நள்ளிரவில் பெண்கள் தினமும் நடப்பதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு!
பெண்கள் பாதுகாப்புக்கு ஓர் இயக்கம்
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக் கொலை மேற்கு வங்க மாநிலத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே பெண்களை உறங்கவிடாமல் செய்துவிட்டது.
நள்ளிரவில்கூட கொல்கத்தா நகரப் பெண்கள் அந்த வன்கொடுமையை எதிர்த்துக் கூட்டம் கூட்டமாக எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ‘‘ஒரு மோசமான நிகழ்வுக்குப் பின் அரங்கேறும் இதுபோன்ற எதிர்ப்புகள் மாற்றங்களைக் கொண்டுவராது. கொல்கத்தா மருத்துவரின் நள்ளிரவு பாலியல் வல்லுறவும் படுகொலையும் இனியும் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் அந்த நடு இரவை பெண்கள் கைப்பற்ற வேண்டும்...’’ என்கிறார் மல்லிகா தனஜா. ‘‘நள்ளிரவில் பெண்கள் தினமும் நடந்தால்தான் அவர்களுக்கு தைரியம் வரும், நடு இரவும் பாதுகாப்பானதாக மாறும், நகரமும் நகர மக்களும் மாறுவார்கள்...’’ என்ற நல் நோக்கத்துடன் அவர் ஆரம்பித்ததுதான் ‘நடு இரவில் பெண்கள் நடை’ (Women Walk at Midnight) எனும் அமைப்பு. 2016ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தில்லி மட்டுமல்லாமல் பெங்களூர், நொய்டா, ஃபரிதாபாத் போன்ற முக்கியமான நகரங்களில் இந்த நடைப் பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறது.
‘‘2012ல் தில்லியில் நிர்பயா பாலியல் வன்புணர்வுக் கொலை நிகழ்ந்தது. சில தினங்களில் நிர்பயா பயணித்து புறப்பட்ட அந்த பஸ் நிறுத்தத்தில் மாயா கிருஷ்ண ராவ் என்ற ஒரு நாடக ஆர்வலப் பெண் அந்த இடத்திலிருந்து நடந்துகொண்டே இந்த வன்கொடுமைக்கு எதிராக சில கவிதை வரிகளை வாசித்துச் சென்றார்.
இது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது...’’ என்று சொல்லும் தனஜா இதுகுறித்து பலவாறாக யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து 2016ம் ஆண்டளவில் ‘நடு இரவில் பெண்கள் நடை’ எனும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்.
‘‘முதல் நடைக்கு தில்லியைத்தான் குறிவைத்தேன். இரவு பத்து மணிக்கு மேல் இந்த நடை இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.
தில்லியில் எல்லா இடங்களுக்கும் போக்குவரத்து வசதி இருக்காது. ஒருவேளை போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்கு நடந்துசென்று பின் திரும்பி வருவதில் சிரமம் ஏற்படலாம்.
எனவே போக்குவரத்து வசதி இருக்கும் இடங்களைப் பார்த்து தேர்வு செய்தேன். பிறகு தனியாக நடப்பதில் ஒன்றும் பயனில்லை.
இரவையும் மாற்றவேண்டும், பெண்களுக்கும் தைரியம் வரவேண்டும், நகரத்திலும் நகர மக்களிடமும் நள்ளிரவில் பெண்களின் நடமாட்டம் பொதுவெளியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக ஒரு குழுவாக நடப்பதுதான் சரி என்று தோன்றியது. உடனே முகநூலில் அழைப்பு விட்டேன். என் அதிர்ஷ்டம் சில பெண்கள் சேர்ந்துகொண்டார்கள்...’’ என்று சொல்லும் தனஜா, தில்லியின் நடு இரவைப் பற்றிய தன் அனுபங்களையும் பகிர்ந்துகொண்டார்.‘‘ஒருசமயம் இதுபோன்ற ஒரு தில்லி நடையில் ஓர் ஆண் எங்களையே தொடர்ந்து வந்தான். வீட்டுக்குக் கிளம்புவதுதான் சரி என்று பட்டது. சில பெண்களும் எங்களுடன் இணைந்திருந்ததால் அவர்களை பொறுப்புடன் பாதுகாக்கவேண்டுமே என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.
