சிறுகதை - அந்த 13 நாட்கள்



பெனின்சுலார் பெண்கள் பள்ளியின் தாளாளர் மோகனா தனசேகரன், எதிரே அமர்ந்து ஸ்ட்ராபெரி டீயை ரசித்து குடித்துக் கொண்டிருந்த தலைமை ஆசிரியை சந்திரவதனியை  வியப்புடன் பார்த்தாள்.
‘‘இது எப்படி சாத்தியம்? எல்லா வகுப்புகளிலும் பெண்களின் அட்டெண்டன்ஸ் நூற்றுக்கு நூறு இருக்கு. பெண்கள் எல்லோரும் சின்சியரா மாறிட்டாங்களா என்ன?’’
தேநீர் கோப்பையை மேஜையின் மீது வைத்துவிட்டு, நாசுக்காக தனது உதடுகளை ஒற்றிக் கொண்ட சந்திரவதனி, ராதிகாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

‘‘அது மட்டும்தானா கவனிச்சீங்க? எல்லா மாணவிகளும் இப்ப ரொம்ப அழகா டிரஸ் செஞ்சுகிட்டு வர்றாங்களே! அதைப் பார்த்தீங்களா? வழிய வழிய வேப்பெண்ணெயைத்
தடவிக்கிட்டு வரும் அந்தக் கிராமத்து பெண் பாரிஜாதம்கூட இல்ல இப்ப முடியெல்லாம் வெட்டிக்கிட்டு படு ஸ்டைலாக ‘பாரிஜ்’னு தன்னை அழைச்சுக்கறா. மாணவிகள் எல்லோரும் கண்ணனுக்கு ஏங்குற கோபிகைகளாக மாறி வர்றாங்க...’’ என்றாள் சந்திரவதனி, ‘‘பெண்கள் ஸ்கூல்ல கோபிகைகளா இருந்து என்ன பிரயோஜனம்?

நம்ம ஸ்கூல்லதான் கண்ணன் இல்லையே!’’
‘‘என்ன அப்படி சொல்லிட்டீங்க? சினிமா ஹீரோக்களையும் தோற்கடிக்கக்கூடிய நம்ம  பிடி மாஸ்டர் மற்றும் என்சிசி விங் தலைவர் சுரேந்தர் இருக்காரே!  ஸ்டைலாக பைக்ல கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வர்றதும், ஹெல்மெட்டை கழட்டி தலையில இருக்கிற கர்ச்சீப்பை உதறி மடிச்சு பாக்கெட்ல வைக்கிறதும், வாயில் டூத் பிக்கை கடிச்சுக்கிட்டே வர்றதும், என்னமா தன்னை ப்ராஜெக்ட் செய்யறார்.  

காலையில அசெம்பிளி ஹாலுக்கு அழைச்சுக்கிட்டு போறதுல இருந்து சாயந்தரம் அஞ்சு மணக்கு அவர் வீட்டுக்கு கிளம்ப வரைக்கும் மாணவிகள் அவரைத்தானே மொய்ச்சுகிட்டு இருக்காங்க?’’ 

‘‘இஸ் ஹீ டேஞ்சரஸ்? சுரேந்தர் மாணவிகளை என்கரேஜ் செய்கிறாரா என்ன? அவங்க மேல விழுந்து பழகுறாங்கனா கூட அவர் அவங்கள கண்டிக்கணும்... நீங்க அவரை கண்காணிச்சுக்கிட்டுதானே இருக்கீங்க சந்திரா?’’

‘‘மேடம்! அவரும் வயசு பிள்ளை! கொஞ்சம் இதையெல்லாம் ரசிக்கும் வயசுதான். அன்னைக்கு சாயந்தரம் சுரேந்தர் இருக்கிற ஸ்போர்ட்ஸ் ரூம்  வாசலுல இருக்கிற இரண்டாவது மாடி படிக்கட்டுல பிளஸ் ஒன் படிக்கிற ஹேமா தயங்கித் தயங்கி நின்னுகிட்டு இருந்தா. தமிழ் பண்டிட் கல்யாணி வரதராஜன் தற்செயலாக அங்கே போனப்ப அந்தப் பொண்ணு திருதிருனு முழிச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தா. கல்யாணி ஒரு அதட்டு போட, தன்னோட செல்போன் உள்ளே வைத்திருந்த லவ் லெட்டரை எடுத்து கொடுத்திருக்கா. ‘சுரேந்தர் சாரை நான் லவ் பண்றேன்’னு கல்யாணி மேடம்கிட்ட அழுதாளாம்!’’

