புதிய படங்களைவிட ரீ-ரிலீஸ் படங்கள் கல்லா கட்டுகிறதா?
சினிமா என்பது வணிகம் சார்ந்ததா, பொழுதுபோக்கு சார்ந்ததா என்ற கேள்விக்கு கலவையான பதில் வருவதை தவிர்க்க முடியாது. பொதுவாக சினிமாவை தங்கள் மனக்கவலையைப் போக்கும் மருந்தகமாக பார்க்கும் பார்வை மக்களிடம் உண்டு. அடித்தட்டு மக்கள் தொடங்கி, செல்வச் சீமான்கள் வரை பேதங்கள் கடந்து சங்கமிக்கும் தளமாகவும் திரையரங்குகள் விளங்குவதால் சினிமாவுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.
சேட்டிலைட், ஓடிடி என சினிமாவின் பரிமாணம் காலப்போக்கில் மாறியிருந்தாலும் தியேட்டர் அனுபவம் தனித்துவமானது, அலாதியானது என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். பிரபலங்கள் நடித்த படங்களாக இருந்தாலும் சரி, புதுமுகங்கள் நடித்த படங்களாக இருந்தாலும் சரி ‘கன்டன்ட்’ சரியாக இருந்தால் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கத் தயங்குவதில்லை. அந்தவகையில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட்டான ஏராளமான படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் நடைமுறை சமீப காலமாக உருவாகியுள்ளது. அவை வசூல் ரீதியாகவும் லாபகரமாக இருக்கின்றன என்பதுதான் ஹைலைட்.
சிவாஜி நடித்த ‘கர்ணன்’, ‘வசந்த மாளிகை’, எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வயது வித்தியாசம் கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.அதன்பிறகு ரஜினியின் ‘அண்ணாமலை’, கமலின் ‘ஆளவந்தான்’, ‘வேட்டையாடு விளையாடு’, விஜய்யின் ‘திருமலை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கில்லி’, ‘போக்கிரி’, அஜித்தின் ‘வாலி’, ‘சிட்டிசன்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, ‘3’, கார்த்தியின் ‘பையா’ உட்பட ஏராளமான படங்கள் வெளியாயின.
ரீ-ரிலீஸ் எப்படி நடைமுறைக்கு வந்தது?
திரையரங்குகளுக்கு கன்டன்ட் குறையும்போதும், புதிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாத நிலையிலும் இந்த யுக்தியைக் கையாள ஆரம்பித்தார்கள் என்கிறார்கள் சில சினிமா புள்ளிகள். சிறிய திரையரங்கமோ, பெரிய திரையரங்கமோ எதுவாக இருந்தாலும் திரையரங்க நிர்வாகம் என்பது எந்திரங்களோடு இயங்கும் தொழிற்சாலையை நடத்துவதுபோல் பெரிய பிராசஸ். விலையுயர்ந்த படக் கருவி, மின் அமைப்புகள், ஊழியர்கள் என பல கட்டமைப்புகளைக் கொண்டது.
சீராக நிர்வாகம் செய்ய வேண்டும் என்றால் திரையங்குகளில் படங்கள் தொடர்ந்து திரையிட்டால் மட்டுமே லாபம் கடந்து அனைத்தையுமே பராமரிக்க முடியும். அதை கருத்தில்கொண்டு பரீட்சார்த்த முறையில் சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. அதில் விஜய்யின் ‘கில்லி’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்களின் மறுவெளியீடு திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கொடுத்தது. எனவே ஃபிலிமில் எடுக்கப்பட்ட பல பழைய படங்களை டிஜிட்டல் வெர்ஷனுக்கு மாற்ற ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில் ரீ-ரிலீஸ் படங்கள் வெளியானதில் விநோதமான மூட நம்பிக்கையும் கடைப்பிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.உதாரணமாக அந்த பிரபல நடிகர் ஆன்மீகம், ஜோசியம் என ஐதீகத்தில் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை அவருடைய அடுத்த படம் தோல்வி காணும் என்று ஜோசியர் சொன்னதாகவும், அதைத் தவிர்க்க ஏற்கனவே தோல்வியடைந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து அந்தக் கணக்கை சரிசெய்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.
கமல் நடித்த ‘ஆளவந்தான்’ அன்று எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. நீளம் ஒரு காரணம் என்பதால் மூன்று மணிநேரப் படத்தை இரண்டு மணிநேரமாகக் குறைத்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்தார்கள். இந்த முயற்சி கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
முதன்மை நோக்கம்
தமிழ்நாட்டில் 1160 திரையரங்குகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு வாரத்துக்கு நான்கைந்து சிறிய படங்கள் வெளியானாலும் அவை அதிகபட்சம் 400 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன.
