நடிகைகளுக்கு யாரும் கதை சொல்றதில்ல... இருட்டு அறையில் முரட்டுக் குத்து தவறான அடையாளத்தை எனக்கு தந்திருக்கு...



தமிழில் ‘சக்க போடு போடு ராஜா’, ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட சில படங்களுடன் தெலுங்கு, இந்தி, கன்னடம் என படு பிஸியாக இருக்கிறார் வைபவி சாண்டில்யா. கன்னடத்தில் உருவாகி 13 மொழிகளில் வெளியாகவிருக்கும் பான் இந்திய படமான ‘மார்ட்டின்’ படத்தின் ப்ரொமோஷன்களில் தற்போது படுபிசியாக இருந்தவருக்கு ஹாய் சொல்ல, முகம் மலர்கிறார் வைபவி . சிறுவயதிலிருந்தே சினிமாதான் கனவா?

வேறு எந்தத் திட்டமும் கிடையாது. சினிமாதான் என்பதில் கறாரா இருந்தேன். அப்பாவும் அம்மாவும் உன் விருப்பம் என்னவோ அதன்படி செய் அப்படின்னு சொல்லிட்டாங்க.
புனேதான் சொந்த ஊர். சில விளம்பரங்களில் நடிக்கத் துவங்கி அப்படியே சினிமாவுக்குள் வந்த பொண்ணு நான். நிறைய கனவுகள், நிறைய பெரிய இயக்குநர்கள் கூட வேலை செய்யணும் என்கிற எதிர்பார்ப்புடன் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால், அதற்காக கிடைக்கும் படங்களை எல்லாம் செய்யறதும் கிடையாது.

தமிழில் திடீரென இடைவேளை எடுத்துக் கொண்டது ஏன்?

நல்ல கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். அமையும்போது நிச்சயமாக நடிப்பேன். ஆனால், அதற்கு முன்னாடி தமிழில் எனக்கு ஒரு தவறான அடையாளமா ஒரு படம் அமைஞ்சிடுச்சு. அந்த அடையாளத்தை மக்கள் இந்நேரம் மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதுவரையிலும் ஒரு சின்ன பிரேக் எடுக்கணும்னு நினைச்சேன். அதுதான் தமிழில் பெரிதாக படங்கள் நடிக்காமல் போனதற்கு காரணம்.

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’... இந்தப் படம்தான் ஒரு தவறான முடிவு என நினைக்கிறீர்களா?

சினிமா அப்படின்னு வந்துட்டா எல்லாமே கேரக்டராதான் நான் பார்ப்பேன். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக, போல்டா நடிக்கவும் தயாரா இருக்கும் நடிகைதான் நான்.
ஆனால், இந்தப் படத்தைப் பொருத்தவரை என்கிட்ட முழுமையா கதை கூட சொல்லவே இல்ல. மொழி தெரியாத நடிகை என்றாலே பொதுவாகவே இந்திய சினிமாவில் கதை சொல்வதில் கூட ஒரு அலட்சியம் இருக்கு.

இந்தப் படம் ஒப்பந்தமாகி ஒரு வாரம் வரையிலும் எனக்கு இதுதான் கதை அப்படின்னு தெரியாது. ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு வாரம் கழித்துதான் என்னைச் சுற்றி நடக்கிற சம்பவங்களையும் நடிகர்கள் ரியாக்ட் செய்கிற விதத்தையும் பொருத்து நானா ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்... இது 18+ படம் அப்படின்னு. பொதுவாகவே முதல் பட ஹீரோவாக இருந்தாலும் அவர்கிட்ட முழுமையான கதை சொல்லிதான் படப்பிடிப்பு ஆரம்பிப்பாங்க. ஆனா, நடிகைகளுக்கு இந்த முக்கியத்துவம் கொடுக்கறதே கிடையாது.

எந்த நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் முழுக் கதையையும் சொல்லி அவங்ககிட்ட வேலை வாங்கணும் அப்படின்னு நான் நினைக்கிறேன். ரூ.10,000 வேலைக்கு போனால் கூட இதுதான் உங்க வேலை அப்படின்னு சொல்லிதான் வேலை வாங்குவாங்க. ஆனால், சினிமாவில்தான் நடிகைகளுக்கு கதை சொல்வதிலும் அவங்களுக்கான கேரக்டர் என்ன என்கிறதிலும் ஒரு அலட்சியம் தென்படுது.

பின்னர் ஏன் தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்தீர்கள்?