உடனே ஒரு ஆட்டோவை புக் செய்தோம். ஆட்டோக்காரர் என்ன என்று எங்களிடம் கேட்டார். நடந்தவற்றை சொன்னோம். உடனே ஆட்டோவில் வைத்திருந்த ஒரு கட்டையால் எங்களைப் பின்தொடர்ந்தவனை நையப் புடைத்தார். அடிவாங்கிக்கொண்டே அந்த ஆண் எங்களைப் பார்த்தவாறே கைப்பழக்கத்தில் ஈடுபடத் தொடங்கினான்...’’ முகத்தைச் சுளித்து சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவர் தொடர்ந்தார்.
‘‘பொதுவாக நள்ளிரவுகளில் ஆண்கள்தான் அதிகமாகத் தென்படுவார்கள். ஒருவேளை பெண்கள் என்றால் அது பாலியல் தொழில் செய்யும் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் பொதுப் புத்தியில் இருக்கிறது. ஒருமுறை இரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களை ஓர் ஆண் சண்டைக்கு இழுத்துக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அந்த மூன்றாம் பாலினத்தவர்கள் அந்தப் பக்கமாக வந்த எங்களிடம் உதவி கேட்டார்கள்.
நாங்களும் களத்தில் இறங்கியதும் அந்த ஆண் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.இன்னொரு நடையில் நள்ளிரவில் பந்தோபஸ்து ஏற்பாடுகளில் ஈடுபடும் காவலர்கள் எங்களையே பின்தொடர்ந்தார்கள். போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொள்வது போன்ற தோற்றம். இது எங்கள் குறிக்கோளுக்கு எதிரானதாக இருக்கிறதே என்று காவலர்களிடம் பேசிப் பார்த்தோம். ஆனால், போலீசார் சம்மதிக்கவில்லை. இறுதியில் பெண் கான்ஸ்டபிள்கள் மட்டும் எங்களைப் பின்தொடர்வார்கள் என்றார்கள்.
எங்கள் குறிக்கோளுக்கு இதுவும் எதிரானதுதானே... மெல்ல பெண் காவலர்களிடம் டியூட்டி முடிந்ததும் ‘எப்படி வீட்டுக்குப் போவீர்கள்’ என்று கேட்டோம். ‘எங்கள் கணவர்கள் வருவார்கள்’ என்றார்கள்.தூக்கிவாரிப் போட்டது.
பெண் காவலர்களுக்கே நள்ளிரவு பாதுகாப்பானதாக இல்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சோறு பதம்...’’ என்ற தனஜா, பெருமூச்சுடன் தொடர்ந்தார். ‘‘பெண்கள் ஒரு குழுவாக எந்த நோக்கமும் இல்லாமல் நள்ளிரவில் தொடர்ச்சியாக நடக்கவேண்டும். நிர்பயா படுகொலைக்குப் பிறகு இந்த நடு இரவு நடையால் ஓரளவு தில்லி மாறியிருக்கிறது. பல இடங்களில் லைட் போட்டிருக்கிறார்கள். லைட் போட்டதால் நள்ளிரவும் வெளிச்சமாக இருக்கிறது. ஆனாலும் பாலியல் வன்முறைகள் தில்லியைவிட மற்ற நகரங்களில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது...’’ என்ற தனஜா, நடைப்பயணம் மேற்கொள்ளும் இடத்தை தேர்வு செய்யும் விதத்தையும் விளக்கினார். ‘‘சில ஏரியாக்களை தேர்வு செய்து அங்கே இருக்கும் ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு அந்த இடத்திலிருந்து நடக்க ஆரம்பிப்போம். அந்த பெண் வருவதால் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் உள்ள மற்ற பெண்களும் எங்களோடு நடப்பார்கள்.
உண்மையில் அவர்கள் இருக்கும் ஊரின் தெருக்களில்கூட அவர்கள் ஒருபோதும் நடந்ததில்லை என்பதுதான் உண்மை. தங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் சில தெருக்களில் மட்டுமே அவர்கள் நடந்திருக்கிறார்கள்.இதனால் இந்த நள்ளிரவு நடைப்பயணம் அந்தப் பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்துடன் ஒன்றிணைந்து பெண்கள் நடப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமை பலப்படுகிறது.இந்த நள்ளிரவு நடை இந்தியா முழுக்க அனைத்து நகரங்களிலும் பரவவேண்டும். அப்பொழுதுதான் நள்ளிரவு என்பதும் பெண்களுக்கு ஆபத்தான பொழுதில்லை என்ற நிலை உருவாகும். இதுதான் எங்கள் இயக்கத்தின் குறிக்கோள்...’’ என்கிறார் தனஜா.
டி.ரஞ்சித்
|