மாமனார் அட்டகத்தி தினேஷ் மருமகன் ஹரிஷ் கல்யாண்!



‘‘ஒரு திறமைக் காரன் இன்னொரு திறனைக் காரனை ஒத்துக்கிட்டதா சரித்திரமே இல்லைல?’’

சாதி, மதம், இனம், மொழி கடந்து நிகழும் திறமைக்கும் திறமைக்குமான அடக்குமுறையைப் பேசுகிறது ‘லப்பர் பந்து’ டிரெய்லர். தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பியார் பிரேமா காதல்’ என சாக்லேட் பாயாக சுற்றிக் கொண்டிருந்தவர் ஹரிஷ்  கல்யாண். ‘பார்க்கிங்’ திரைப்படம் குடும்ப நாயகனாக உயர்த்தியது. இதோ அடுத்தடுத்து ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ என கெட்டப், கதைத்தேர்வுகளில் கவனம் செலுத்தி ஹரிஷ் கல்யாண் 2.0 ஆக முகம் மலர்கிறார்.
‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கரியரில் அடுத்த கட்டம் செல்ல வேண்டிய காலம் வந்திருக்குனு நினைக்கிறேன்...’’ புன்னகைக்கிறார் ஹரிஷ்.  

‘லப்பர் பந்து’..?

திருச்சி... அதைச் சுற்றிய உட்புற கிராமங்களில் உள்ள இளைஞர்களுடைய வாழ்க்கையை இந்தப் படம் பேசும். பொதுவா ஏரியா பசங்க ப்ரொபஷனல் கிரிக்கெட் பந்து வெச்சு விளையாட மாட்டாங்க. அவங்களுக்கு இருக்கற பட்ஜெட்டுக்கு கடைகளில் இருக்கக்கூடிய லப்பர் பந்துதான் வாங்க முடியும். அதனால் இந்தப் பெயர். இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள், அவங்களுக்கு இடையில ஒரு மாமனார் மருமகன் பஞ்சாயத்துனு வித்தியாசமான கதை.  
 
‘அட்டக்கத்தி’ தினேஷ் உடன் திரை அனுபவம்..?

எனக்கு ஓர் அண்ணன் கிடைச்சிருக்காரு. ஆரம்பத்தில் இந்தக் கதை என்கிட்ட வந்தப்ப அந்த கேரக்டருக்கு நிறைய பேரை யோசிச்சோம். கடைசியில் தினேஷ் பெயரை இயக்குநர் தமிழரசன் சொன்னார். எனக்கு அண்ணன், மாமா, மச்சான்... இப்படின்னாகூட ஓகே... எப்படி மாமனாரா நடிக்க சம்மதிப்பார்னு கேட்டேன். ‘கேட்டுப் பார்ப்போம்’னு சொன்னாரு. அவர்கிட்ட கதை சொல்லும் பொழுது ‘சார், இந்தக் கதையில் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியும் இருக்கு. முழுசா கேட்டுட்டு உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க’னு சொல்லிதான் இயக்குநர் கதை சொல்ல ஆரம்பிச்சிருக்கார்.

முழுமையா கதை சொல்லிட்டு ‘நீங்க ஹரிஷ் கல்யாணுக்கு மாமனார்’னு சொன்னதும் அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லையாம். ‘நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டார்.அந்த அளவுக்கு தினேஷ் அண்ணன் சினிமா நடிப்பு என்ன என்பதில் தெளிவாக இருக்கார். நிறைய விஷயம் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். 

எனக்கு ஜோடியாக ‘வதந்தி’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிச்சிருக்காங்க. ஆரம்பத்தில் இவங்கதான் கதாநாயகினு சொன்னப்ப, ‘அவங்க ஒரு சிட்டி கேர்ள், பளிச்னு இருப்பாங்களே’னு நினைச்சேன். ஆனா, லுக் டெஸ்ட்ல பக்காவா பொருந்தினாங்க.  

சுவாசிகா விஜய் மலையாளத்தில் நிறைய படங்களிலும் தமிழில் சில படங்களிலும் நடிச்சிருக்காங்க. இந்தப் படம் அவங்களுக்கு மிக முக்கியமான தமிழ்ப் படமா அமையும். தேவதர்ஷினி, பால சரவணன் இவங்களுக்கும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து..?

இவர்தான் ‘நெஞ்சுக்கு நீதி’, ‘எஃப் ஐ ஆர்’ படங்களின் ரைட்டர். ‘லப்பர் பந்து’ மூலமா இயக்குநரா அறிமுகமாறார். கதை சொல்லும் பொழுது அவர்கிட்ட ஒரு தெளிவு இருந்ததைப் பார்த்தேன். அதேபோல் இதுதான் வேணும் அப்படின்னு கறாரா கேட்டு வாங்கினார். என்னுடைய லுக்கையும் கூட இதுவரையிலும் இல்லாத அளவிற்கு புதிதான கெட்டப்பில் மாற்றினார்.

ஷான் ரோல்டன் மியூசிக்கில் ‘சில்லாஞ் சிறுக்கியே...’ பாட்டு ரிலீஸ் ஆகி ஏற்கனவே ஹிட் ஆகிடுச்சு. படத்தில் பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப நல்லா வந்திருக்கு. ‘மகாராஜா’, ‘லவ் டுடே’ படங்களில் வேலை செய்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கார். அந்த கிராமத்து கிரவுண்ட், கிரிக்கெட் போட்டிகள் எல்லாத்தையும் ரொம்ப அழகா பதிவு செய்திருக்கிறார்.

மற்ற கிரிக்கெட் படங்களிலிருந்து இது எப்படி வேறுபடும்?

கிரிக்கெட் விளையாடினால் டென்னிஸ் பால் அல்லது ப்ரொபஷனல் கிரிக்கெட் பந்துதான் பயன்படுத்துவோம். ஆனா, இந்த லப்பர் பந்து வைத்து விளையாடுவதே ஒரு சவால்தான். மேலே பட்டா நிச்சயமா காயம் ஆகிடும். அதுக்காகவே பிரத்தியேகமா பயிற்சி எடுத்துக்கிட்டேன். எந்த கிரிக்கெட் பிளேயரையும் ஃபாலோ செய்யாம ஏரியா கிரிக்கெட் பசங்க பத்து பேர்ன்னா அதில் ஒரு ஆல் ரவுண்டர்... இப்படித்தான் நான் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

இந்தப் படத்தைப் பொருத்தவரை கிரிக்கெட் ஒரு பார்ட்தான் அதில் ஒரு காதலும் குடும்ப கதையும் படத்தில் இருக்கு. மேலும் ஒரு சில ஏரியா கிரிக்கெட் நுணுக்கங்களை இதுல பார்க்கலாம். 

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

‘லப்பர் பந்து’ ரிலீசுக்கு ரெடி. தொடர்ந்து  ‘டீசல்’ படத்தின் ரிலீஸ் வேலைகளும் ஆரம்பிச்சுரும். சசி சார் டைரக்‌ஷன்ல  ‘நூறு கோடி வானவில்’ படம் போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கு. ‘அந்தகாரம்’  விக்னராஜ் டைரக்‌ஷன்ல ஒரு படம் போயிட்டிருக்கு. இன்னும் தலைப்பு வைக்கலை.

ஷாலினி நியூட்டன்