நோயாளிகளை தனிமைப்படுத்தும் குவாரன்டைன் தீவுகள்...
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. அப்போதுதான் நாம் முதன்முதலாக, ‘குவாரன்டைன்’ என்ற சொல்லை பரவலாகக் கேள்விப்பட்டோம். கொரோனா தொற்று பரவிய ஆரம்பநாட்களில் வீட்டில் ஒருவருக்கு நோய் வந்தாலே அந்த வீட்டை மட்டுமில்லாமல் முழுத் தெருவையும் ‘குவாரன்டைன்’ செய்ததையும் பார்த்தோம். பின்னர் வீட்டின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டபோது தனிமையின் கொடுமையை பலரும் உணர்ந்தனர்.
ஆனால், இந்தக் கொரோனா தொற்றுக்கெல்லாம் முன்பே உலகில் சில நாடுகள் நோய்வாய்ப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த சில தீவுகளையே, ‘குவாரன்டைன்’ இடமாக பயன்படுத்தி இருக்கின்றன.அப்போது பிளேக், காலரா, சின்னம்மை, டைபாய்டு உள்ளிட்ட பல தொற்று நோய்களிலிருந்து தப்பிக்கவும், அந்நோய்கள் மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும் இப்படிச் செய்துள்ளனர்.தவிர, தொழுநோயாளிகளுக்கான காலனிகளையும் உருவாக்கியுள்ளனர். அப்படியான சில குவாரன்டைன் தீவுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
குயில் தீவு / ஒட்டமாஹுவா
இது நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகருக்கு அருகிலுள்ள ஒரு தீவு. பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த கேப்டன் வில்லியம் மெய்ன் ஸ்மித் என்பவர் இந்தத் தீவில் உள்ளூர் காடைகளைக் கண்டார். இதனால், இந்தத் தீவிற்கு Quail island எனப் பெயர் வைத்தார். ஒட்டமாஹுவா என்ற உள்ளூர் பெயரும் இருக்கிறது.1850ம் ஆண்டு வரை இந்தத் தீவில் யாரும் வசிக்கவில்லை. பிரிட்டிஷார் இதனை மாற்றியமைத்தனர். 1875ம் ஆண்டு இந்தத் தீவு குவாரன்டைன் நிலையமாக மாற்றப்பட்டது.
அப்போது நியூசிலாந்தின் லிட்டல்டன் நகரின் அனாதை இல்லத்தில் இருந்து டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இந்தத் தீவிற்கு அனுப்பப்பட்டது. இங்கு 1907ல் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையும் செயல்பட்டது. பின்னர் இதனுள் சிறியதாக தொழுநோய்க்கான காலனி 1906ல் உருவாக்கப்பட்டது. இது 1925 வரை செயல்பட்டது.
அண்டார்டிக்கா ஆய்விலும் இந்தத் தீவு முக்கிய பங்கு வகித்துள்ளது. அதாவது அண்டார்டிக்கா ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளும் இங்கு குவாரன்டைன் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தற்போது நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பாதுகாத்தல் துறையும், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு அறக்கட்டளையும் பராமரித்து பூர்வீக வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை மீண்டும் தக்கவைக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். குவாரன்டைன் தீவு
ஆம். இந்தத் தீவின் பெயரே குவாரன்டைன்தான். இது நியூசிலாந்து நாட்டின் துனிடின் நகரில் ஒடாகோ துறைமுகத்திற்கு அருகில் இருக்கிறது. சுமார் 37 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 1863 முதல் 1924 வரை சுமார் அறுபது ஆண்டுகள் இந்தத் தீவு குவாரன்டைன் தீவாக இருந்தது. இதனாலேயே இந்தப் பெயரையும் பெற்றது. முதன்முதலாக இந்தத் தீவில் 1861ம் ஆண்டு தனிமைப்படுத்துவதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால், 1863ம் ஆண்டிலிருந்தே அவை பயன்பாட்டுக்கு வந்தன.
நியூசிலாந்தின் ஒடாகோ துறைமுகத்திற்கு வரும் தொற்று நோய்களுக்கு ஆட்பட்ட பயணிகள், இந்தத் தீவில் தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிலிருந்த மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
அதாவது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூசிலாந்து நாட்டிற்கு செட்டிலாக வந்தவர்களுக்கு முதல் வீடாக இந்தத் தீவுதான் இருந்துள்ளது.
ஏதேனும் தொற்று நோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக இந்தத் தீவில் தனிமைப்படுத்தப்பட்டு அதிலிருந்து மீண்ட பிறகே நியூசிலாந்தினுள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக அப்போது கப்பலில் வந்த பலர் சின்னம்மையில் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்தத் தீவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தத் தீவில் மட்டும் 41 கப்பல்களும், 9 ஆயிரம் பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 72 பேர் இறந்தனர். அவர்கள் இத்தீவிேலயே அடக்கமும் செய்யப்பட்டனர். பின்னர் முதல் உலகப் போரில் நியூசிலாந்து வீரர்களின் பால்வினை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடமாக இந்தத் தீவு இருந்தது. தொடர்ந்து 1924ம் ஆண்டு குவாரன்டைன் பகுதி மூடப்பட்டது.
