சிறுகதை - மன்னிப்பே தண்டனை!
ஆட்டோக்காரர் அலுப்பு பார்க்காமல் மீண்டும் ஒரு கடையில் விசாரித்துத் திரும்பி சலிப்புடன், “பத்து படம் எடுத்திருக்காருன்னு சொல்றீங்க... யாருக்குமே தெரியலையேம்மா...” என்றார். “முப்பது வருஷம் முன்னாடிங்க. தலைமுறை மாறிடுச்சி. மறந்துட்டாங்க. படம் பேரு சொல்லி கேட்டிங்களா?” என்றாள் ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்த நந்தினி.
“மறந்துட்டனே... என்ன பேர் சொன்னிங்க?”
“‘சிவப்பு நட்சத்திரம்’, ‘உயிர் கொடுத்த உத்தமன்’... இது ரெண்டும் ரொம்ப நாள் ஓடின படங்கள்!”வடை தின்று, டீ குடித்த கும்பலிடம் போனார் ஆட்டோக்காரர். சிலர் தலையை மறுப்பாக அசைக்க, சிலர் உதடுகள் பிதுக்க... ஒரு ஆசாமி மட்டும் தூரத்தில் கை காட்டி போகும் வழி சைகை செய்வதைப் பார்க்க நந்தினிக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. சரிந்த மூக்குக் கண்ணாடியை மேலே ஏற்றிக்கொண்டாள். ஆட்டோக்காரர் வந்து, “பக்கத்துலதான் சொல்றான். பாப்போம்...” என்று ஸ்டார்ட் செய்தார். “அவரு இப்ப சினிமா எடுக்கறதில்லையாம்மா?”“இல்லப்பா...”ஆட்டோக்காரர் பண்பலை ரேடியோவைப் போட்டுக் கொண்டார். வீடு வாங்கினால் தங்கக் காசு என்றார்கள். தங்க நகையை அடகுவைக்க தங்களிடம் வரச் சொன்னார்கள். தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம் என்றார்கள்.
பாதையோர சக்கர வண்டியில் ஆப்பிளும், சாப்பிட்டுப் பார்த்து ஆஸ்திரேலிய திராட்சையும் வாங்கிக்கொண்ட பிறகு பயணம் தொடர்ந்தது.“எல்லாரும் மறந்துட்டாங்கன்றிங்க. அந்த டைரக்டரை நீங்க எதுக்கும்மா பார்க்கப் போறிங்க? அவரு உங்களுக்கு பணம், கிணம் கொடுக்கணுமா?”“இல்லப்பா. நான்தான் அவருக்குக் கொடுக்கணும்...”அந்தச் சந்தில் ஆட்டோ நுழைந்ததுமே மூத்திர நாற்றத்திற்காக மூக்கைப் பிடித்தாள். டிரான்ஸ்ஃபார்மர் பின்னால் நின்று சத்தத்துடன் போனான் ஒருவன்.
ஒரு முரட்டு மாடும் வாலைத் தூக்கி போனபடி அசமந்தமாக நகர்ந்து வழி விட்டது. எல்லா வீடுகளும் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் ஒன்றின் முதுகோடு ஒன்று ஒட்டியிருக்க... நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர், பைக்குகளில் உரசி விடாமல் ஆட்டோவைச் செலுத்த வேண்டியிருந்தது.கூடைக்காரியிடம் கீரை வாங்கிய பெண் சுட்டிக்காட்டிய வீட்டின் வாசலில் நிரம்பி வழியும் குப்பை மற்றும் ஈக்களுடன் கார்ப்பரேஷனின் சக்கரத் தொட்டி.
பேசியதை விடவும் பத்து ரூபாய் சேர்த்துக் கொடுத்துவிட்டு அந்த வீட்டின் வெளிறிப்போன ஒற்றை மரக் கதவின் ஓரங்களில் அழைப்பு மணிப் பித்தான் தேடினாள். இல்லை. இடைவெளி விட்டு நான்கு முறை தட்டியதும் முதலில் இருமலும், பிறகு கைத்தடி ஊன்றல் சத்தமும் சமீபித்தது.