‘‘தப்பு பண்ணிட்டோம்! பழைய பிடி மேடம் நிரஞ்சனாவுக்கு முட்டி மாற்று அறுவை சிகிச்சைனு லீவுல போனதால் அவசரத்துக்கு சுரேந்தரை வேலைக்கு எடுக்க வேண்டியதா போச்சு. இருபத்தி ஏழு வயசுக்காரர். காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி நடந்துக்கிட்டா நம்ம ஸ்கூலுக்கு கெட்ட பெயர்தான்.  இப்பவே கண்ணுல விளக்கெண்ணெய  விட்டுட்டு எந்த ஸ்கூல்ல ஸ்காண்டல் நடக்குதுனு யூடியூபர் எல்லோரும் பார்த்துகிட்டு இருக்காங்க.

உங்க பொறுப்புலதான் நம்ம ஸ்கூலை விட்டிருக்கேன், சந்திரவதனி...’’ மோகனா தனசேகரன் சொல்லி விட்டாள்.ஸ்கூல் பிரின்சிபால் சந்திரவதனி பிரேயர் முடிந்ததும் பள்ளி மாணவியரைப் பார்த்தாள். ஒரு மாணவியின் பார்வைகூட அவள்மேல் பதிந்து இருக்கவில்லை. எல்லா மாணவிகளும் சுரேந்தரைத்தான் பார்வையால் விழுங்கிக் கொண்டு இருந்தார்கள்.  

சந்திரவதனி மாணவியரைப் பார்த்தாள்!

‘‘யுவர் பிடி மாஸ்டர் சுரேந்தர், வான்ட் டு ஸே சம்திங்...’’ என்று சொல்ல, மைக்கின் முன் வந்து ஸ்டைலாக நின்றார் சுரேந்தர்.  தனது காந்தக் கண்களால் சுற்றி மாணவியரைப் பார்க்க ஒவ்வொரு மாணவிக்கும் அவர் தன்னைத்தான் அதிக நேரம் பார்த்ததாக நினைப்பு.  

‘‘ஸ்டுெடண்ட்ஸ்! இந்த வருஷம் என்சிசி கேம்ப் ஏலகிரில நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அங்கே ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 13 நாள் தங்கப் போறோம். மொத்தம் 18 ஸ்டுடென்ட்ஸ் பெயர்களை தேர்ந்தெடுத்து இருக்கோம். வர்ற சனிக்கிழமை நம்ம கேம்ப் தொடங்குது.  

உங்களுக்குத் தேவையானதை எல்லாம் எடுத்துக்கங்க. அங்கே கடைகள் ரொம்ப இல்லை. அப்புறம் என்கிட்ட புகார் சொல்லி பிரயோஜனம் இல்ல. நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன்னு உங்களுக்குத் தெரியும். 

அங்கே வந்து பிரச்னை செஞ்சா எனக்கு கெட்ட கோவம் வரும்!’’ சுரேந்தர் காட்டமான குரலில்  பேச, அந்தக் கண்டிப்பான பேச்சு மாணவிகளை ஈர்த்தது .  என்சிசியில் சேராத மாணவிகள் பெருமூச்சு சிந்தினர். ஏலகிரி கேம்புக்கு புறப்படும் நாள் என்சிசி மாணவிகளுக்கு பெருத்த அதிர்ச்சி.  

தலைமை ஆசிரியை சந்திரவதனி வெடிகுண்டு ஒன்றை வீசினாள்.‘‘ஸ்டுடென்ட்ஸ்! சுரேந்தர் அம்மாவுக்கு ஒரு சர்ஜரி! அதனால் அவரால் கேம்ப் வர முடியல. அவருக்கு பதிலாக இங்கே நிற்கிற ஜோதிகுமார் சார், உங்களை கேம்ப் அழைச்சுக்கிட்டு போறாரு! பார்த்து நடந்துக்கங்க. ஏதாவது பிரச்னைனா எனக்கு போன் செய்யுங்கள்!’’மாணவிகள் முகங்கள் தொங்கிப் போயின.  ‘‘யாரடி இந்த ஜோதிகுமார்? பார்க்க கரடி மாதிரி இருக்கான். இவனோட 13 நாள் தங்கணுமா?’’ சுஷ்மிதா பல்லைக் கடித்தாள்.

