சாய்னா... பலே மா!



ம்ஹும். மருத்துவர்களோ அல்லது மருத்துவமனை அறிக்கையோ இதை தெரிவிக்கவில்லை. மாறாக இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால், தான் ஆர்த்தரைட்டிஸ் - முடக்கு வாதம் - நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனைதான் இந்த சாய்னா நெவால். 2012ம் ஆண்டு லண்டன் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், பி.வி.சிந்துவுக்கு முன் இந்தியாவின் நம்பர் ஒன் பாட்மிண்டன் வீராங்கனையாக இருந்தார்.முற்றிலும் உண்மை. 2014ம் ஆண்டில் சில வாரங்களுக்கு உலகின் நம்பர் ஒன் பாட்மிண்டன் வீராங்கனையாகவும் இருந்திருக்கிறார்.

உபேர் கோப்பை, உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டி... என சர்வதேச பாட்மிண்டன் போட்டிகள் பல வற்றிலும் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு இப்போது வயது 34. பிரபல பாட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப்பை மணந்த சாய்னா, கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இந்த சூழலில்தான் ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாக சாய்னா நெவால் தெரிவித்துள்ளார். முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான ககன் நரங்குடன் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சாய்னா நெவால் கூறியிருக்கும் அனைத்தும் இப்பொழுது வைரல்.

‘‘எனக்கு ஆர்த்தரைட்டிஸ் பிரச்னை உள்ளது. என் முட்டிகள் அத்தனை ஆரோக்கியமாக இல்லை. எனது குருத்தெலும்பு மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.
எட்டு மணி நேரம் பயிற்சி செய்வது மிகவும் கடினம். என்னால் இரண்டு மணி நேரம்கூட தொடர்ந்து பயிற்சி பெற முடியவில்லை. உயர்மட்ட வீரர்களுடன் விளையாடவும், விரும்பிய முடிவுகளைப் பெறவும் இந்தப் பயிற்சி போதுமானதாக இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எப்படி உலகின் சிறந்த வீரர்களை எதிர்கொள்வீர்கள்? என் நிலையை நான் எங்காவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
விளையாட்டு வீரர்களின் ஸ்போர்ட்ஸ்  வாழ்க்கை மிகவும் குறுகியது. நான் எனது ஒன்பதாவது வயதில் பாட்மிண்டன் ஆடத் தொடங்கினேன். அடுத்த ஆண்டு வந்தால் எனக்கு 35 வயது ஆகிறது.

இந்த இடைப்பட்ட வாழ்க்கையில் நான் என் உடலுக்கு பல சவால்களைக் கொடுத்துள்ளேன். இப்போது பாட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி சிந்தித்து வருகிறேன்.
ஒன்பது வயது முதல் மிக நீண்ட ஆண்டுகள் பாட்மிண்டன் ஆடியதை நினைத்து பெருமைப்படுகிறேன்...’’உண்மையை ஏற்பது எவ்வளவு துணிச்சலானதோ அவ்வளவு கம்பீரமானது அதை வெளியுலகுக்கு உரக்கச் சொல்வது. சாய்னா... பலே மா!  

என்.ஆனந்தி