்த ஒரு போனஸை நம்பித்தான் எங்களுக்கு தீபாவளி.

எம்.ஏயில் குழந்தைகள் மனநலம் படிப்பை எடுத்து மாஸ்டர் முடிச்சிருக்கேன். தொடர்ந்து குறும்படங்கள், கடந்த 8 வருடங்களாக விளம்பரத்துறையில் வேலை செய்கிறேன்.
உலக அளவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனத்துக்கான விளம்பரப் படங்களையும் இயக்கியிருக்கேன். மேலும், உலக மாணவர்கள் கீதம் என்கிற தலைப்பில் சுமார் 78 நாடுகளில் யுனெஸ்கோ அமைப்பால் ஒளிபரப்பப்படும் பாடலை இயக்கினேன். மதன் கார்க்கியின் நான்கு வீடியோ பாடல்களையும் இயக்கியிருக்கேன்.

‘தீபாவளி போனஸ்’..?

என் சின்ன வயதில் எனக்கு தீபாவளி எப்படி இருந்துச்சோ அதை மையமாகக் கொண்டுதான் இந்தக் கதையை உருவாக்கியிருக்கேன். ‘போனஸ் வரட்டும்...’, ‘போனஸ் வந்ததும் இது வாங்கிக்கலாம்...’, ‘ஏங்க போனஸ்ல எனக்கு ஒரு தோடு வாங்கித் தாங்களேன்...’ இந்த வார்த்தைகளை இப்போதும் கூட பல வீடுகளில் கேட்க முடியும். தினக்கூலி துவங்கி லட்சங்களில் சம்பளம் வாங்குவோர் வரை சாதி, மதம் பார்க்காம காத்திருக்கறது இந்த போனசுக்குத்தான். அதை மையமாகக் கொண்டு நடக்கும் கதை.

தீபாவளி பண்டிகையை மதங்கள் கடந்து மக்கள் அனைவரும் கொண்டாடுவாங்க அல்லது அதில் பங்கேற்பாங்க. அப்படிப்பட்ட பண்டிகை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கறதில்லை. இதற்கு பொருளாதாரம் என்பதைத் தாண்டிய சில விஷயங்களும் இருக்கு. அது என்ன என்பதைத்தான் படத்தில் பேசியிருக்கிறேன்.

தீபாவளி பண்டிகை வருவதற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது தொடங்கும் கதை, தீபாவளி பண்டிகையின் போது முடிவடையும். ஒரு நடுத்தர குடும்பம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு எப்படி தயராகிறார்கள் என்பதை எளியவர்களின் வாழ்வியலாக பதிவு செய்திருக்கேன்.

விக்ராந்த், ரித்விகா... படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி சொல்லுங்க..?

விக்ராந்த், ரித்விகா ரெண்டு பேரின் நடிப்பும் அவ்வளவு எதார்த்தமா இந்தக் கதைக்கு பொருந்தும். மற்றவர்கள் எல்லோருமே புதுசுதான். நிறைய புதுமுகங்கள் முதல் படம் மாதிரியே இல்லாம நடிச்சிருக்காங்க. ‘ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ப்ரொடக்‌ஷன்ஸ்’ தீபக் குமார் தாலா தயாரிப்பு. அவர் இதுவரைக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததே இல்ல. அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் ரிலீஸ் செய்கிறார்.

கதைக்களம் மதுரை. தீபாவளி காலங்களில் கிழக்கு மாசி வீதி, மேற்கு மாசி வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் ஏராளமான கடைகள், எப்போதும் கூட்டம், அதற்கிடையிலே மழை, வியாபாரம், பரபரப்பு... இப்படி லைவ்வா அந்தப் பகுதிகளைப் பார்க்கலாம். 

மதுரையைப் பொருத்தவரை இந்த தீபாவளி கால மழை மற்ற ஊர்கள் போல இல்லாம சும்மா 5 நிமிஷம், 10 நிமிஷம் தூறலாதான் போடும். உடனே கடைகளுக்குள்ள கூட்டம் மறைஞ்சிக்கும். ரோடு முழுக்க கழுவிப் போட்டபடி காலியாக இருக்கும். கடைக்காரர்களும் மழைக்காக ஒதுங்கும் கூட்டத்திடம் கண்டிப்பு காட்ட மாட்டாங்க. அதுதான் மதுரை ஸ்பெஷல்.

இந்தக் காட்சிகளுக்காகவே சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகளை செட் போட்டு உருவாக்கியிருக்கோம். இதற்கு பக்கபலமா கலை இயக்குநர் அருண் பார்த்துப் பார்த்து செட் போட்டார்படத்துக்கு சினிமாட்டோகிராபி கெளதம் சேதுராமன், எடிட்டர் பார்த்திவ் முருகன். இருவருக்கும் இதுதான் முதல் படம். ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் வேலை செய்த மரியா ஜெரால்ட் படத்துக்கு இசை. எங்களுடைய மொத்தக் குழுவுக்கும் காட்ஃபாதர் மாதிரி இருந்து வழி நடத்தினது எடிட்டர் லெனின் சார்.

எப்படிப்பட்ட போனஸாக இருக்கும் இந்த ‘தீபாவளி போனஸ்’?

விக்ராந்த், ரித்விகா படப்பிடிப்புக்கு முன்பே திரைக்கதையை வாங்கிட்டாங்க. நிறைய பயிற்சிகள் எடுத்துக்கிட்டாங்க. குறிப்பாக மதுரைத் தமிழ் பேசி நடிக்கறதுக்காகவே நிறைய பயிற்சிகள், தேடல்கள் செய்தாங்க. 

இப்படி படம் முழுக்க அத்தனை பேரும் தங்களுடைய உழைப்பைக் கொடுத்திருக்கோம். நிச்சயம் இந்தக் கதை அடித்தட்டு மக்களின் வாழ்வியலை எதார்த்தமா கண் முன் நிறுத்தும். போனஸ் என்பதும், சம்பளம் என்பதும் உழைக்கும் மக்களின் வீடுகளில் எவ்வளவு முக்கியம் என்கிறதை ஆழமாக இப்படம் சொல்லும்.

ஷாலினி நியூட்டன்