“யாரு?” என்று கரகரத்தது நரைத்த குரல்.எப்படிச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்வது என்று யோசித்தாள்.“டைரக்டர் சாரைப் பாக்கணும். வேலூர்லேர்ந்து வந்திருக்கேன். பேரு நந்தினி...”கதவு திறந்தது. அழுக்கான வேட்டி, கை வைத்த பனியனில், நரை கலந்த தாடி, மூக்கில் சரிந்த கண்ணாடியுடன் சுந்தரமூர்த்தி.கைகூப்பி புன்னகைத்தாள்.
“அடையாளம் தெரியலயேம்மா...” என்றார்.“சந்திச்சதில்லை சார். பல வருஷமா பாக்கணும்னு ஆசை. இப்பதான் முடிஞ்சது...”அவர் கண்களில் ஆச்சரியம் மின்னியது. “சொந்தக்காரன், தெரிஞ்சவன்னு ஒருத்தன் வர்றதில்ல. வாம்மா...”அவரை மெதுவாகத் தொடர்ந்தாள். பாதி புகைந்தபடி சின்ன மேஜையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டை எடுத்துக்கொண்டு அவளை அனுமதி வேண்டி பார்த்தார்.“பரவால்ல சார்...” என்று பழக் கவரை நீட்டினாள்.“அட! எனக்கு ஆஸ்ட்ரேலியன் கிரேப்ஸ் ரொம்பப் பிடிக்குமே...”உடனே இரண்டைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.“தெரியும் சார். உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது எல்லாம் தெரியும்...”மது பாட்டில், மிக்சர் தட்டு இருந்த ஸ்டூலை காலி செய்து வேட்டியால் துடைத்து உட்கார கை காட்டினார். கலைந்த படுக்கையில் அமர்ந்து கொண்டார். அந்த மெத்தை நடுப் பகுதியில் பாதியாய் மெலிந்திருக்க... உறை போடாத தலையணையில் அழுக்குத் திட்டுகள்.
ஆழமாகப் புகைத்து அவளைத் தவிர்த்து வேறு திசையில் ஊதிவிட்டு, “எந்த ஊருன்னு சொன்னே?” என்றார். “பொறந்தது வளர்ந்தது எல்லாம் மணப்பாறை சார்...” “அடடே! பக்கத்துல துவரங்குறிச்சிதான் என் ஊரு...”
“தெரியும் சார். நீங்க ஸ்கூல் படிச்சதெல்லாம் திண்டுக்கல்லுல. திருச்சில காலேஜ் படிப்பு. கொஞ்ச நாள் மருந்து கம்பெனில வேலை பாத்திங்க. நீங்க சந்திச்ச ஒரு டாக்டர்தான் உங்க முதல் படத்தோட தயாரிப்பாளர்...”“அடடே! இவ்ளோ தெரிஞ்சி வெச்சிருக்கியே... உனக்கு ஏதாச்சும் குடுக்கலாம்னா... யாருமில்ல இங்க. பிஸ்கெட் சாப்புடறியாம்மா?” எழ முயன்றவரைத் தடுத்தாள்.
“பரவால்ல சார். உங்களைப் பார்த்ததும், பேசறதுமே ஒரு விருந்துதான். பால் இருக்கா சார்? உங்களுக்கு காபி போட்டுத் தரட்டுமா?”
“பால் வாங்குனா எங்க வைக்கிறது? ஒரு ஃபிரிட்ஜ் இருந்திச்சி. டியூ சரியாக் கட்டல. எடுத்துட்டுப் போய்ட்டாங்க. இப்ப வருமானம் எதுவும் இல்ல பாரு... ஊர்லேர்ந்து அக்காதான் பாவமேன்னு பணம் அனுப்பறா...’’“சரி... காபித்தூளாவது இருக்கா?” “அது இருக்கு...’’
