பாட்ஷாஸ்!
வேறு யார்... ஷாரூக் கானும் ரஜினி காந்தும்தான்!
முன்னவர் வட இந்தியா... மற்றவர் தென்னிந்தியா.ஆனால், இந்தியாவின் பாட்ஷாஸ் இவர்கள் இருவரும்தான்.ம்ஹும். நாம் சொல்லவில்லை. ஹுரும் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இப்படித்தான் இவர்கள் இருவரையும் பட்டியலிட்டிருக்கிறது!பொதுவாக ‘பாலிவுட் பாட்ஷா’ என்று ஷாரூக் கானை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். இது வெறும் பட்டமல்ல... பாலிவுட்டில், தான் நிஜமாகவே பாட்ஷாதான் என்று நிரூபித்திருக்கிறார் ஷாரூக் கான். ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் வரிசையில் ( Hurun India Rich List 2024) பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷாரூக் கான். பாலிவுட்டின் நம்பர் ஒன் நட்சத்திரம் என்ற பெருமையுடன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும், ரெட் சில்லீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கும் ஷாரூக் கானின் சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய் என்று கணக்கு போட்டிருக்கிறது ஹுருன் இந்தியா அமைப்பு.கடந்த ஆண்டு வெளியான ஷாரூக் கானின் ‘பதான்’ திரைப்படம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலுமாக சேர்த்து மொத்தம் 1,055 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டில் அவர் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலுமாக சேர்த்து 1,160 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்த ஆண்டில் வெளியான ‘டங்கி’ சுமாராக ஓடினாலும் உலக அளவில் 454 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்கிறது ஹுருன் இந்தியா அமைப்பு.
பணக்கார நட்சத்திரங்கள் பட்டியலில் ஷாரூக் கானின் தோழியும், பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா 2வது இடத்தில் இருக்கிறார். ஷாரூக் கானின் கேகேஆர் அணியின் மற்றொரு பங்குதாரரான ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு 4,600 கோடி ரூபாய். 2000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார் ஹ்ருத்திக் ரோஷன்.
பணக்காரர்கள் பட்டியலில் மட்டுமல்ல, அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலிலும் ஷாரூக் கானுக்கே முதல் இடம் இருக்கிறது. ‘ஃபோர்ப்ஸ்’ இந்தியா நிறுவனம் சமீபத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பட்டியலில், ஷாரூக் கான் ஒரு படத்தில் நடிக்க 150 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஒரு படத்தில் நடிக்க 125 கோடி ரூபாய் முதல் 175 கோடி ரூபாய் வரை வாங்குவதாக ‘ஃபோர்ப்ஸ்’ இந்தியா சொல்கிறது.
காம்ஸ் பாப்பா
|