பாதவத்தி...
‘வாழை’ படத்தின் இறுதிக் காட்சியில் எல்லோரையும் உலுக்கி எடுத்து அழவைத்து அனுப்பிய பாடல் ‘பாதவத்தி...’ இந்தப் பாடலில் தோன்றி, பாடி நடித்தவர் நாட்டுப்புற பாடல் நாயகர் முனைவர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தி. ஆளுமை நிறைந்த குரலுக்கு சொந்தக்காரரான சித்தன், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இசை பயின்று, பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் இசை ஆராய்ச்சியில் இறங்கி, கெஸ்ட் புரொஃபசராக வலம் வந்தவர்.
பார்க்க ஒரு பாப் சிங்கர்போல இருக்கும் சித்தன், மேடைகளில் மைக் பிடித்து ஆக்ரோஷமாகப் பாடுபோது, இவரின் நீண்ட சுருள் முடி காற்றில் அசைந்தாடும் காட்சி, சித்தன் ஜெயமூர்த்தியின் முக்கிய அடையாளமாகவே இருந்தது.மக்கள் இசை, நாட்டுப்புறப் பாடல்கள், வாழ்வியல் பாடல்களைப் மேடைகளில் பாடிவந்த நிலையில், அவ்வப்போது திரையிசைப் பாடல்களைப் பாடுகிற வாய்ப்பும் அமைந்தது என்றவர், ‘‘‘தவமாய் தவமிருந்து’ படத்தில் ‘ஆட்காட்டி... ஆட்காட்டி...’ பாடலைப் பாட இயக்குநர் சேரன் என்னை அழைத்து வந்தார்.
ஆனால், இரண்டாவதாக ‘கில்லி’ படத்தில் நான் பாடிய ‘கபடி கபடி...’ பாடலே திரையில் முதலாக வெளிவந்தது. தொடர்ந்து கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் அறிமுகப்படுத்த, ‘சிவப்பதிகாரம்’ படத்திலும் பாடினேன்...’’ புன்னகைக்கிறார் சித்தன் ஜெயமூர்த்தி.
‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா...’ பாடலை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பாடியதையும், ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் பாடிய ‘ஜிகிரி தோஸ்து...’ பாடலையும் குறிப்பிடும் சித்தன், ‘‘200 படங்களுக்கு மேல் நான் பாடியிருந்தாலும் இதுவரை 100 பாடல்கள் மட்டுமே திரையில் இடம்பெற்றுள்ளது...’’ என்கிறார்.
‘‘ஏற்கனவே ‘கர்ணன்’ படத்தில் பாடுவதற்கு மாரிசெல்வராஜ் சார் என்னை அழைத்திருந்தார். ஆனால், நடிகர் லால் சாருக்கு என் குரல் செட்டாகவில்லை. அதன் தொடர்ச்சிதான் ‘வாழை’ படத்தில் ‘பாதவத்தி...’ பாடலைப் பாட அழைத்தது.
இந்தப் பாடலை நான் பாடி முடித்தபோது, ‘‘இறுதியில் டைட்டில் கார்டு போடும்போது இந்தப் பாடல் வரலாம்’’ என இயக்குநர் சொல்ல, ‘டைட்டில் கார்டு போடும்போதா... அப்படீன்னா யாரும் பார்க்க மாட்டாங்க... கிளம்பீருவாங்க...’ என நினைத்தபடியே பாடிக்கொடுத்துவிட்டு வந்தேன்.இருபதுநாள் கழித்து சாங் ப்ரொமோ ஷூட் செய்யனும்... வரமுடியுமா எனக் கேட்டார்கள். அந்த நேரம் நான் ஒரு நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்தில் இருக்க, எனக்காக தேதியை ஒரு மாதம் தள்ளிவைத்து மீண்டும் அழைத்தார்கள்.
திருநெல்வேலி கிராமத்திற்குள் எங்கெங்கோ நுழைந்து இறுதியாக ஒரு வாழைத் தோப்பிற்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கு மிகப் பெரிய செட் போடப்பட்டு ஒரு பெரும் கூட்டமே படப்பிடிப்புத் தளத்தில் நிற்க, கூட்டத்தைப் பார்த்ததுமே எனக்கு பக்கென்றது. என்னைப் பார்த்ததுமே இயக்குநர், ‘அண்ணே முடியை கொஞ்சம் வெட்டீரலாமா’ எனக் கேட்டார். நான் பட்டுன்னு சரி சொன்னாலும், மனசுக்குள் என்னவோபோல் இருந்தது.