‘‘இப்படி சுரேந்தர் சார் நம்மள டீலுல விடுவார்னு எதிர்பார்க்கவேயில்லை. ஏலகிரில எப்படியாவது சுரேந்தர் சாருக்கு என் மனசைத் திறந்து காட்டி அவர் காதலைப் பெறலாம்னு இருந்தேன்...’’ ரோஷ்ணி கூறினாள்.தலைவிதியே என்று ஜோதிகுமாருடன் பஸ் ஏறி, ஏலகிரி சென்றனர் மாணவிகள்.  

முதல் நாள் ஒரு மாதிரியாகப் பேசத் தொடங்கினான் ஜோதிகுமார். ‘‘ஸ்டுடெண்ட்ஸ்! இன்னைக்கு முதல் ட்ரைனிங், ரோப் ட்ரைனிங்! காதுல நல்லா வாங்கிட்டிங்களா? ரோப் ட்ரைனிங்! அப்புறம் வெளியே போய் ரேப் ட்ரைனிங்னு நான் சொன்னேன்னு கலாட்டா செஞ்சுடாதீங்க...’’‘‘எப்படி பேசறான் பாத்தியா?’’ சுரேந்தர் சார் நம்மகிட்ட என்னைக்காவது இப்படி பேசி இருக்கிறாரா?  எருமை மாடு குரலுல பேசிகிட்டு ஜோக் அடிக்கிறேன் பேர்வழின்னு வழியிறான்...’’ ஹேமா சொன்னாள்.பயிற்சி முடிந்ததும் மாணவிகள் குளித்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.  

இரவு பத்து மணி வாக்கில் முதலில் இருந்த மாணவியர் ரூம் கதவு தட்டப்பட்டது.மாணவியர் தயக்கத்துடன் கதவைத் திறக்க ஜோதிகுமார் பல்லைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான்.  
துரத்தும் சிறுத்தை, கிடைக்கும் மான்குட்டியைப் பிடிப்பது போல சற்று பின்னால் பயத்துடன் ஒடுங்கி நின்றிருந்த சாதனா என்கிற மாணவியை எட்டிப் பிடித்தான். 

‘‘என்னோட வா! யாராவது இது விஷயமா ஸ்கூல்லயோ உங்க அப்பா மாமாகிட்டயோ சொன்னீங்க... அவ்வளவுதான். எனக்கு தில்லி வரைக்கும் ஆள் தெரியும். புகார் சொல்றவளோட குடும்பத்தையே அழிச்சுடுவேன்...’’ என்றவன் சாதனாவை இழுத்துக் கொண்டு சென்றான்.  

சற்று நேரம் கழித்து சாதனா அழுதபடி வந்தாள்.‘‘என்னடி..?’’ ‘‘என்னை ஒன்னும் செய்யலை... ஆனால், என் போன் நம்பரை வாங்கிக்கிட்டான். சென்னை வந்ததும் அவன் சொல்ற லாட்ஜுக்கு நான் வரணுமாம். நான் குளிக்கிறதை போட்டோ புடிச்சு வச்சிருக்கானாம். அவன் கூப்பிட்டபோது நான் போகணும். நாளைக்கு உன்னைத்தான் கூப்பிடப் போறான் நளினி...’’ சாதனா கதறினாள்.  அடுத்த 13 நாட்களில் தினமும் ஒரு மாணவி என்று ஜோதிகுமார் அழைத்துப் போனான்.  

பஞ்சதந்திரக் கதையில் சிங்கத்துக்கு தாங்களே ஒரு மிருகத்தை அனுப்புவதாகக் கூறி நாளுக்கு ஒரு மிருகம் சென்று பலியானது போல் மாணவிகளை டைம் டேபிள் போட்டு அழைத்துச் சென்றான் ஜோதிகுமார். கடைசி நாள் பஸ் ஏறும்போது ஜோதிகுமார் மாணவிகளை அச்சுறுத்தினான். 

‘‘உங்க படங்கள் எல்லாம் என்கிட்டதான் இருக்கு. எவளாவது விஷயத்தை சொன்னீங்க... அவ்வளவுதான்...’’சென்னை வந்ததும் வீட்டுக்குச் சென்ற மாணவிகள் முயல் குட்டிகளாகப் பம்மினர். ஏதோ பிரச்னை என்று பெற்றோர் புரிந்துகொண்டார்கள். பெண்களை விசாரித்ததும் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொன்னார்கள்.  ‘‘என்சிசி மாஸ்டர் லாட்ஜுக்கு கூப்பிடறான்பா...’’ என்று கதறினார்கள்.

