டி-ஏஜிங்கில் கலக்கிய திரைப்படங்கள்!



திரைப்படங்களில் கதையின் தேவைக்கேற்ப நடிகர் அல்லது நடிகைகளின் தோற்றத்தை இளமைக்கு மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தை ‘டி - ஏஜிங் (de-aging) என்று அழைக்கின்றனர். 
பொதுவாக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை ஃபிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்துக்கொண்டிருக்கும் ‘த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திலும் டி -ஏஜிங்கைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதற்கு முன்பு டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முக்கிய திரைப்படங்கள் குறித்த ரவுண்ட் அப் இதோ...

எக்ஸ்- மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் ( X-Men: The Last Stand)

டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்திய முதல் படம் இது. இப்படத்தில் பாட்ரிக் ஸ்டூவர்ட் புரொஃபசர் எக்ஸாகவும், இயான் மெக்கெல்லன் மேக்னெட்டோவாகவும் நடித்திருப்பார்கள். இந்த இரு நடிகர்களின் ஃபிளாஷ்பேக் காட்சிகளை டி-ஏஜிங் முறையில்தான் படமாக்கியிருக்கின்றனர். டி-ஏஜிங் செய்யப்பட்டிருப்பதே தெரியாத அளவுக்கு அந்த நடிகர்களின் இளம் தோற்றம் கச்சிதமாக அமைந்தது.

இது அந்த கதாபாத்திரங்களுக்கு நிஜத்தன்மையைக் கொடுத்தது. ஒருவேளை அந்த கதாபாத்திரங்களை இளமையாக காட்ட ஒப்பனை செய்திருந்தால் கூட இந்தளவுக்கு உண்மைத் தன்மையைக் கொண்டு வந்திருக்க முடியாது என்று விமர்சகர்களே பாராட்டினார்கள். 2006ம் வருடத்தின் மத்தியில் வெளியான இந்த சூப்பர் ஹீரோ படம், சுமார் 3850 கோடி ரூபாய் வசூலையும் குவித்தது.

த டிபார்ட்டெட் (The Departed)

ஹாலிவுட்டின் முக்கியமான க்ரைம் திரில்லர் படங்களில் ஒன்று இது. புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸ் இயக்கத்தில் வெளியான இப்படம், நான்கு ஆஸ்கர் உட்பட 99 விருதுகளைக் குவித்திருக்கிறது. இப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஜாக் நிக்கோல்சன் நடித்திருந்தார். படத்தில்  எண்பதுகளில் நடப்பதைப் போன்ற முக்கியமான ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வரும். 

அப்போது இளம் தோற்றத்தில் ஜாக்கைக் காட்டுவதற்காக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைத்தான் மார்டின் பயன்படுத்தியிருந்தார். இனிமேல் கதாபாத்திரங்களின் இளம் தோற்றத்துக்கு டி- ஏஜிங் தொழில்நுட்பத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது , ‘த டிபார்ட்டெட்’.  இப்படம் 2006-ம் வருடத்தின் இறுதியில் வெளியானது.

ஹியூகோ (Hugo)

இதுவரை உலகில் வெளியான சிறந்த ஃபேண்டஸி படங்களில் இதுவும் ஒன்று. இந்த உலகிலிருந்து இன்னொரு உலகுக்கு அழைத்துச் செல்லும் இப்படத்தை மார்ட்டின் ஸ்கார்சிஸ் இயக்கியிருக்கிறார். 2011ல் வெளியான இந்தப் படம், ஐந்து ஆஸ்கர் விருதுகளைத் தன்வசப்படுத்தியிருக்கிறது. இதில் மெலிஸ் எனும் திரைப்பட இயக்குநர், நடிகர், பொம்மை தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்ட மெலீஸ் கதாபாத்திரத்தில் பென் கிங்ஸ்லி நடித்திருந்தார்.

ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் வருகின்ற மெலீஸின் இளம் தோற்றத்துக்காக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை நுணுக்கமாகப் பயன்படுத்தியிருந்தனர். அதாவது விஷுவல் எபெக்ட்ஸ்  என்று கண்டுபிடிக்க முடியாதபடி கிங்ஸ்லியின் தோற்றம் இருக்கும்.

த கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் (The Curious Case of Benjamin Button)

உலகளவில் பிரபலமான ஆங்கிலப்படம் இது. 2008ல் வெளியான இப்படத்தில், பெஞ்சமின் பட்டன் என்ற கதாபாத்திரத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் பிராட் பிட் நடித்திருந்தார்.
பொதுவாக எல்லோருக்கும் வயது ஏறு முகத்தில்தான் செல்லும். 