“பிளாக் காபி போடட்டுமா? உங்களுக்குப் பிடிக்குமே...”“உனக்கும் சேர்த்து போடு, உன்னைப் பத்தி சொல்லிக்கிட்டே போடேன்...”“அதிகம் படிக்கலை சார். குடும்பச் சூழ்நிலை. வயல் வேலைக்குப் போயிருக்கேன். ஒரு டைலரம்மா கிட்ட வேலை பார்த்தேன். ஃபைனான்ஸ் ஆபீஸ்ல பியூன் வேலையும் பார்த்தேன். சைக்கிள்ல கேன் கட்டிக்கிட்டு எல்லா ஆபீசுக்கும் காபி, டீ குடுத்த கணேசனைப் பிடிச்சது.
‘கட்டிக்கிறியா’ன்னு நான்தான் கேட்டேன். கோயில்ல வெச்சி கல்யாணம். பத்தே பேருதான் வந்தாங்க. ஒரே ஒரு ரூமோட வாடகை வீடு. எல்லாம் நல்லாதான் போயிட்டிருந்திச்சி...”கொதித்த வேந்நீரைக் கோப்பைகளில் ஊற்றி, காபித்தூள், அளவு கேட்டு சர்க்கரை போட்டு ஸ்பூனில் கலக்கி எடுத்து வந்து நீட்டிவிட்டு மேஜை ஓரத்தில் இருந்த நான்கைந்து சினிமா கேடயங்களைப் பார்த்தாள். காபிக் கோப்பையை வைத்துவிட்டு, “என்ன சார் இவ்வளவு தூசியா இருக்கு?” துணி தேடி கிடைக்காமல் தன் புடவைத் தலைப்பால் துடைத்தாள்.“அய்யே... அதை விடும்மா. எடைக்குக்கூட வாங்க மாட்டேங்கறான். நீ காபி குடிம்மா. மேலே சொல்லு...”அவர் எதிரில் தயங்கிதான் அமர்ந்தாள்.“என்னை விடுங்க சார். அப்போ உங்களோட சினிமா செஞ்சவங்க பலபேரு எங்கெங்கயோ இருக்காங்க. ரெண்டு பேரு தயாரிப்பாளராகூட இருக்காங்க. தொடர்ந்து படம் வந்திச்சே சார். என்ன சார் ஆச்சி?”சுந்தரமூர்த்தி ஊதி ஊதி காபி குடித்தார். தாடியை நீவிக் கொண்டார்.
“சினிமாவை ஸ்க்ரீன்ல பாக்கறிங்க. கொண்டாடறிங்க. ஆனா, இங்க இருக்கற மனுஷங்க பல பேர்கிட்ட தரம் கிடையாது. அறம் கிடையாது. நிறைய துரோகம் இருக்கும். நானும் செஞ்சிருக்கேன். அப்ப வயசுத் திமிரு. காசு நிறைய இருந்திச்சி. உடம்பு சொகுசு கேட்டுச்சி. சுத்தி நிறைய வாய்ப்பும் இருக்கே. குடிச்சேன். அன்பான பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சி எவ எவ மடியிலயோ கிடந்தேன்.
ஊத்திக் குடுத்தவனையும், கூட்டிக் குடுத்தவனையும் நல்ல நண்பனா நினைச்சேன். நீட்ன இடத்துல எல்லாம் நம்பி கையெழுத்துப் போட்டேன். படம் வேற தயாரிச்சேன். எல்லாம் நக்கிக்கிட்டுப் போயிடுச்சி. திரும்பிப் பாத்தா யாரையும் காணோம். பொண்டாட்டிக்கு வியாதி வந்ததுகூட தெரியல.
