இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட்டை உருவாக்கி விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய சென்னை இளைஞர்!



‘‘இன்னைக்கு உலக அளவில் விண்வெளி சம்பந்தமான கண்டுபிடிப்புகள்ல இந்தியா வேகமாக வளர்ந்திட்டு வருது. இந்நேரத்துல இந்தத் துறையில் நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளின் தேவை ரொம்ப அவசியம். 
இதை மனதில் கொண்டுதான் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ருமி ஒன் ஹைபிரிட் ராக்கெட்டை உருவாக்கினோம். இது விண்வௌி ஆராய்ச்சியில் செலவைக் குறைக்கும். அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது...’’ கண்களில் நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் ஆனந்த் மேகலிங்கம்.

இந்தியாவில் முதல் முறையாக இவர் உருவாக்கிய ‘மீண்டும் பயன்படுத்தக் கூடியதான ருமி ஒன் ஹைபிரிட் ராக்கெட்’ சமீபத்தில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.இந்நிலையில்தான் ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆனந்த் மேகலிங்கத்தை சென்னை அருகே உள்ள தையூரில் அவரின் அலுவலகத்தில் சந்தித்தோம்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்துல உள்ள எப்போதும்வென்றான் கிராமம். அப்பா மேகலிங்கம் வேலை நிமித்தமாக இங்க கேளம்பாக்கத்துல செட்டிலாகிட்டார்.பாரத் பல்கலைக்கழகத்துல பி.டெக் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிச்சிருக்கேன். 2014ம் ஆண்டு அங்க சேர்ந்ததில் இருந்துதான் நான் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமாக வார்த்தெடுக்கப்பட்டேன்.

துறைத் தலைவர் டாக்டர் சுந்தர்ராஜ் சார் நிறைய ஊக்கப்படுத்துவார். நிறைய ஈவென்ட்ல கலந்துக்கோங்க, முயற்சி செய்யுங்கனு சொல்லிட்டே இருப்பார். அப்படியாக பேப்பர் பிளேன் செய்கிற போட்டியில் கலந்துக்கிட்டேன்.  இந்தப் பேப்பர் பிளேன் குழந்தைகளுக்கு செய்கிற மாதிரி செய்திட முடியாது. இது நீண்ட தூரம் போகணும். அதிக நேரம் காத்துல பறக்கணும். இப்படி போட்டிகள் இருக்கும். இதுல ஜெயிச்சேன். இதுதான் என் முதல் படி.

அப்புறம் கிளைடர், ஹைட்ரோ ப்ளஸ் வாட்டர் ராக்கெட்டரினு அடுத்தடுத்த போட்டிகள்ல ஜெயிச்சேன். கூடவே பேப்பர் பிரசன்டேஷன், சிம்போசியம், கான்ஃபரன்ஸ்னு நிறைய விஷயங்கள் கல்லூரிகள் அளவுல நடந்திட்டே இருக்கும். அதைத்தேடி கண்டுபிடிச்சு அந்தந்த ஈவென்ட்களுக்குப் போனேன்.

ஜெயிக்கணும் என்கிற எண்ணம் மட்டும் மனதில் ஓடிக்கிட்டே இருந்தது. என் துறைத் தலைவரும், பேராசிரியர்களும் நிறைய கத்துக் கொடுத்தாங்க. இதுதவிர கூகுள், யூடியூப்
 உள்ளிட்டவற்றிலும் செய்முறைகளைப் படிச்சேன். அப்புறம் செடியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது, தண்ணீரை எரிபொருளாக மாற்றி பைக்கை ஓட்டுறது எல்லாம் செய்தேன். இதுக்காக இளம் விஞ்ஞானி விருது வாங்கினேன்.  

தவிர, இளம் ஆராய்ச்சியாளர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதுனு நிறைய விருதுகளும் கிடைச்சது. பி.டெக் முடிச்சதும் அங்கேயே எம்எஸ் பை ரிசர்ச் படிச்சேன். அப்படியே ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக சேர்ந்தேன். இந்நேரம், 2018ம் ஆண்டு நாசாவில் எட்டு ஃபெம்டோ பேலோட்ஸ் (FEMTO payloads) லான்ச் பண்ணிேனன். ஃபெம்டோ பேலோட்ஸ் என்பது சிறிய செயற்கைக்கோள். க்யூப் மாதிரி இருக்கும். இதுல ஐந்து செயற்கைக்கோள் ராக்கெட்லயும், மூணு பலூன்லயும் செய்தேன்.