பெற்றோரும் மாணவிகளும் மறுநாள் ஸ்கூல் பிரின்சிபல் அறையில் ஆஜரானார்கள்.ஏதோ பிரச்னை என்றதும் தாளாளர் மோஹனா, தலைமை ஆசிரியை சந்திரவதனி, சுரேந்தர் அனைவரும் அவர்கள் முன்பாக நின்றனர்.  ‘‘என்னம்மா ஸ்கூல் நடத்தறீங்க? உங்க என்சிசி பொறுப்பாளர் பொறுப்பில்லாம நடந்திருக்கான். எங்க பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கான். பெண்கள் ஸ்கூல்ல எதுக்கு வயசு பையனை வேலைக்கு வச்சிருக்கீங்க?’’‘‘நானா உங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்?’’ சுரேந்தர் கேட்டார்.

‘‘உங்களை இல்லை சார்! அவர் கருப்பா குண்டா இருந்தார். நீங்க அப்படி எல்லாம் செய்யமாட்டீங்கனு எங்களுக்குத் தெரியும் சார்...’’‘‘ஜோதிகுமார்!’’ தாளாளர் மோகனா அழைக்க, ஜோதிகுமார் அலட்சியமாக நடந்து வந்தான்.‘‘அவன்தான் அப்பா!’’‘‘அவன்தான் அம்மா!’’ மாணவிகள் அலற, பெற்றோர்கள் ஜோதிகுமாரைத் தாக்குவதற்கு முன்னேற, சுரேந்தர் ‘‘ஒரு நிமிஷம்...’’ என்று கூறி அவர்களைத் தடுத்தார்.‘‘நான்தான் உங்க பெண்களுடன் கேம்ப்  போறதா இருந்தது.

நான் போகாத காரணம் உங்க பெண்கள் எனக்கு ஸ்கூலுல கொடுத்த டார்ச்சர்தான். எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிறதும், என்னைச் சுத்திச் சுத்தி வர்றதும், என்னைப் பற்றி கனவு காண்கிறதுமாக  இருந்தாங்க. 

உங்க பெண்களுக்கு புத்தி கற்பிக்கணும்னுதான் ஏலகிரில 13  நாள் கேம்ப் ஏற்பாடு செய்தோம்...’’  பெற்றோர்கள் பொங்கினார்கள். ‘‘அதுக்காக கண்டவன் கூட எங்க பெண்களை அனுப்பி வைப்பீங்களா? காட்டுமிராண்டி மாதிரி இருக்கான். அவனை மாணவிகளுடன் தங்க வைப்பீங்களா?’’‘‘வெயிட் எ மினிட்...’’ என்ற ஜோதிகுமார், தலையில் இருந்த விக்கைக் கழற்ற... நீளமான கூந்தல் சரிந்து விழுந்தது.  

‘‘ஐ அம் ஜோதிலட்சுமி! பெண்கள் சிறை வார்டன்! மோகனா மேடம் ஃபிரெண்ட். இந்த மாதிரி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு மோகனா கேட்டாங்க. சுரேந்தர் மேல விழுந்து லவ் லெட்டர் கொடுக்குறாங்க அப்படினு மோகனாவும் சொன்னார்.

சுரேந்தரும் என்னை சந்தித்து பெண்கள் ‘அவங்க ஆசிரியரான  என்கிட்டயே இப்படி பழகினா வெளியில் எப்படியெல்லாம் அவர்கள்  ஏமாற்றப்படுவாங்க..?  நீங்கதான் எங்களுக்கு ஹெல்ப் செய்யணும். அந்த மாணவிகளை என் தங்கையா நான் நினைக்கிறேன்’னு சுரேந்தர் சொன்னார்...’’ என்ற ஜோதிலட்சுமி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்தார்.

‘‘நான், மோகனா, சந்திரவதனி, சுரேந்தர் எல்லோரும் சேர்ந்து இந்தத் திட்டத்தைப் போட்டோம். பெண்கள் சொன்னாங்கனு என்னை அடிக்க வர்றீங்களே... பெற்றோரா நீங்க பெண்களுக்கு என்ன பாதுகாப்பு எடுத்திருக்கீங்க? ஏலகிரில நான் ஒவ்வொரு பெண்ணை என் ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போய் விசாரணை செஞ்சேன். அத்தனை பேரும் போன்ல கண்ட நம்பர்களை வச்சிருக்காங்க. எல்லாம் விடலைப் பசங்க! காலம் கெட்டுக் கெடக்கு. 