புள்ளை கோயிச்சிக்கிட்டு எங்கயோ போய்ட்டான். அவ செத்தப்பறம் அனாதை ஆயிட்டேன். இன்னிக்கு கேட்டா யாருக்கும் என்னைத் தெரியாதும்மா. உதட்டைப் பிதுக்குவானுங்க. எங்க சங்கத்துலேர்ந்து தீபாவளிக்கும், பொங்கலுக்கும் துணியும் காசும் அனுப்பறாங்க. செல்வாக்கா இருந்தேன், இப்ப செல்லாக் காசும்மா...”கண்களிலிருந்து உருண்ட கண்ணீர்த் துளிகள் மீசைக்குள் விழுந்தன. “அழாதிங்க சார்...”“எல்லாம் முடிஞ்சி போச்சி. ஆடி அடங்கிட்டேன். இனிமே என் வாழ்க்கைல மிச்சம் இருக்கறது என் சாவு ஒண்ணுதான். அது எப்படா வரும்னு ஒவ்வொரு நாளையும் நகத்திட்டிருக்கேன். என்னைப் போய் எதுக்கும்மா பாக்க வந்தே?”“நீங்க செஞ்ச படங்கள் சார்!”“ஆமா... கிழிச்சேன்!”மௌனம் அடர்த்தியாக வந்து அமர்ந்தது.
“உன்னைப் பத்தி சொல்லிட்டிருந்தியேம்மா...” “அது வேணாம் சார்...”“ஏம்மா?”“நீங்களே நொந்து போயிருக்கிங்க. என் சோகக் கதையைச் சொல்லி கஷ்டப்படுத்த விரும்பல சார்...”
“எல்லார் வாழ்க்கைலயும் கதை இருக்கும்மா. இப்ப நான் தோத்த கதையே ஒரு கதைதானே? ஒருத்தன் தோக்கறான். ஒருத்தன் ஜெயிக்கிறான்.
ஏன் சொல்லு!”“ஒரு சாமியார் சொன்னாரு. போன ஜென்மத்துல அவங்கவங்க செஞ்ச கர்மாதான் காரணம்னு. எனக்கு புரியல சார். இந்த ஜென்மத்துல செய்ற பாவத்துக்கு தண்டனைன்னுதான் நான் நினைக்கிறேன். நீங்களே சொன்னிங்களே சார்... நிறைய தப்பு செஞ்சேன், துரோகம் செஞ்சேன்னு... கர்மான்னா... போன ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு மறுபடி ஏன் பாவம் செய்யணும்? தண்டனை மட்டும்தானே அனுபவிக்கணும்?
நல்லா வாழ்ந்ததும் தண்டனை இல்லையே! இப்ப அனுபவிக்கிறது போன ஜென்மத்து பாவத்துக்குன்னா... இந்த ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு அடுத்த ஜென்மத்துல தண்டனை இருக்குமா? எனக்கு இதெல்லாம் பேசற அளவுக்குப் பத்தாது சார்...”“நல்லாத்தான் பேசறே! உன் கதையதான் சொல்லேன்...”“சீரழிஞ்சிட்டேன் சார்!
அன்னிக்கு ஜாலியா நானும் என் புருஷனும் ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குப் போயிட்டு சைக்கிள்ல வந்தப்ப... மூணு பேரு மறிச்சானுங்க சார்! முழு போதைல இருந்தானுங்க. ஒரே எத்துல என் புருஷன் எகிறிப்போயி விழுந்து மயக்கமாயிட்டான். அப்புறம் மூணு பேரும் என்னை... கெஞ்சறேன்... கதர்றேன்... இரக்கமே இல்லாம...’’முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் நந்தினி. “அய்யோ! கடவுளே!’’ என்றார் சுந்தரமூர்த்தி.“அம்மணமா கிடந்து அலர்றேன். நான் கும்பிட்ட எந்த அம்மனும் உதவிக்கு வரல. செத்த எலியை காக்கா கொத்தற மாதிரி... மறுபடி மறுபடி என்னை... நினைச்சாலே நடுங்குது சார்! பத்து நாள் ஆஸ்பத்திரில கிட்டத்தட்ட பொணமா கிடந்தேன். பேசாம செத்திருக்கலாம். போலீஸ் வந்திச்சி! பத்திரிகை, டிவின்னு மைக்கைத் தூக்கிட்டு வந்துட்டானுங்க. கோர்ட்ல அவமானம் பிடுங்கித் திங்கிற மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டாங்க!”“உன் புருஷன்..?”
