காமெடி இல்லாத த்ரில்லர் படம்...
‘சிக்சர்’ படத்தை இயக்கிய சாச்சி இயக்கியுள்ள படம் ‘சட்டம் என் கையில்’. காமெடி நடிகர் சதீஷ், கதையின் நாயகனாக நடித்துள்ளார். இறுதிக் கட்ட வேலையில் பிசியாக இருந்த சாச்சியிடம் பேசினோம்.
கதைச் சுருக்கம் ப்ளீஸ்?
இது பக்கா த்ரில்லர் கதை. வழக்கமான சைக்கோ த்ரில்லர் கிடையாது. பாடல்கள், சண்டைக் காட்சி என த்ரில்லர் படத்துக்கான எந்த அம்சங்களும் இருக்காது. எந்தக் காட்சியும் கதையை விட்டு வெளியே போகாமல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும்படி இருக்கும்.ஒரு நாளில் நடக்கும் கதை. மது அருந்திய காரணத்துக்காக ஹீரோ வாகன சோதனையில் போலீஸிடம் சிக்குகிறார். போலீஸ் பிடியில் இருக்கும் ஹீரோ எப்படி வெளியே வருகிறார்... ஹீரோவுடைய பின்னணி என்ன... என்ற சிம்பிள் கதை.
ஆனால், அந்தக் கதையைச் சுற்றி சில கிளைக் கதைகள் இணைந்திருக்கும். அது திரைக்கதைக்கு வலு சேர்க்கும்விதத்தில் சுவாரஸ்யமாக இருக்கும்.அதிகார பலம், பண பலம் கொண்டவர்கள் சாமானியர்களை அடக்கும்போது உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள்தான் போராடி ஜெயிக்க வேண்டும் என்பதுதான் படத்தோட புரிதலா இருக்கும்.
சதீஷ் காமெடியிலிருந்து வெளியே வந்து ஹீரோவா பல படங்கள் செய்துள்ளார். இதில் முற்றிலும் கதையின் நாயகனாக மட்டுமே தெரிவார். கதையில் அவர் ஏரியாவான காமெடி இருக்காது. மற்ற நடிகர்களும் கூட காமெடி செய்திருக்கமாட்டார்கள்.
சொந்தங்கள் என்பதைக் கடந்து உங்களுக்கும் சதீஷுக்குமான கூட்டணி எப்படி உருவாச்சு?
‘சிக்சர்’ காமெடி பண்ணியதால் அடுத்த படத்தை த்ரில்லர் ஜானர்ல பண்ணலாம்ன்னு தோணுச்சு. கதை எழுதி முடிச்சதும் சதீஷிடம் ஒப்பீனியனுக்காக சொன்னேன். ‘நல்லாயிருக்கு’ன்னு சொன்னதும் ‘நாம் சேர்ந்து பண்ணலாமா’ன்னு கேட்டேன். ‘த்ரில்லர் கதையா’ என யோசிச்சவர் புதுசு புதுசா டிரை பண்ணினாதான் ஆடியன்ஸுக்கு வெரைட்டியா படம் தரமுடியும்ன்னு ஓகே சொன்னார்.
சதீஷ் கேரக்டர் பேர் கெளதம். கதை த்ரில்லர் என்றாலும் படப்பிடிப்பு செம ஜாலியா இருந்துச்சு. ஏற்காடு மலையில் கடும் பனிப்பொழிவு இருந்தப்பதான் ஷூட் நடந்துச்சு. அவருடைய முந்தைய படங்களின் சாயல் எதுவும் இருக்காது. உடல் மொழி, டயலாக் டெலிவரி என எல்லாமே ஃப்ரெஷ்ஷா தெரியும். அதுக்காக எத்தனை டேக் எடுத்தாலும் ஒத்துழைப்பு கொடுப்பார். நானும் விடமாட்டேன்.
கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் பண்ணினார். எந்த காட்சியும் மிகைப்படுத்தலாக இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருப்பார். ரிஸ்க் எடுக்க வேண்டிய இடத்தில் ரிஸ்க் எடுத்திருப்பார். முதல் நாள் முதல் காட்சியில் அவர் தலையில் அடி விழுகிற மாதிரி எடுத்தோம். டைமிங் கொஞ்சம் மிஸ்ஸானதால தலையில் பலமா அடி வீழ்ந்துச்சு.
அந்த அதிர்ச்சியில் அப்படியே கீழே உட்கார்ந்துட்டார். தலையில் வீக்கம் அதிகமாயிடுச்சு. ரெஸ்ட் எடுக்காம, வலியைப் பொருட்படுத்தாம கேரக்டராகவே மாறினார். அது பெரியளவில் ஒர்க் அவுட்டாகியிருக்கு. ஆரம்ப காட்சியிலிருந்து ஏதோ புதுசா டிரை பண்ணியிருக்கிறார் என்பது தெரியும். இந்தப் படத்துக்குப் பிறகு என்ன மாதிரி கதையா இருந்தாலும் சதீஷ் பொருத்தமா இருப்பார் என்ற முடிவுக்கு இயக்குநர்களால் யோசிக்க முடியும். ஏனெனில், சென்டிமென்ட், எமோஷனல் என எல்லா வகை உணர்வுகளையும் அற்புதமா வெளிப்படுத்தி யிருப்பார்.