பின்னர் இந்தத் தீவு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. குத்தகைக்கு எடுத்தவர்களும் விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விஷயங்களை முயற்சித்துப் பார்த்தனர். தொடர்ந்து 1958ம் ஆண்டு செயின்ட் மார்ட்டின் கம்யூனிட்டி என்ற நிறுவனம் இந்தத் தீவினை குத்தகைக்கு எடுத்து கட்டடங்களை விலைக்கு வாங்கியது. அவர்கள் குவாரன்டைன் தீவு என்பதை மாற்றும் பொருட்டு தீவிற்கு செயின்ட் மார்ட்டின் எனப் பெயரிட்டனர்.
ஆனால், அது நிலைக்கவில்லை. தற்போது இந்தத் தீவினை கமாவ் டாருவா கம்யூனிட்டியும், நியூசிலாந்து அரசின் இயற்கை மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாத்தல் துறையும் சேர்ந்து பராமரிக்கின்றன. இதனால், குவாரன்டைன் / கமாவ் டாருவா தீவு என அழைக்கப்படுகிறது. இந்தத் தீவில் ஒரு முக்கியமான குவாரன்டைன் கட்டடம் மட்டும் இப்போதும் உயிர்ப்பாக உள்ளது. இந்தத் தீவு குறித்து இரண்டு நூல்களும் வெளிவந்துள்ளன.
பொவெலியா
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கும், லிடோ நகருக்கும் இடையில் அமைந்திருக்கும் சிறிய தீவு பொவெலியா. இது அடுத்தடுத்து அமைந்த மூன்று தீவுகளால் ஆனது. இதில் ஒன்று மரம், செடி, கொடிகளாலும், மற்றொன்று கட்டடங்களுடனும், மூன்றாவதாக உள்ள ஆக்டோகான் எனப்படும் பகுதி பாதுகாக்கும் கோட்டையுடனும் காணப்படுகிறது.
5ம் நூற்றாண்டிலேயே இதில் மனிதர்கள் குடியேறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் சொந்த நிலத்திலிருந்து அகன்று இந்தத் தீவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர். பின்னர் 14ம் நூற்றாண்டில் சியோகியா போர், ஜெனோவா மற்றும் வெனிஸ் கடல்சார் குடியரசுகளுக்கு இடையே நீடித்த மோதலால் இந்தத் தீவு கைவிடப்பட்டது. மக்கள் மீண்டும் சொந்த நிலமான வெனிஸிற்கே திரும்பினர்.
இந்நிலையில் 18ம் நூற்றாண்டில் இது பொது சுகாதார அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தது. சுங்கக் கட்டுப்பாட்டின் ஒரு வடிவமாகவும் செயல்பட்டது. பின்னர் பிளேக் கட்டுப்பாட்டுக்கான தளமாக மாற்றப்பட்டது.1793ம் ஆண்டு இரண்டு கப்பல்கள் இந்தத் தீவின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன. அப்போது அதிலிருந்த பலருக்கு பிளேக் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அந்தக் கப்பல்கள் அங்கே நிறுத்தப்பட்டு குவாரன்டைன் செய்யப்பட்டன.
அங்கிருந்து அந்தத் தீவும் பிளேக் நோய்க்கான குவாரன்டைன் தீவாக மாறியது. இதற்கிடையே வெனிஸ் அருகே லாசரெட்டோ நூவோ மற்றும் லாசரெட்டோ வெச்சியோ ஆகிய இரண்டு தீவுகள் குவாரன்டைன் தீவுகளாக இருந்தன.
இதில் லாசரெட்டோ வெச்சியோ 15ம் நூற்றாண்டில் இருந்தே பிளேக் மற்றும் தொழு நோயாளிகளுக்கான குவாரன்டைன் தீவாக இருந்தது.
இதேபோல வெனிஸ் நகரின் மறுபுறத்தில் உள்ள லாசரெட்டோ நூவோ தீவும் குவாரன்டைன் தீவாக விளங்கியது. இங்கே நோயாளிகள் நிரம்பியதால் அவர்கள் பொவெலியா தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
பின்னர் லாசரெட்டோ தீவுகள் மூடப்பட்டன. இந்த பொவெலியா தீவு 1814ம் ஆண்டு வரை குவாரன்டைன் தீவாக இருந்தது. தொடர்ந்து 1922ம் ஆண்டு இந்தத் தீவு மன
நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகமாக மாறியது.