“அது ஒரு கோழை சார்! கயித்துல தொங்கிடுச்சி! அவனுங்க பெரிய இடம் சார்! கேஸ்லேர்ந்து தப்பிச்சுருவாங்கன்னு சொன்னாங்க...”
“அப்புறம்?”“இவ்வளவு ஆனப்பறம் எனக்கு எதுக்கு சார் உசுரு வேண்டிக்கிடக்கு? கோர்ட்ல வெச்சே மூணு பேத்தையும் வெட்னேன். ஓட ஓட வெட்னேன்... உசுரு போனப்புறமும் வெட்டிக்கிட்டே இருந்தேன்...”சுந்தரமூர்த்தி எழுந்தே விட்டார்.
“இதெல்லாம் எப்பம்மா நடந்துச்சி?” என்கிற மூன்று வார்த்தைகளையும் துண்டு துண்டாகத்தான் அவரால் கேட்க முடிந்தது.“அது ஆச்சி பதினெட்டு வருஷம்! வேலூர்லேர்ந்து நேரா உங்களைப் பாக்கத்தான் வந்தேன். இனிமேதான் ஊருக்குப் போகணும். எந்த ஊருக்குன்னுதான் தெரில. நான் வர்றேன் சார்...”“அட! இரும்மா! மனசைப் பிசையதும்மா.
எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல சொல்லி விடட்டுமா? தங்கி வேலை பார்க்கறியா?”“வேணாங்க சார். உங்களை ஒண்ணு கேக்கணும் சார். யார் யாருக்கோ துரோகம் செஞ்சேன்னு சொன்னிங்கல்ல... அதனாலதான் இப்படி அனாதையா கிடக்கறேன்னு சொன்னிங்கல்ல... ஒண்ணு மறந்துட்டிங்க. நீங்க இந்த சமூகத்துக்கும் துரோகம் செஞ்சிங்க சார்...” “என்னம்மா சொல்றே?”
“உங்க படம் ஓடணும்னு உங்க எல்லா படத்துலயும் கிளப் டான்ஸ், ரேப் சீனு எல்லாம் வெச்சிங்கதானே? நடிகைங்களை பாதி நிர்வாணத்துல நடிக்க வெச்சி பாக்கற ரசிகனை சூடேத்தினிங்கதானே?”“ஆமாம்மா. அது ஒரு காலக்கட்டம்! தயாரிப்பாளர்கள் கேப்பாங்கம்மா. செக்ஸ் சீன்ஸ் கொஞ்சம் வெச்சாகணும். நான் மட்டுமா? பல டைரக்டர்ஸ் அப்படித்தானே படம் எடுத்தோம்?”நந்தினி எதுவும் பேசாமல் எழுந்து தன் செருப்புகளை அணிந்து கொண்டாள்.
சுந்தரமூர்த்தியும் வாசல் வரை வந்தார். வெளியே காலெடுத்து வைக்கும் முன்பாக அவள் திரும்பி அவரைத் தீவிரமாகப் பார்த்தாள்.“நிறைய பேர் செஞ்சிருக்கலாம் சார். அவனுங்க கோர்ட்ல வாக்குமூலம் சொன்னப்ப அன்னிக்கு உங்க படம் பாத்துட்டு வர்றப்ப வெறியேறினதாலதான் அப்படி நடந்துக்கிட்டதா சொன்னாங்க சார்!”அதிர்ந்துபோய் நின்றார் அவர்.“உங்களையும் கொலை செய்யணும்னு வெறியோடதான் சார் வந்தேன். காலமே உங்களுக்கு பாடம் கத்துக்குடுத்துடுச்சி. இப்ப உங்களை மன்னிச்சி விட்டுட்டுப் போறதுதான் சரியான தண்டனையாப் படுது சார்...’’கதவை அடித்து மூடிவிட்டு வெளியேறினாள் அவள்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
|