மீதமுள்ள தியேட்டர்களுக்கு என்ன செய்வது?
பழைய படங்கள்தான் துணையாக நிற்கின்றன. ஆனால், ரீ-ரிலீஸ் படங்கள் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அதன் தேவை இருக்கும் என்கிறார்கள் சினிமா களநிலவரம் அறிந்தவர்கள்.கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘வாழை’, ‘டிமான்டி காலனி’, ‘கொட்டுக்காளி’ உட்பட சில படங்களால் திரையரங்குகளுக்கு கணிசமான ‘கன்டன்ட்’ கிடைத்தது.
ஆனாலும் ‘வாழை’ 180 திரையரங்குகள், ‘டிமான்டி காலனி’ சில நூறு திரையரங்குகள், ‘கொட்டுக்காளி’ 90 திரையரங்குகள், மற்ற சிறிய படங்கள் தலா 50 திரையரங்குகள் என மொத்தமே நானூறு, ஐநூறு திரையரங்குகளுக்கு மட்டுமே புதிய கன்டன்ட் கிடைத்தது என்பதை உதாரணமாகச் சொல்கிறார்கள்.
கவர்ச்சி அம்சம்
ரீ-ரிலீசுக்காக பழைய படங்கள் டிஜிட்டலுக்கு தரம் உயர்த்தப்படுகின்றன. அப்போது படத்தின் நீளத்தைச் சுருக்குவது, ஃபிலிமில் எடுக்கும்போது ஃபிரேமில் தேவையற்ற அம்சங்கள் இடம் பிடித்திருந்தால் அதை நீக்குவது, ஹீரோ, ஹீரோயின் முகத்தில் ஏதேனும் ஷேடோ படிந்திருந்தால் அதை நீக்குவது என பல மாற்றங்கள் செய்ய முடியும்.
மிக எளிதாகச் சொல்வதாக இருந்தால் பழைய பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை ஃபோட்டோ ஷாப்பில் கரெக்ஷன் செய்து கலர் வடிவத்துக்கு கொண்டு வருவது மாதிரி எனலாம்.அந்தவகையில் ரீ-ரிலீஸ் படங்கள் நடிகர்களின் இமேஜை உயர்த்துகின்றன. கூடவே மறைமுகமாக பலருக்கு வேலை வாய்ப்ைபயும் வழங்குகின்றன. அனைத்துக்கும் மேலாக இப்படி டிஜிட்டல் செய்த பிறகு அதை - அதாவது பழைய படத்தை - ஓடிடிக்கு புதிதாக விற்க முடியும் என்பது வருமான ரீதியாக மிகப்பெரிய ப்ளஸ்.
இன்னொரு பக்கம் சேட்டிலைட், ஓடிடி வந்தபிறகு தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சினிமா உலகில் பரவலான பேச்சு உண்டு.
நாளடைவில் அதற்கான மோகம் குறைந்துவிட்டது என்ற சூழ்நிலை உருவாகும்போது ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் ரீ-ரிலீஸ் கலாசாரம் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
பொதுவாக சினிமாவை திரையரங்குகளில் பார்க்கும் அனுபவம் அலாதியானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை நிரூபிக்கும் வகையில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு தொடர்ந்து படை எடுப்பதைப் பார்க்க முடிகிறது.
திரையரங்கு அனுபவம் ரசிகர்களை எப்படி கட்டிப்போடுகிறது என்பதற்கு உதாரணமாக சென்னை புரசைவாக்கத்தில் இயங்கும் சரவணா திரையரங்கத்தைச் சொல்கிறார்கள். அங்கு தினமும் எம்ஜிஆர் நடித்த பழைய படங்கள் மட்டுமே திரையிடப்படுகிறதாம். தினசரி நான்கு காட்சிகளாக திரையிடப்படும் படத்தைக் காண சராசரியாக நூறிலிருந்து இருநூறு ரசிகர்கள் வந்துபோகிறார்களாம். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களின் படங்கள் ஆண்டுக்கு ஓரிரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அந்தப் படங்கள் அதிகபட்சமாக 30 நாட்கள் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.மீதமுள்ள நாட்களுக்கான கன்டன்ட் எங்கே என்ற கேள்வி வரும்போதுதான் ரீ-ரிலீஸ் படங்களுக்கான தேவையைப் பார்க்க முடிகிறது. அந்தவகையில் தியேட்டர்களுக்கான ‘ஃபீடிங்’கிற்காக உருவான நடைமுறைதான் ரீ-ரிலீஸ் கலாசாரம் என்று சினிமாவை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
விஷுவல் பியூட்டி
சினிமா காட்சி ஊடகம் என்பதால் அதன் அனுபவத்தை முழுமையாக திரையரங்குகளில் மட்டுமே கண்டுகளிக்க முடியும் என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
விஜய்சேதுபதி நடித்த ‘96’ படத்தில் இரவு நேரத்தில் அவரை முடி திருத்துவதற்காக த்ரிஷா அழை த்துச் செல்வது போல் ஒரு காட்சி உண்டு.