ஆனால், பெஞ்சமினுக்கோ இறங்கு முகத்தில் செல்லும். முதிய தோற்றத்திலிருந்து படிப்படியாக இளம்தோற்றத்துக்குச் செல்வார் பெஞ்சமின். அவரது பலவிதமான தோற்றங்களைக் கச்சிதமாக காட்ட டி-ஏஜிங்கை அருமையாக செய்திருப்பார்கள். இதன் காரணமாகவே இந்தப் படத்தின் விஷுவல் எபெக்ட்ஸுக்கு ஆஸ்கர் விருது தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரா.ஒன் (Ra.One)

டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் இந்தியப்படம் இதுதான். வீடியோ கேமை மையமாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டிருக்கும்.
சேகர் சுப்ரமணியம் மற்றும் வீடியோ கேம் கதாபாத்திரம் என இரண்டு ரோல்களில் ஷாருக்கான் நடித்திருப்பார். வீடியோ கேம் கதாபாத்திரம் போல ஷாருக்கானைக் காட்டுவதற்கு டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். 2011ல் வெளியான இந்த இந்திப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்திருக்கிறது.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame)

உலகளவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் இருக்கும் இரண்டாவது படம் இது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஈவான்ஸ், ஸ்கார்லெட் ஜொகான்ஸன், ஜெரிமி ரென்னர் என நிறைய கதாபாத்திரங்களை இப்படத்தில் டி-ஏஜிங் செய்திருக்கின்றனர். அதிக கதாபாத்திரங்கள் டி-ஏஜிங் செய்யப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். 2019ல் வெளியான இப்படத்தில் நடித்த நடிகர்கள் டி-ஏஜிங்கில் தோன்றும்போது திரையரங்குகளில் விசில் பறந்தன. சுமார் 200 டி-ஏஜிங் ஷாட்கள் இந்தப்படத்தில் உள்ளன.

ஆன்ட் - மேன் (Ant - man)

‘மார்வல் காமிக்ஸின்’ கதாபாத்திரங்களை வைத்து உருவான சூப்பர் ஹீரோ படம் இது. வசூலிலும் சக்கைப்போடு போட்டது. இதில் மைக்கேல் டக்ளஸ் ஹான்க்காகவும், மார்ட்டின் டோனோவேன் மிச்செல் கார்சனாகவும் நடித்திருந்தனர். 2015ல் வெளியான இப்படத்தில், 1989ல் நடப்பதைப் போன்ற ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வரும். அதில் மைக்கேலும், மார்ட்டினும் 25 வயதுடைய இளம் தோற்றத்தில் வருவார்கள். படத்தில் நடிக்கும்போது மைக்கேலுக்கு வயது 70; மார்ட்டினுக்கு 58. இருவரது 25 வயது தோற்றத்தையும் டி-ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் தத்ரூபமாகக் கொண்டு வந்து அசத்தினார்கள்.

லால் சிங் சத்தா (Laal Singh Chaddha)

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான இந்திப் படம் இது. பதின் பருவம், இளம் பருவம், நடுத்தர வயது என பல தோற்றங்களில் அமீர் கான் நடித்திருப்பார். அமீர் கானின் பதின்
பருவ தோற்றத்துக்காக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

ஜெமினி மேன் (Gemini Man)

சயின்ஸ் ஃபிக்‌ஷனும், ஆக்‌ஷனும் கலந்த கலவை இப்படம். ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஹாலிவுட்டின் பெரிய ஹீரோவான வில் ஸ்மித் நடித்தும் கூட இப்படம் நல்ல வசூலை எட்டவில்லை. இருந்தாலும் டி-ஏஜிங் தொழில்நுட்பத்தில் புரட்சியே செய்திருக்கிறது இந்தப் படம். ‘ஜெமினி மேனை’த் தவிர்த்துவிட்டு டி-ஏஜிங் படங்களைப் பட்டியலிடவே முடியாது. இப்படத்தில் வில் ஸ்மித்தைப் போலவே குளோனிங் செய்யப்பட்ட இளம் கதாபாத்திரத்தை டி-ஏஜிங் முறையில் வடிவமைத்திருக்கின்றனர். இதை டி-ஏஜிங்கின் அடுத்த கட்டம் என்கின்றனர்.

ஹியர் (Here)

வரும் நவம்பரில் வெளியாகப்போகும் ஹாலிவுட் படம் இது.  ராபர்ட் ஜெமிக்கிஸ் இயக்கத்தில் டாம் ஹேங்க்ஸ் மற்றும் ராபின் ரைட் நடித்திருக்கின்றனர். நியூ ஹைபர்ரியாலிஸ்டிக் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஜெனரேட்டட் ஃபேஸ் ரீபிலேஸ்மென்ட் மூலம் டி-ஏஜிங் செய்திருக்கின்றனர். ஒரே வீட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தினரைப் பற்றிய கதை என்பதால் டாம் ஹேங்க்ஸும், ராபின் ரைட்டும் பலவித தோற்றங்களில் வரலாம். அதனால் டி-ஏஜிங்கில் அதிக கவனம் செலுத்தியிருப்பதாகச் சொல்கின்றனர்.

த.சக்திவேல்