நாசாவுக்கு அனுப்பின இந்த ஃபெம்டோ செயற்கைக்கோள்கள் காற்றுல எவ்வளவு ஈரப்பதம் இருக்கு, எவ்வளவு நச்சுத்தன்மை இருக்கு, ஓசோன் சதவிகிதம் என்ன… இந்தமாதிரி நிறைய விஷயங்களைக் கண்டுபிடிக்கும். முதல்லயே இதுக்கான ஆவணங்கள் எல்லாம் அவங்களுக்கு நாம் சமர்ப்பிக்கணும். அப்புறம் அவங்க தேர்ந்தெடுப்பாங்க. அப்படியாக என்னுடைய எட்டு க்யூப் செயற்கைக்கோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனா, எனக்கு விசா கிடைக்காததால் என்னால் அங்க போகமுடியல. பிறகு ஆன்லைன் வழியாக லைவ்ல பார்த்தேன். அப்புறம், கல்லூரியில் ஆராய்ச்சியாளராக வேலை செய்துகிட்டே அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்போது கொரோனா வந்திடுச்சு. அப்ப வருமானம் போதல. அந்நேரம்தான் இந்த ‘ஸ்பேஸ் சோன் நிறுவன’ ஐடியா வந்தது...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘அரசின் எம்எஸ்எம்இனு சொல்லப்படுற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறுவனத்துல பதிவு பண்ணி இந்நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்ப நாசாவுல நூறு செயற்கைக்கோள்கள் அனுப்பினாங்க. அதுபோல நாமும் நூறு ஃபெம்டோ செயற்கைக்கோள்களை ஏன் பலூன்ல அனுப்பக்கூடாதுனு தோணுச்சு. 

நூறு செயற்கைக்கோள்களுக்கான டிசைன் பண்ணினேன். இதுக்கு பணம் தேவையாக இருந்தது. அப்ப டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச பவுண்டேஷனிடம் பேசினேன். இதை அப்துல்கலாம் சார் குடும்பத்தினர் நடத்துறாங்க. அவங்க பண்ணுங்கனு ஊக்கம் கொடுத்தாங்க.

பிறகு, மார்ட்டின் குரூப் நமக்கு ஸ்பான்சர் செய்தாங்க. அப்புறம், இதுசம்பந்தமான அரசுத்துறைகளிடம் அனுமதி வாங்கி 2021ம் ஆண்டு ராமேஸ்வரத்துல இருந்து நூறு ஃபெம்டோ செயற்கைக்கோள்களை பலூன்ல லான்ச் பண்ணினேன்.இந்தச் செயற்கைக்கோள்கள் காற்றின் ஈரப்பதம் என்ன, எவ்வளவு நச்சுத்தன்மை இருக்கு, காஸ்மிக் கதிர்வீச்சுகளின் விகிதம் எவ்வளவு, ஓசோன்ல டெட்ரோஃப்ளோரோ கார்பன் அதிகம் இருக்கும்... அதன் சதவிகிதம் என்ன... இதுமாதிரி ஒவ்வொரு விஷயங்களையும் பார்க்கும்.

இதனை பலூன்ல கட்டி அனுப்பினோம். செயற்கைக்கோளுடன் பாராசூட் கட்டி வச்சிருப்போம். மேலே 38 கிமீ தூரம் வரை போனதும், பலூன் வெடிச்சிடும். பிறகு, பாராசூட்ல போன ஃபெம்டோ செயற்கைக்கோள்களை கோவில்பட்டி அருகே மீட்டெடுத்தோம்.செயற்கைக்கோள்கள் போகும்போதே அதற்கான கணக்கீடு பணிகளைச் செய்திடும். இதுவே ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் முதல் மிஷன். இந்த மிஷனில் செயற்கைக்கோள்கள் உருவாக்கத்துல 1,347 மாணவர்கள் பங்கெடுத்தாங்க.