என்னை நம்பி ஒரு கேரக்டர் அல்லது ஒரு படத்தை கொடுத்துட்டாங்க. அதை முழுமையா முடிச்சுட்டு வெளியேறணும் அப்படின்னு நினைச்சேன். எடுத்துக்கிட்ட வேலையை பொறுப்பா முடிச்சுக் கொடுக்கிறது ரொம்ப முக்கியம். ‘படம் பிடிக்காமல் வைபவி வெளியேறிட்டா’ அப்படின்னு செய்தி வராது. ‘இந்தப் பொண்ணு பிரச்னைக்குரிய பொண்ணு’ அப்படின்னுதான் வெளியே செய்திகள் பரவும். அப்படியான செய்திகள் பரவுவதைக் காட்டிலும் இந்தப் படத்தில் நடிச்சிட்டு இனிமேல் இதை ஒரு பாடமாக எடுத்துக்கிட்டு நகரணும்னு நினைத்தேன்.
இப்போது கதை கேட்பதில்

மாற்றங்கள் செய்திருக்கீங்களா?

நிச்சயமா. இப்போதெல்லாம் ஒரு கதையை முழுமையா சொன்னா மட்டும்தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். கதை முழுமையா சொல்லுங்க அப்படின்னு கேட்கிறதாலேயே நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்காமப் போயிருக்கு. அப்புறம் ஒரு படம் போல்டாக நாம் நடிச்சிருந்தாலே அடுத்தடுத்து வரக்கூடிய படங்கள் அதே பாணியில்தான் வரும். அப்படிதான் எனக்கும் வந்தது. காத்திருந்தாலும் பரவாயில்லை... நல்ல கதைகளைக் கேட்டு தேர்ந்தெடுப்போம் அப்படின்னு படங்கள் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.

‘மார்ட்டின்’..?

பான் இந்தியா திரைப்படம். 13 மொழிகள்ல வெளியாகுது. துருவா சார்ஜாவுக்கு ஜோடி. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் இந்தக் கதையைக் எழுதி இருக்கிறார். ஏபி அர்ஜுன் இயக்கம். ரொம்ப பிரம்மாண்டமா படம் வந்திருக்கு. மிகப்பெரிய பட்ஜெட். பக்கா ஆக்‌ஷன் படமா இருக்கும். மொத்த செட்டுமே செம ஜாலியா ஃப்ரெண்ட்லியா இருந்துச்சு. ரிலீஸுக்காக காத்திருக்கேன்.

வளர்ந்து வரும் நடிகையாக மலையாள சினிமாவில் நடக்கும் பிரச்னைகளை எப்படி பார்க்கறீங்க?

சந்தோஷமா இருக்கு. குறைந்தபட்சம் நமக்கு ஒரு பிரச்னைனா கேள்வி கேட்க நம்மைச் சுற்றி நாலு பேர் இருக்காங்க என்கிற தைரியம் வந்திருக்கு. பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்னை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் எல்லா பொது இடங்களிலும் இருக்கு. ஆனால், சினிமாவை விட கொஞ்சம் குறைவா இருக்கு. பாதிக்கப்பட்ட பெண்களுக்குத்தான் என்னுடைய
ஆதரவுக் குரல் இருக்கும். அங்கே பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கிற அத்தனை பேருக்கும் என்னுடைய சல்யூட்.

எல்லா மொழி சினிமா துறையிலும் இந்த முன்னெடுப்பு நடக்கணும். ஆண்களைப் போல சக மனுஷியாதான் நாமளும் இந்த உலகத்தில் பிறக்கிறோம். நமக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள், இவ்வளவு பிரச்சனைகள்! எப்போதுமே கலாசாரத்தின் காவலர்களாகவே ஏன் பெண்களைப் பார்க்கறாங்க...

கலாசாரக் கடமை ஆண் பெண் ரெண்டு பேருக்குமே இருக்கு. அதை அவங்க அவங்க முடிவு செய்யட்டும். ஒரு பெண் உன் பார்வையில் தவறானவளாகவே இருந்தாலும் கூட அவ சம்மதம் இல்லாமல் தொடாதே... இதை இன்னும் வலிமையா ஒவ்வொரு துறையிலும் எடுத்து வைக்கணும்னு நான் நினைக்கிறேன். தமிழ் மட்டுமில்லாமல் இப்போ ஒவ்வொரு மொழியிலும் இந்தப் பிரச்னைகளை தைரியமாகப் பேச முன்வந்திருக்காங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.

கனவு திரைப்படம்?

இப்போதெல்லாம் காட்சிகள் உட்பட முழுமையா கேட்டுதான் படங்கள் தேர்வு செய்கிறேன். நிறைய பெரிய இயக்குநர்கள் கூட வேலை செய்யணும்னு கனவுகள் இருக்கு. மணிரத்னம் சார், வெற்றிமாறன் சார்கூட வேலை செய்யணும். இப்போ வெளியான ‘மகாராஜா’ படம் பார்த்துட்டு அவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு. இந்த மாதிரி படத்துல ஒரு சின்ன கேரக்டர் கிடைச்சா கூட ஒரு நடிகையா திருப்தியா இருக்கும்.

ஷாலினி நியூட்டன்