தேனி ஈஸ்வர் சார், ‘முடிய வெட்டாமலே வேறு மாதிரி யோசிக்கலாமே’ எனச் சொல்ல, ‘அப்படியா’ என நகர்ந்த இயக்குநர், சற்று நேரம் கழித்து வந்து, ‘இல்ல இல்ல முடிய வெட்டீருங்க...’ எனச் சொல்லிவிட்டார். கொஞ்சம்தான் வெட்டுவாங்கன்னு நினைத்தேன். ஆனால், இயக்குநர் ‘மொட்டை அடித்து முளைச்ச மாதிரித் தெரியனும்’ எனச் சொல்லிவிட்டார். பிறகு குட்டி குட்டியாய் இருந்த முடியையும் வெள்ளையாக்கி பாடலை ஷூட் செய்தார்கள்.
‘பாதவத்தி...’ பாடலை லிப்சிங் செய்வதற்கு முழுமையாகக் கேட்டு மெமரி செய்யச் சொல்லி இயக்குநர் சொல்ல, பாடலை மனசுக்குள் கொண்டுபோக முடியாத அளவுக்கு மனசு என்னவோ செய்தது. முடி இழந்த கவலையோடு, பாட்டும் என்னைத் தொந்தரவு செய்ய, ‘என்னால முடியல, நான் இதிலிருந்து விலகிடவா’ எனக்கேட்டு இயக்குநர் முன் நின்றேன். ‘உங்களைத் தவிர்த்து வேறு யாரையும் என்னால யோசிக்க முடியல. நீங்கதான் இதைப் பண்ணணும்’ என இயக்குநர் அழுத்தமாய் சொல்லிவிட்டார்.
மனசைக் கல்லாக்கி, கண்ணை மூடி அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு ‘நான் ரெடி’ என்றேன். ஆனாலும் கொஞ்சம் உதறல் இருந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கூத்துக் கலைஞராக நடித்த பெரியவரின் நேர்காணலில், அவருக்கு ஆட வரலை என்றதும் இயக்குநர் அறை விட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. நமக்கும் அது நடந்துருமோங்கிற எண்ணம் வர, தோன்றியதை லிப்சிங்கில் என் போக்கில் செய்து முடித்தேன்.
என்னைப் பாராட்டிய இயக்குநர், ஒன்றரை மணி நேரத்தில் அந்தக் காட்சியைப் படமாக்கி முடித்துவிட்டார். இயக்குநரின் மனதில் ஒரு கேரக்டர் இருந்திருக்கு. அதை என் வழியில் எப்படியோ கொண்டுவந்துட்டாரு...’’ எனப் புன்னகைக்கிறார் சித்தன்.‘‘முடி இழந்த என் முகத்தைப் பார்த்து வீட்டில் என் மனைவி, மகள், என்னுடைய இசை ரசிகர்கள் எல்லாம் ‘இது ஜெயமூர்த்தியே இல்லை’ என கிண்டலடித்தார்கள். படம் வெளியாவதற்கு முதல்நாள் உதவி இயக்குநருக்கு போன் செய்து, ‘படத்தில் என் பாட்டு வருதா’ எனக் கேட்டு உறுதி செய்துவிட்டு, ஐம்பது டிக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து, தெரிஞ்சவுங்க உறவுக்காரங்களை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரியில் ‘வாழை’ படம் பார்க்க சென்றோம்.
படத்தில் எல்லா பாட்டும் வருது. மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால், கடைசிவரை என் பாட்டைக் காணோம். படம் முடியும்போது இயக்குநர் பெயர் உள்ள டைட்டில் கார்டும் போட்டாச்சு. ‘இந்தப் படத்திலும் என் பாட்டு வரலை’ என சீட்டைவிட்டு எழுந்துவிட்டேன்.தியேட்டரில் லைட்டும் போட்டாச்சு... பார்த்தால் என் குரல் வருது. திரையில் அந்தப் பையன் வாழைத்தோப்புக்குள் குதிச்சு ஓடுறான்... கேமராவும் பின்னாடியே ஓடுது.
அதன்பிறகு சீட்டைவிட்டு மக்கள் யாருமே எழவில்லை. அமைதியா படம் பார்க்கறாங்க. பாட்டு முடிஞ்சதும் எல்லோரும் தலையைக் குனிந்தபடி வெளியில் வர, நானும் வெளியில் வந்து அமைதியாக நின்றேன். பிறகுதான் தெரியுது, என் வீட்டில் மகளில் தொடங்கி எல்லோருமே அழுதிருக்காங்க என்று. அந்தப் பாட்டும் காட்சியும் எல்லோர் மனதையும் அப்படியே உலுக்கி எடுத்துருச்சுங்க...’’ நெகிழ்கிறார் சித்தன்.
‘‘இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு நன்றி சொல்ல என்னோட இந்த ஒரு ஜென்மம் போதாது. இனி மேடைகளில் இந்தப் பாட்டை பாடச் சொல்லிதான் எல்லோரும் கேட்பாங்க...’’ இழந்துவிட்ட சுருள் முடியைத் தடவிப் பார்த்தவாறே விடைபெற்றார் சித்தன் ஜெயமூர்த்தி.
மகேஸ்வரி நாகராஜன்
|