இந்தியாவில் நடந்த விமானக் கடத்தல்கள்...
‘IC 814: The Kandahar Hijack’ - இது, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி பலத்த சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கும் வெப்சீரிஸ்.கடந்த 1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகருக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 பற்றிய கதை. இதனை, ‘ஆர்டிக்கிள் 15’, ‘தப்பாட்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கியிருக்கிறார்.
இந்த வெப்சீரிஸ் வெளியானதுமே அப்போது அந்த விமானத்தில் பயணித்தவர்களும், களத்திலிருந்து செயல்பட்ட பத்திரிகையாளர்களும் தற்போது ஊடகங்களில் தங்கள் அனுபவங்களை பேசியும், எழுதியும் வருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே இந்தியில் 2008ம் ஆண்டு ‘Hijack’, மலையாளத்தில் 2010ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் ‘கந்தகார்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தும் இந்த வெப்சீரிஸ் சர்ச்சையாகக் காரணம் இந்த விமான கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளின் மத அடையாளங்கள் மறைக்கப்படுவதாக சில பார்வையாளர்கள் குற்றம் சாட்டியதுதான். கடந்த 1999ல் நடந்த இந்த விமானக் கடத்தல் சம்பவம் என்பது முதல்முறையாக நடந்ததல்ல. 1970களில் இருந்தே இதுபோன்று விமானங்களை ஹைஜேக் செய்கிற சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.
ஆனால், இதில் 1999ம் ஆண்டு நடந்த கந்தகார் விமானக் கடத்தல் சம்பவமே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. இந்தச் சம்பவத்தில் பயணி ஒருவர் கொல்லப்பட்டார். பலர் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தனர். பேச்சுவார்ததையும் ஆறு நாட்கள் நீடித்தது. தவிர, இதுவே இந்தியா சந்தித்த கடைசி ஹைஜேக் சம்பவமும்கூட. என்ன நடந்தது... இதுபோல் 1970, 80களில் நடந்த இந்திய விமான கடத்தல் சம்பவங்கள் என்னென்ன... ஆகியவற்றைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
1999ல் நடந்த கந்தகார் சம்பவம்
1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, நேபாள் தலைநகர் காத்மாண்டுவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சரியாக 4 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான ஐசி 814, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. இதில் 179 பயணிகளும், 11 விமானக் குழு உறுப்பினர்களும் பயணப்பட்டனர். விமானம் இந்திய வான்வெளி பரப்பிற்குள் சரியாக 4.40 மணிக்கு வந்ததும், முகமூடி அணிந்த ஐந்து தீவிரவாதிகள் விமானத்தின் காக்பிட் அறைக்குள் நுழைந்து விமானக் கேப்டன் உள்ளிட்ட குழுவினரை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து தில்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானம் கடத்தப்பட்டது தெரியவந்தது. விமானத்தில் இருந்த தீவிரவாதிகள் விமானத்தை பாகிஸ்தானின் லாகூருக்குக் கொண்டு போகும்படி மிரட்டல் விடுத்தனர். ஆனால், அங்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் விமானக் கேப்டன் எரிபொருள் குறைவாக இருப்பதாகக் கூறி விமானத்தை பஞ்சாப்பின் அமிர்தசரஸில் அவசரமாகத் தரையிறக்கினார்.
அப்போது லோக்கல் போலீசாருடன் தீவிரவாதிகள் பேச மறுத்தனர். எரிபொருள் நிரப்ப தாமதமானதால் தீவிரவாதிகள், ரூபின் கத்யால் என்ற பயணியைக் கடுமையாகத் தாக்கினர். விமானக் கேப்டன், பயணிகளைத் தாக்குவதாகவும் விரைவில் எரிபொருள் நிரப்ப வேண்டியும் கோரிக்கை வைத்தபடியே இருந்தார்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்புக் குழுவினர் விமானத்தை மீட்கும் செயலில் இறங்கினர். ஆனால், எதுவும் நடக்காததால் கேப்டன் அங்கிருந்து விமானத்தைக் கிளப்பினார். மீண்டும் லாகூரில் தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால், பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதி வழங்க மறுத்தது. ஏற்கனவே, அமிர்தசரஸில் எரிபொருள் நிரப்பாததால் கட்டாயம் தரையிறங்க வேண்டிய நிலை. இதனால் லாகூர் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு லாகூரில் தரையிறங்கியது விமானம்.இந்நிலையில் விமானம் வேறு எங்கும் செல்லமுடியாதபடி பார்த்துக்கொள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் படைகளும் விமானத்தைச் சுற்றியிருந்தனர்.
ஆனால், எரிபொருள் நிரப்பியதும் ஆப்தானிஸ்தான் தலைநகர் காபூலுக்குச் செல்லும்படி விமான கேப்டன் தீவிரவாதிகளால் மிரட்டப்பட்டார். அப்போது காபூல் விமானநிலையத்தில் இரவில் தரையிறங்கும் வசதியில்லை.இதனால், துபாயில் இரவு 1.30 மணிக்கு விமானம் தரையிறங்கியது.
பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் டிசம்பர் 25ம் தேதி 27 பயணிகள் விடுவிக்கப்பட்டனர். அமிர்தசரஸில் தீவிரவாதிகள் தாக்கியதால் இறந்துபோன ரூபின் கத்யாலின் உடலையும் துபாயில் இறக்கிவிட்டனர். பிறகு அங்கிருந்து காலை 6.20 மணிக்குக் கிளம்பிய விமானம், 8.30 மணிக்கு கந்தகார் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்பொழுது கந்தகார் தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்தது. துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். தாலிபான்களிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. அதுவரை இந்தியா, தாலிபான் ஆளுகையை அங்கீகரிக்கவில்லை. இதனால், எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. முதல்முறையாக பாகிஸ்தான் ஹைகமிஷனில் இருந்த இந்திய அதிகாரிகளும், ஐநாவைச் சேர்ந்தவர்களும் கந்தகார் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். ஆறு நாட்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்தது. உலகமே இதனை உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் ஆரம்பத்தில் இந்திய சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 36 தீவிரவாதிகளை விடுவிக்கும்படி கேட்டனர். இதனுடன் ஜம்முவில் புதைக்கப்பட்ட ஹர்கத் உல் முஜாஹிதீன் தலைவர் சஜ்ஜத் ஆஃப்கானியின் உடல் இருந்த சவப்பெட்டியும், கூடவே 200 மில்லியன் டாலர் பணமும் கேட்டனர்.நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மசூத் அசார், ஓமர் ஷேக், முஷ்டாக் ஜார்கார் ஆகிய அதிமுக்கிய தீவிரவாதிகளை விடுவிக்க இந்திய அரசு சம்மதம் தெரிவித்தது.
இந்த மசூத் அசார்தான் பின்னாளில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். 2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு இந்த அமைப்பே பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.இந்தக் கடத்தல் சம்பவம் டிசம்பர் 31ம் தேதி முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பயணிகள் இரண்டு சிறப்பு விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஐசி 814 விமானமும் டில்லி திரும்பியது.
1993 சம்பவங்கள்
கடந்த 1993ம் ஆண்டு நான்கு விமானக் கடத்தல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. 1993ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி லக்னோவில் இருந்து தில்லி சென்ற விமானத்தை சதீஷ் சந்திர பாண்டே என்பவர் கடத்தினார்.இதில் 48 பயணிகள் இருந்தனர். இந்த நபர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கைது செய்யப்பட்ட கரசேவகர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், அயோத்தியில் ராமஜென்மபூமியில் கோயில் கட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், பாபர் மசூதி மறுசீரமைக்கப்படும் என உறுதி அளித்ததற்கு எதிராகவே இந்தக் கடத்தலை மேற்கொண்டதாகக் கூறினார். பின்னர் அப்போது லக்னோவின் எம்பியாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பேச்சுவார்த்தை நடத்தியதும் சரணடைந்தார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இதே ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி தில்லியிலிருந்து சென்னை சென்ற இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 439ஐ ஹரிசிங் என்ற ஹரியானாவைச் சேர்ந்த டிரக் டிரைவர் கடத்தினார்.
அப்போது விமானத்தில் 192 பயணிகளும் 13 விமானக் குழுவினரும் இருந்தனர். விமானம் அமிர்தசரஸில் தரையிறக்கப்பட்டது. ஹரிசிங், இந்து-முஸ்லிம் சண்டை, நாடு முழுவதும் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தக் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதாகத் தெரிவித்தார். பின்னர் அவர் சரண்டரானார். அவருக்கு 2001ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்பிறகு, ஏப்ரல் 10ம் தேதி லக்னோவில் இருந்து தில்லி சென்ற இந்திய ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானத்தை லக்னோவைச் சேர்ந்த அரசுக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஹைஜேக் செய்தனர்.
லக்னோவிலிருந்து விமானம் டேக்ஆஃப் ஆன உடனே லக்னோவிற்குத் திரும்ப வலியுறுத்தினர். இதில் 52 பயணிகளும் 6 விமானக் குழுவினரும் இருந்தனர். அவர்கள் லக்னோ பல்கலைக்கழகத் தேர்வுகளை தள்ளி வைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஏனெனில் டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கலவரத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் நீண்டநாட்களாக லக்னோ பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. அதனால் தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என்றும், புதிய முதுநிலை பாடத்திட்டத்தைத் தொடங்குவதற்கு அரசு 50 மில்லியன் ரூபாயை தங்கள் கல்லூரிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததாக அப்போது போலீசார் தெரிவித்தனர். இதன்பிறகு, ஏப்ரல் 23ம் தேதி தில்லியிலிருந்து ஜம்மு வழியாக ஸ்ரீநகர் சென்ற உள்நாட்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 427ஒருவரால் கடத்தப்பட்டது. அப்போது விமானத்தில் 135 பயணிகளும், 6 விமானக் குழுவினரும் இருந்தனர்.விமானத்தை காபூலுக்குக் கொண்டு செல்லும்படி விமானக்கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டினார் அந்த நபர். லாகூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, விமானம் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அனுமதி மறுத்தது.