இதுல 800 மாணவர்களுக்கும் மேல் மார்ட்டின் குரூப்தான் ஸ்பான்சர் பண்ணினாங்க. இது சிறந்த வெற்றியைப் பெற்றது. இதுக்கு பிரதமர் மோடி வாழ்த்தினார். இந்த நூறு செயற்கைக்கோள்களின் கணக்கீடுகளையும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை சார் பார்த்து டேட்டாக்கள் நன்றாக இருக்குனு சொன்னார். இதன்பிறகு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் ராக்கெட் பண்ணலாம்னு தோணுச்சு.

இதற்காக இந்தியாவின் சந்திர மனிதன்னு அழைக்கப்படுகிற டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சாரிடம் பேசினோம். அவர் ஒரு டெக்கனிக்கல் டீம் உருவாக்கி நம் ராக்கெட்டை மானிட்டர் செய்தார். எல்லா டிசைனும் அப்ரூவல் வாங்கின பிறகே தயாரிப்புக்குப் போனது. அப்புறம், நாம் அசெம்பிள் செய்தோம். முதல் ஹைபிரிட் ராக்கெட் லான்ச்சை வெற்றிகரமாக கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னை அருகே திருவிடந்தையில் செய்தோம். இதுல 150 பிக்கோ செயற்கைக்கோள்கள் அனுப்பினோம்.

இவை எல்லாமே ஒவ்வொரு செயல்பாட்டுக்கானது. இந்த ஹைபிரிட் ராக்கெட், பிக்கோ செயற்கைக்கோள்களை வானிற்குக் கொண்டு போனபிறகு கடல்ல விழுந்திடும்.
பொதுவாக செயற்கைக்கோள்களைச் சுமந்துசெல்லும் ராக்கெட்டுகள் அவற்றை வளிமண்டலத்தில் நிலைநிறுத்திய பின் பூமிக்குத் திரும்பும்போது செயலிழந்து கடல்ல விழுந்திடும். இவற்றை மீண்டும் பயன்படுத்தமுடியாது.

எங்களின் முதல் ஹைபிரிட் ராக்கெட் அப்படிதான் ஆனது. இந்நேரம் இதை ஏன் மறுபயன்பாடாக மாற்றக்கூடாது என்கிற கேள்வி எழுந்தது. ஏன்னா, ஒரு ராக்கெட் செய்ய கோடிக்கணக்கில் பணம் செலவாகுது. அப்படி தயாரிக்கப்படும் ராக்கெட், செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பின் செயலிழந்து கடல்ல விழுந்திடுது. அதை மறுபயன்பாடாக மாற்றி தயாரிப்புச் செலவை குறைச்சால் என்னனு தோணுச்சு. அதாவது இதனால் 80 சதவீதப் பணத்தை மிச்சம் பண்ணமுடியும்.

இப்ப உதாரணத்திற்கு நாங்க ராக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்தோம். இந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும்போது எட்டு கோடி ரூபாய் வரை செலவு மிச்சமாகும். அப்ப பத்து முறை இதே ராக்கெட்ல செயற்கைக்கோளை அனுப்புனா 80 கோடி ரூபாய் மிச்சம் பண்ணலாம். இதுக்காக புதுசா ராக்கெட் செய்ய வேண்டியதில்ல. காசு செலவழிக்க வேண்டியதில்ல. இந்த ஒரு ராக்கெட்டை வச்சே லான்ச் பண்ணி பல கோடி ரூபாய்களை மிச்சமாக்கலாம். அப்படியாகவே மறுபயன்பாடு ஹைபிரிட் ராக்கெட் ஐடியா உதயமாச்சு.  
 
அதுக்காக நிறைய உழைச்சோம். இதோ... இப்ப இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ருமி ஒன் ஹைபிரிட் ராக்கெட்டை சென்னை அருகே அதே திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தியிருக்கோம். இந்தமுறை ஹைட்ராலிக் மொபைல் லான்ச் பேடை ரெடி பண்ணிக் கொண்டுவந்து அதிலிருந்து ராக்கெட்டை அனுப்பினோம். 

இந்த ராக்கெட்டை எட்டு முறை லான்ச் பண்ணலாம். அதாவது எட்டுமுறை பயன்படுத்திக்கலாம்...’’ எனப் பெருமிதமாகச் சொன்னவர், தொடர்ந்தார். ‘‘இந்தியாவில் இதுதான் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட். உலகளவில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், சீனா உள்ளிட்டவை பண்ணியிருக்காங்க. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்ல இருக்காங்க.  

