தன் சொத்தில் பெரும் பகுதியை ஊழியர்களுக்கு கொடுத்தவர்!



உலகின் தனித்துவமான பைனான்ஸ் நிபுணர்களில் ஒருவர், இந்தியாவில் பொருளாதார ரீதியாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தவர், ஏழை மக்கள் டிராக்டர்கள், டிரக்குகள், மற்ற வாகனங்கள் வாங்குவதற்காக கடன் வசதி ஏற்படுத்தி தந்தவர்களில் முன்னோடி, இந்தியாவின் பைனான்ஸ் முறையையே மாற்றியமைத்தவர்... என பல சிறப்புகளை உள்ளடக்கிய ஓர் ஆளுமை, ஆர். தியாகராஜன்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மூன்றில் ஒருவர் அதைப் பயன்படுத்துவதில்லை என்கிறது உலக வங்கியின் ஆய்வு. தவிர, வருமானம் குறைவாக இருப்பவர்கள், நிலையான வருமானம் இல்லாதவர்கள், கடன் வாங்கி திருப்பிச் செலுத்திய கடன் வரலாறு இல்லாதவர்கள் ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கியில் கடன் வாங்குவது சிரமம்.
இதை உடைத்தவரும் இவரே.

யார் இந்த ஆர். தியாகராஜன்?

சென்னையில் வசித்து வந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்  தியாகராஜன். கணிதத்திலும், புள்ளியியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
1961ம் வருடம் ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ எனும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி ஆபீசராக வேலையை ஆரம்பித்தார். எழுபதுகளில் டிராக்டர்கள், டிரக்குகள் வாங்க கடன் உதவி கேட்டு இவரை நாடியிருக்கின்றனர். அவர்களுக்கு யாருமே கடன் தர முன்வரவில்லை.

இந்நிலையில் தனது சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்திருக்கிறார். இதற்காக அவர்களிடம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஏழை மக்களுக்குக் கடன் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார். இந்த ஏழை மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தூண்டுதல் அவருக்குள் உண்டானது.

1974ம் வருடம் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஸ்ரீராம் சிட்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சீட்டு மட்டுமே நடத்தி வந்த இந்நிறுவனம், கடன் மற்றும் இன்சூரன்ஸிலும் கால் பதித்தது. இந்த ஐம்பது வருடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்யும் முக்கிய நிதி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது, ‘ஸ்ரீராம் குரூப்’. இன்று இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 2.9 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிட்டது.

இந்தளவுக்கு ‘ஸ்ரீராம் குரூப்’ வளர்வதற்கு முக்கிய காரணமானவர், தியாகராஜன்தான்.எந்தவித கடன் வரலாறும் இல்லாதவர்களுக்குக் கடன் கொடுப்பது ஆபத்தானது இல்லை என்பதை நிரூபிப்பதற்காக ‘ஸ்ரீராம் குரூப்’ ஆரம்பித்ததாக ஒரு பத்திரிகையின் நேர்காணலில் சொல்லியிருக்கிறார் தியாகராஜன்.மற்ற பில்லினியர்களைப் போல் இல்லாமல் எளிமையான, சிக்கனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தியாகராஜன். 

ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில்தான் பயணிக்கிறார். அவரிடம் சொந்தமாக அலைபேசி இல்லை. காரணம், அலைபேசி கவனச்சிதறலை ஏற்படுத்துவதால் அதை தியாகராஜன் பயன்படுத்துவதில்லை. மட்டுமல்ல, சிறிய வீட்டில்தான் வசித்து வருகிறார். இப்போது அவரது வயது 87. விஷயம் இதுவல்ல.

தனக்குப் போதுமானது போக, மீதியுள்ள தனது பங்குகளைக் கொடையாகத் தந்துவிட்டார் தியாகராஜன். ஆம்; 6210 கோடி ரூபாயைத் தானமாகக் கொடுத்திருக்கிறார். அதாவது ‘ராம் குரூப்’பில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான அறக்கட்டளைக்குக்  கொடையாகத் தந்துவிட்டார்.

த.சக்திவேல்