ஆனால், அவங்களுக்கு கொஞ்சம் கூட தங்களைப் பாதுகாத்துக்கணும், போராடணும்கிற
எண்ணமே இல்லை.ரூமுக்கு இழுத்துப் போய் கதவை மூடியதும், ‘என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க சார்! நானே கோவாப்ரேட் செய்யறேன்’னு ஒருத்தி சொல்றா. ஒருத்தி டாப்ஸைக் கழட்டுறா! தப்பிக்கணும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லை.

அவங்க குளிக்கும் ரூம்ல கேமரா வச்சிருக்காங்களானு குளிக்கிறதுக்கு முன்னாடி பார்க்கணும்.  நான் மிரட்டிய பிறகு மறுநாள் ஒவ்வொருத்தியும் கேமரா இருக்கானு  தேடுறாங்க...’’
ஜோதிலட்சுமி சொன்னார்.

சுரேந்தர் பெற்றோரைப் பணிவுடன் பார்த்தார். ‘‘உங்க பெண்களுக்கு இவ்வளவு நாள் நான் கற்றுக்கொடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் அவங்க பிரயோகம் செய்யலை. ஒருத்தன் அவங்கள அட்டாக் செய்கிறான் என்றால், அவன் மிரட்டலுக்கு கீழ்ப் படியக்கூடாதுனு ஒரு கோபம் வரணும். நாங்க சொல்லிக் கொடுத்த தற்காப்பு நடவடிக்கை எதையும் உங்க பெண்கள் பிரயோகிக்கல.  

ஏலகிரில அந்த 13 நாள் கேம்ப் நடத்தியது மாணவிகளுக்கு நாங்க வைத்த ஒரு எக்ஸாம்தான்.  அத்தனை மாணவியும் ஃபெயில்.  பெண்கள் பள்ளியில் பாதுகாப்பு இல்லைன்னு சொல்றீங்க. நீங்க உங்க பெண்களுக்கு என்ன விழிப்புணர்ச்சியைக் கொடுக்குறீங்க? உங்க பெண்கள் யாரோட பேசுறாங்க, மிட்நைட்ல என்ன செய்யறாங்கனு பாக்குறீங்களா? 

உங்க பெண்கள்ல எத்தனை பேர் எனக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புறாங்க  தெரியுமா? நான் எல்லாத்தையும் உடனடியாக டெலிட் செஞ்சுட்டு வரேன்.நான் சினிமா நடிகன் மாதிரி இருக்கேன் என்கிறதால நான் நல்லவன்,  நான் தப்பா நடக்க மாட்டேன்னு உங்க முன்னாடியே பேசுறாங்க. ஜோதிகுமார் கரடுமுரடா இருக்கிறதால அவன் கெட்டவன் என்ற அடிப்படையே தப்பான எண்ணம்.  

ஸ்மார்ட்டா இருந்தால் ஒருத்தன் கூட போயிடலாமா? அசிங்கமா இருந்தா ஒருத்தன் கெட்டவனா? முதல்ல உங்க பெண்களுக்கு சாப்பாட்டோட கூட பக்குவத்தையும் ஊட்டுங்க.
பக்குவம் இருந்தால் விழிப்புணர்வு தானாக வரும். நீங்க வீட்டுல விழிப்புணர்ச்சியை கொடுத்தால்தான் பள்ளியில ஈஸியா பாதுகாப்பு தர முடியும்...’’ சுரேந்தர் பெற்றோரை நோக்கி கைகூப்பினார். 

ஏலகிரி கேம்ப் வந்த அத்தனை மாணவிகளின் கண்களிலும் கண்ணீர். சுரேந்தரிடம் சென்று சாரி சொன்னார்கள்.  இப்போதெல்லாம்  பெனின்சுலார் கேர்ள்ஸ் ஸ்கூலில் மாணவிகள் சுரேந்தரின் மீது ஆசை வைப்பதில்லை. அளவு கடந்த மரியாதையைச் செலுத்துகிறார்கள்.

 - ‘காலச்சக்கரம்’ நரசிம்மா