எங்களின் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட் 3 க்யூப் செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது. இதை காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் தரம் உள்ளிட்ட வளிமண்டல நிலைகளைக் கண்காணிக்கவும், அதுகுறித்த விவரங்களைச் சேகரிக்கவும் வடிவமைச்சோம். இதன் வாழ்நாள் எட்டு மணி நேரம்தான்.

இந்த ராக்கெட் 35 கிமீ தூரம் உயரே போகும். கடல் பகுதியினுள் 9.8 கிமீ தூரம் செல்லும். இந்த ராக்கெட்ல ஒரு பாராசூட் இருக்கும். ராக்கெட் தன் செயல்பாட்டை முடிச்சதும் பாராசூட் விரிந்து கடல்ல விழும். அது எங்கே விழும்னு நாங்கள் முன்கூட்டியே கணக்கிட்டு வச்சிருந்தோம். அங்க போய் ராக்கெட்டை எடுத்தோம்...’’ என்கிறவரிடம் ஹைபிரிட் குறித்து கேட்டோம். ‘‘பொதுவாக ராக்கெட் உந்துசக்தி முறையில் Solid propulsion system, Liquid propulsion systemனு இரண்டு சிஸ்டம் இருக்கு. Solid propulsion system என்பது திட உந்துசக்தி முறை.

இது தீபாவளி ராக்கெட் மாதிரிதான். பத்த வச்சதும் எரிந்து மேலே போயிடும். அதை எரிஞ்சு முடிக்கிற வரைக்கும் கண்ட்ரோல் பண்ணமுடியாது. திரவ உந்துசக்தி முறையில நிறைய ட்யூப்ஸ், பைப் ஃபிட்டிங்ஸ் எல்லாம் இருக்கும். இது வெடிக்கக்கூட சான்ஸ் இருக்கு. செலவும் அதிகம். இதை கண்ட்ரோல் செய்யலாம்.

ஆனா, ஹைபிரிட் எனும் நவீன தொழில்நுட்ப உந்துசக்தி முறையில் திரவ ஆக்சிஜன் ஏற்றம் மற்றும் திட எரிபொருள் உந்துசக்தி ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து செயல்திறனை மேம்படுத்துறோம். இது நமக்கு ரொம்ப பாதுகாப்பானது. செலவும் குறைவு. எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது. 

சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. அதனால், இதை பயன்படுத்தினோம்.  இப்ப ருமி ஒன் வெற்றியடைஞ்சிருக்கு. இதுல ருமி என்பது என் பையன் ருமித்ரனின் பெயர். நான் அவனுடன் இருக்கிற நேரம் ரொம்ப குறைவு. இந்த ராக்கெட்டுடன்தான் அதிக நேரம் செலவழிக்கிறேன். அதுக்காகவே அவன் பெயரை இந்த மிஷனுக்கு வச்சேன்.

என் மனைவி அருணாதேவியும் என்னுடன் நிறுவனத்துல வேலை செய்றாங்க. அவங்க கோடிங் செக்‌ஷனை பார்த்துக்கிறாங்க. எனக்கு நிறைய சப்போர்ட் தர்றாங்க...’’ என்கிற ஆனந்த் மேகலிங்கம், அடுத்து ருமி 2, ருமி 3 திட்டங்களுக்காக உழைத்து வருகிறார்.  ‘‘அடுத்த ஆண்டு ருமி 2 ராக்கெட்டை லான்ச் பண்ணலாம்னு இருக்கோம். இப்ப ருமி 1, 80 கிமீ போகக்கூடியது. அதுல பேலோடாக 50 கிலோ வரை எடுத்திட்டு போகலாம். அடுத்து தயாராகும் ருமி 2,250 கிமீ உயரமும், 250 கிலோ பேலோடும் எடுத்திட்டு போறமாதிரியானது.

இதேபோல ருமி 3, 500 கிமீ உயரமும், 500 கிலோ பேலோடும் எடுத்திட்டுப் போகக்கூடியதாக வடிவமைப்பு செய்றோம். இப்ப செயற்கைக்கோளை நிறைய பேர் உருவாக்குறாங்க. அவங்க அதை எங்க ராக்கெட்ல வச்சு லான்ச் பண்ணணும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அதை நோக்கியே பயணிக்கிறோம்...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் ஆனந்த் மேகலிங்கம்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்