ஆண் இல்லாத ஊரிலே... பெண் என்ன செய்வாள்..?
ஷாக் தரும் மரபணு அறிவியல் ஆய்வாளர்களின் அறிக்கை
அதிர்ச்சி, திகைப்பு, நம்ப முடியாத சூழல்... எல்லா உணர்வையும் மூட்டை கட்டி வையுங்கள். நிஜம் இதுதான்.ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் Y குரோமோசோம் படிப்படியாக அழிந்து வருவதாகவும் இதனால் எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம் என்றும் கொளுத்திப் போட்டிருக்கிறது மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை.
என்ன காரணம்?
ஆண்களே இல்லாமல் போனால் எப்படி மனித இனம் தழைக்கும்?
இதை தவிர்க்க முடியுமா?
மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் பெயர் ஆட்டோசோம்கள். இவை ஒருவரின் சரும நிறம், உடல் வாகு, கண்ணின் நிறம் மற்றும் இதர உடல் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்பவை. 23வது குரோமோசோம் ஜோடிதான் - ஒருவரின் பாலினத்தை - அதாவது பெண் அல்லது ஆண் என்று உருவாக்கும் வல்லமை பெற்றதாக உள்ளது.எக்ஸ், ஒய் என்ற இரண்டு குரோமோசோம்கள் கொண்ட இந்த ஜோடியில் இரண்டும் எக்ஸ் ஆக இருந்தால் அது பெண்மைக்கான குரோமோசோம். ஒரு எக்ஸ் ஒரு ஒய் ஆக இருந்தால் அது ஆண்மைக்கான குரோமோசோம்.
ஒரு மனித சிசு கருவுக்குள் உண்டான நாளில் இருந்து 12வது வாரம் வரை பாலினம் ஏதுமின்றி பொதுவான மனித சிசுவாக வளருகிறது. அந்த சிசு உருவாக தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்தணுவும் ஒன்றாக இணைந்து கரு உருவாகிறது. தாயிடம் இருந்தும் தந்தையிடம் இருந்தும் தலா ஒரு எக்ஸ் குரோமோசோம் ஒன்றிணைந்தால் அந்தக் குழந்தை பெண் குழந்தையாக வளரும்.
தாயிடம் இருந்து எக்ஸ் குரோமோசோமும் தந்தையிடம் இருந்து ஒய் குரோமோசோமும் சேர்ந்தால் 12வது வாரத்தில் அந்த ஒய் குரோமோசோமில் இருக்கும் எஸ்ஆர்ஒய் (SRY) எனும் மரபணு தூண்டப்பட்டு அதன் விளைவாக உடல் அங்கங்களை உருவாக்கப் பயன்படும்.
22 ஜோடி ஆட்டோசோம்களில் எஸ் ஓ எக்ஸ் 9 எனும் இடம் தூண்டப்பட்டு - ஆணின் இனப்பெருக்க உறுப்பான விதைப்பை உருவாகிறது. கருவுக்குள் இருக்கும்போதே அந்த விதைப்பையில் இருந்து ஆண்மைக்கான ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு, அதுவரை பாலினமின்றி இருந்த சிசு ஆண் குழந்தையாக வளரத் தொடங்குகிறது.இதுதான் அறிவியல்.இச்சூழலில்தான் சமீப ஆய்வு முடிவுகளில் பெண்மைக்கான எக்ஸ் குரோமோசோம் நீளத்தில் பெரிதாக உள்ளதும், ஒய் குரோமோசோம் சிறிதாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தவிர, எக்ஸ் குரோமோசோமில் 1600 ஜீன்கள் உள்ளதும் அதில் முக்கியமான பணியாற்றும் 900 ஜீன்களாவது உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒய் குரோமோசோமில் பாலினத்தை முடிவு செய்யும் பணியைச் செய்யும் ஜீன்கள் 55 என்ற அளவில் மட்டுமே உள்ளன.
இப்படி சிறுகச் சிறுக ஒய் குரோமோசோமில் உள்ள ஜீன்களின் இழப்பு ஏற்பட்டால் நாளடைவில் மனித இனத்தில் ஒய் குரோமோசோம் இல்லாமல் போகலாம் என்றும், ஒய் குரோமோசோம் இல்லாமல் போனால் இனப்பெருக்கம் ஏற்படாமல் தடைபடவும் வாய்ப்பு உள்ளது என்றும் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அச்சத்துக்கு மருந்தளிக்கும் விதமாக மற்றொரு ஆய்வு முடிவு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. ஜப்பானின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவில் டொக்குடயா ஒசிமென்சிஸ் எனும் முள் எலி வகை ஒன்றில் ஒய் குரோமோசோமும் எஸ் ஆர் ஒய் மரபணுவும் இல்லாமல் போயிருக்கிறது. ஆனாலும் அந்த இனத்தில், ஆண் எலிகள் விதைப்பையுடன் பிறக்கின்றன!
ஒய் குரோமோசோமும் இல்லாமல்... அதில் எஸ் ஆர் ஒய்யும் இல்லாமல்.. எப்படி இது சாத்தியம்?
இந்த எலி வகையில் ஒய் குரோமோசோம் இல்லாமலும் 22 ஜோடி ஆட்டோசோம்களில் இருந்து குறிப்பிட்ட சிறிய இடத்தில் எஸ் ஓ எக்ஸ் ஜீன், தானாக உந்தப்பட்டு ஆண் எலிகள் உருவாவது கண்டறியப்பட்டுள்ளது. எனில் மனித ஒய் குரோமோசோம் முழுவதுமாக இல்லாமல் போகும் நாளில், இந்த எலியைப் போல் மற்றொரு இடத்தில் இருந்து ஆண்மைக்கான மரபணு வெளிப்பாடு ஏற்படுமா... என்பது மெதுவாகத்தான் தெரியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மெதுவாக என்றால்... 11 மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.ஆக, இப்போதைக்கு பயமில்லை. ஆனால், எப்பொழுதும் பயமில்லை என்று சொல்ல முடியாது. இதைத்தான் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை உணர்த்துகிறது!
என்.ஆனந்தி
|