இதனால், விமானம் அமிர்தசரஸில் தரையிறக்கப்பட்டது. அப்போது அந்த நபருடன் பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த நபர் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தினார்.தேசிய பாதுகாப்புப் படையினர் ஒரு ஆபரேஷனை நடத்தி அந்த நபரைச் சுட்டுவீழ்த்தி பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் மீட்டனர். பின்னர் அந்த நபரின் பெயர் முகமது யூனஸ் ஷா எனத் தெரியவந்தது. அவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதனை அந்த அமைப்பு மறுத்தது.
1970களில் நடந்தவை
1971ல் ஜனவரி 30ம் தேதி ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு சென்ற இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஹசிம் குரேஷி மற்றும் அஷ்ரப் குரேஷி ஆகிய இருவரும் லாகூருக்குக் கடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் பயணிகளும், விமானக் குழுவினரும் மீட்கப்பட்டனர். பிறகு, விமானத்தைக் கடத்தல் காரர்கள் எரித்தனர்.
1976ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 737 தில்லியிலிருந்து மும்பைக்குக் கிளம்பியது. இதனை ஆறு தீவிரவாதிகள் கடத்தினர். லிபியாவிற்குச் செல்லும்படி கடத்தல்காரர்கள் கட்டளையிட்டனர்.எரிபொருள் நிரப்பவேண்டி லாகூரில் தரையிறக்கப்பட்டது. அப்போது இந்தியா-பாகிஸ்தான் உறவு மீண்டும் புதுப்பித்திருந்தது.
இதனால், பாகிஸ்தான் உதவியுடன் கடத்தல்காரர்களுக்கு நிறமற்ற மயக்க மருந்து கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டது.அப்படியாக கடத்தல்காரர்கள் பிடிபட்டனர். உள்ளிருந்த 83 பயணிகளும் மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 1980ல் நடந்த சம்பவங்கள்
1981ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 423, ஐந்து சீக்கியர்கள் கடத்தினர். இந்த விமானம் தில்லியிலிருந்து அமிர்தசரஸ் செல்ல இருந்தது. இதில் 111 பயணிகளும், 6 விமானக் குழுவினரும் இருந்தனர்.தல் கல்சா என்ற சீக்கிய அமைப்பு, காலிஸ்தான் தனி நாடு வேண்டி இந்த விமானத்தை லாகூருக்குக் கொண்டு சென்றனர். பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த நட்வர் சிங் கடத்தல்காரர்களிடம் பேசினார்.
காலிஸ்தான் இயக்கத் தலைவரான ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவை விடுவிக்கும்படி கேட்டனர். பின்னர் பாகிஸ்தான் கமாண்டோ படையினர் அதிரடி காட்டி பயணிகளை மீட்டனர். கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்.இதே ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஏர் இந்திய விமானம் 224 ஆப்ரிக்காவின் ஜாம்பியாவில் இருந்து மும்பை நோக்கி வந்தபோது கடத்தப்பட்டது. இதனை ஆயுதங்கள் வைத்திருந்த 43 கூலிப்படையினர் குழு ஹைஜேக் செய்தது.
இந்த விமானத்தில் 65 பயணிகளும், 13 விமானக் குழுவினரும் இருந்தனர். முதலில் சீசெல்ஸ் தீவின் மாஹேவில் எரிபொருள் நிரப்ப வேண்டி தரையிறக்கப்பட்டது.பின்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் சரணடைந்தனர். 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி தில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தை குர்பக்ஷ் சிங் என்கிற சீக்கிய போராளி கடத்தினார். அப்போது இந்திய அரசு கிர்பான் எனப்படும் சீக்கியர்களின் சிறிய வாளை விமானத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுத்தது. இதனால், விமானத்தை அவர் ஹைஜேக் செய்தார். அமிர்தசரஸில் விமானம் தரையிறங்கியது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சரணடைந்தார். 70 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.1984ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் 405 ஒன்பது சீக்கியர்களால் கடத்தப்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து தில்லி நோக்கி சென்றது இந்த விமானம். இதில் 254 பயணிகளும், 10 விமானக் குழுவினரும் இருந்தனர்.
விமானம் லாகூரில் தரையிறக்கப்பட்டது. ஜூன் மாதம் பொற்கோயிலில் நடந்த சண்டையின்போது கைது செய்யப்பட்ட அனைத்து சீக்கியர்களையும் விடுவிக்கக் கோரினர். மேலும் கோயில் சேதத்திற்கான இழப்பீடாக பணம் கேட்டனர். தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
பேராச்சி கண்ணன்
|