சதீஷ் எப்படி த்ரில்லர் கதைக்கு பொருத்தமா இருப்பார்ன்னு கேட்கலாம். ஆனால், இந்தப் படத்துக்குப் பிறகு த்ரில்லர், ஆக்ஷன், லவ் என எந்த ஜானர் படத்துக்கும் பொருத்தமா இருப்பார் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தபிறகு முடிவுக்கு வரலாம்.
ஹீரோயின் யார்?
இது ஹீரோ, ஹீரோயின் கதை கிடையாது. எல்லோருக்குமே லீட் ரோல். வித்யா பிரதீப், மைம் கோபி, பாவல் நவகீதன், ரித்திகா, அஜய்ராஜ், பவா செல்லதுரை, ராமதாஸ் என எல்லோருக்கும் படத்துல ஸ்பேஸ் இருக்கும்.பி.ஜி.முத்தையா சார் கேமரா ஹேண்டில் பண்றார். என்னுடைய முதல் படத்துக்கும் அவர்தான் கேமரா. எங்களுக்கான புரிதல் ஒரே அலைவரிசையில் இருக்கும் என்பதால் படப்பிடிப்பில் எந்தவித குழப்பமும் இல்லாமல் திட்டமிட்டபடி ஷூட் நடக்கும். அவருடைய ஒர்க் பல படங்களில் பேசப்பட்டிருக்கு. அவருடைய அனுபவம் படத்துக்கு பெரிதும் உதவுச்சு.
மியூசிக் ஜோன்ஸ். த்ரில்லர் கதைக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். முழுப் படத்தையும் மியூசிக் வழியா தாங்கிப்பிடிக்கணும். அது அவ்வளவு சுலபம் கிடையாது. அதைப் புரிஞ்சு பண்ணினார். பேக்ரவுண்ட் ஸ்கோர்ல அனிருத்துக்கு அடுத்து பேசப்படக் கூடிய இடத்துல இருப்பார். என்னுடைய மியூசிக் டைரக்டர் என்பதற்காக சொல்லவில்லை. அவருடைய ஒர்க் பேசப்படும். இந்தப் படத்துக்குப் பிறகு ஜோன்ஸ் தமிழ் சினிமாவுல கவனிக்கப்படத்தக்க இடத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கு.
எடிட்டிங் மார்ட்டின். அவருக்கு இதுதான் முதல் படம். எக்ஸ்பீரியன்ஸ்டு எடிட்டருக்கான ஒர்க் இருக்கும். அந்த வகையில் டெக்னீஷியன்ஸ் அனைவரும் டீம் ஒர்க்கா நினைச்சு எல்லோரும் தங்களுடைய பெஸ்ட் கொடுத்தார்கள்.
பெரிய டெக்னீஷியன்களுடன் ஒர்க் பண்ணும்போது ஒரு லிமிட் வரைதான் அட்வான்டேஜ் எடுக்க முடியும். அறிமுக டெக்னீஷியன்களாக இருக்கும்போது தேடல் முயற்சியோடு தொடர்ந்து புதுசு புதுசா டிரை பண்ண முடியும். எங்க டீமோட சிறப்பம்சம் என்னவென்றால் வேற ஒண்ணு வேணும்னு சொன்னா தயங்காம பண்ணுவாங்க. தயாரிப்பு சண்முகம் கிரியேஷன்ஸ். காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிவருகிறார்களே... இயக்குநராக உங்கள் பார்வை என்ன?
இது நல்ல முன்மாதிரி. காமெடி நடிகர்கள் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சபிறகு காமெடிக்கான இடம் காலியா இருக்கு. பல இளைஞர்கள் அந்த இடத்துக்கு வருவதற்கான வாய்ப்பு அது. சந்தானம், சூரி, சதீஷ் போன்றவர்கள் காமெடிதான் என்று ஃபிக்ஸ் பண்ணிட்டால் புதுசா வர்றவங்களுக்கு ஸ்பேஸ் கிடைக்காது.எல்லோரும் அடுத்தடுத்த ஸ்டெப் போகணும். விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் காமெடியன்கள் இல்லையென்றாலும் அவர்களுடைய தனித்திறமையால் படத்தை தாங்கிப்பிடிப்பார்கள்.
சினிமாவைப் பொறுத்தவரை கதைதான் நடிகர்களை தீர்மானிக்கும். என்னுடைய இந்தக் கதைக்கு ஹீரோவாக நடிக்கிறவர்கள் நடித்திருந்தால் வழக்கமான த்ரில்லராக இருந்திருக்கும். சதீஷ் வரும்போது அதுல வேரியேஷன் இருக்கு.காமெடி நடிகர்கள்தான் என்றில்லை. கதை டிமாண்ட் பண்ணினால் யார் வேண்டுமானாலும் ஹீரோவா பண்ணலாம்.
எஸ்.ராஜா
|