பெரிய அப்பார்ட்மென்ட் குடியிருப்பின் ஒவ்வொரு லைட்டும் அடுத்தடுத்து அணைக்கப்படுவது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை ரசிகர்கள் அகன்ற திரையில் பார்த்தபோது பரவச அனுபவம் பெற்றதாக சமூக வலைத்தளத்தில் கருத்து பகிர்வு செய்திருந்தார்கள். ஓடிடி வந்த பிறகு மக்கள் தங்கள் செல்ஃபோன் வழியாகவே திரைப்படங்களைக் காணும் வசதி உருவாகிவிட்டது. கையடக்க திரையில் முழுத் திருப்தி தராத நிலையில் அகன்ற திரையான திரையரங்குகள் மட்டுமே விஷுவல் அனுபவத்தைத் தருகின்றன. ‘‘மெயின் ரிலீஸ் படங்கள் இல்லாத நிலையில்தான் ரீ-ரிலீஸ் ஒர்க் அவுட்டாகிறது...’’ என்று ஆரம்பித்தார் தியேட்டர் உரிமையாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன்.
‘‘அப்படிதான் ‘கில்லி’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் சமயத்திலும் ஓடின. ‘கில்லி’க்கு பெரிய மேஜிக் நடந்தது. அதன் பிறகு சில படங்கள் வெளிவந்தன. ஆனால், பெரியளவில் கைகொடுக்கவில்லை. ‘கில்லி’ வெற்றி எப்படி சாத்தியமானது என்றால், அந்த சமயத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. அந்த வெற்றிடத்தை ‘கில்லி’ பூர்த்தி செய்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஏராளமான பெரிய படங்கள் வெளியாகும் சூழல் உள்ளதால் ரீ-ரிலீஸ் என்பது தற்போதைக்கு இருக்காது. அதேசமயம், ரீ-ரிலீஸ் என்பது எதிர்காலத்தில் இல்லாமலும் போகாது; தியேட்டர்காரர்களுக்கு பெரிய பாதகத்தையும் ஏற்படுத்தாது...’’ என்கிறார் சக்திவேலன்.
இதை ஆமோதித்தாலும் சற்றே மாறுபட்ட கருத்தையும் சொல்கிறார் மற்றொரு திரையரங்க உரிமையாளரும் தயாரிப்பாளருமான தாய் சரவணன். ‘‘ரீ-ரிலீஸ் என்பது அஜித், விஜய் என சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே கைகொடுக்கும். ‘கில்லி’ ரீ-ரிலீசுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பு ‘சச்சின்’ ரீ-ரிலீசுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆக, ரீ-ரிலீஸுக்கும் கன்டன்ட்தான் கிங்.
தியேட்டர் உரிமையாளராக சொல்வதாக இருந்தால் வேறு வழி இல்லாத காரணத்தால் ரீ-ரிலீஸ் படங்களை திரையிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தியேட்டரை திறக்காமல் வைத்திருக்க முடியாது. அப்படி திறக்கும்போது மின்சார பில், ஊழியர்கள் சம்பளம் என பல தேவைகளை சமாளிக்க வேண்டுமே!
ரீ-ரிலீஸ் எல்லா காலத்திலும் சப்போர்ட் பண்ணுமா என்றால் பண்ணாது என்பதுதான் பதில். நல்ல படங்கள் வெளிவர ஆரம்பித்தாலே எல்லா தியேட்டர்களுக்கும் கன்டன்ட் கிடைக்கும். சில சமயம் புது படம் ஹிட்டாகத் தவறும்போதுதான் ரீ-ரிலீசுக்கான தேவை உருவாகிறது. மற்றபடி பெரிய நடிகர்களின் படங்கள், கன்டன்ட் அடிப்படையிலான படங்கள் நன்றாக ஓடினால் ரீ-ரிலீசுக்கான தேவை இருக்காது...’’ என்கிறார் தாய் சரவணன்.
எஸ்.ராஜா
|