இதுவும் 1968ல் மூடப்பட்டது. இதனையடுத்து இந்தத் தீவு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஹோட்டல், உணவகம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரலாம் என்றும், ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றலாம் என்றும் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், இப்போது வரை இந்தத் தீவு காலியாகவே உள்ளது. எந்த முயற்சியும் எடுபடவில்லை. காரணம், பிளேக் நோயால் இறந்தவர்கள் மற்றும் மனநலக் காப்பகம் இருந்தது உள்ளிட்டவை எல்லாம் இந்தத் தீவில் அமானுஷ்யக் கதைகளுக்கு வித்திட்டு உள்ளன. உலகின் மிக பயங்கரமான பேய் தீவு என்ற கதைகளும் உலவுகின்றன.இதனால், இந்தத் தீவிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள், திரைப்படம் எடுப்பவர்கள், புகைப்பட புரொஜெக்ட்ஸ் உள்ளிட்டவற்றுக்கு தனி அனுமதி வழங்கப்படுகிறது.
க்ளீன் குராசோ
இதற்கு சிறிய குராசோ என்று அர்த்தம். வெனிசூலா நாட்டிற்கு மேலே குராசோ நாட்டிற்குக் கீழே கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு இது. குராசோ நாட்டிற்கு சொந்தமான இந்தத் தீவில் இப்போது யாரும் வசிக்கவில்லை.17ம் நூற்றாண்டில் இந்தத் தீவு குவாரன்டைன் தீவாக இருந்தது. அப்போது டச்சு மேற்கு இந்திய கம்பெனி ஆப்ரிக்காவில் இருந்து குராசோ நாட்டிற்கு பலரை அடிமைகளாகக் கொண்டு வந்தது.
இப்படி அழைத்து வரப்படுகிறவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் இந்த க்ளீன் குராசோ தீவில் இறக்கிவிடப்பட்டு குவாரன்டைன் செய்யப்படுவார்கள். இந்தத் தீவின் வடமேற்குப் பகுதியில் முதல் குவாரன்டைன் கட்டடமும் எழுப்பப்பட்டது. இந்த குவாரன்டைனில் நோய்வாய்ப்பட்டு பிழைக்காதவர்கள் அங்கே புதைக்கவும் பட்டனர். அந்த கல்லறைகள் இன்றும் இந்தத் தீவின் தென்பகுதியில் உள்ளன.
1871ம் ஆண்டு ஜான் காட்டன் என்ற ஆங்கிலேய சுரங்கப் பொறியாளர், இத்தீவில் பாஸ்பேட் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதைக் கண்டறிந்தார். இதனால், டச்சு அரசு 1871 முதல் 1886 வரை இந்தத் தீவில் சுரங்க நடவடிக்கைகளில் இறங்கி பாஸ்பேட் எடுத்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தது.பாஸ்பேட் தீர்ந்ததும் இந்தத் தீவு கைவிடப்பட்டது.
அப்போது உருவாக்கப்பட்ட லைட்ஹவுஸ் ஒரு புயலில் தகர்ந்துபோனது. இதனால், இந்தத் தீவின் உள்ளேயே மற்றொரு லைட்ஹவுஸ் உருவாக்கப்பட்டது. இதுதவிர நிறைய கப்பல் விபத்துகளும் இந்தத் தீவின் அருகே நிகழ்ந்துள்ளன. 2006ம் ஆண்டுக்குப் பிறகு குராசோவில் உள்ள CARMABI என்ற கடல் ஆராய்ச்சி நிலையத்தால் மீண்டும் காடு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்பைனலோங்கா
கிரீஸ் நாட்டின் பெரிய தீவுகளில் ஒன்றான கிரீட் தீவின் அருகே இருக்கிறது இந்த ஸ்பைனலோங்கா தீவு. இந்தத் தீவு கடந்த 1903ம் ஆண்டில் இருந்து 1957ம் ஆண்டு வரை சுமார் 55 ஆண்டுகள் தொழு நோயாளிகளுக்கான காப்பகமாக செயல்பட்டது.1957ல் தீவு மூடப்பட்ட பிறகு, அங்கே ஒரு பாதிரியார் மட்டும் 1962ம் ஆண்டு வரை தங்கியிருந்தார். ஏனெனில் கிரேக்க மரபு வழி பாரம்பரியத்தின்படி புதைக்கப்பட்ட நபர் இறந்து ஐந்து ஆண்டுகள் வரை நினைவுகூரப்பட வேண்டும் என்பதால்!
இந்தத் தீவில் தொழு நோயாளிகள் உணவு, தண்ணீர், மருத்துவ கவனிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றைப் பெற்றனர். முன்னதாக, கிரீட்டின் தொழுநோயாளிகளுக்கு இத்தகைய வசதிகள் கிடைக்கவில்லை, ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் நாகரிகத்திலிருந்து விலகி, அப்பகுதியின் குகைகளில் வாழ்ந்தனர்.ஸ்பைனலோங்காதான் ஐரோப்பாவில் ஆக்டிவ்வாக செயல்பட்ட கடைசி தொழுநோயாளிகள் காலனி. ஆனால், இப்போது அது சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
நார்த் பிரதர்
அமெரிக்காவின் நியூயார்க் நகர் அருகே அமைந்துள்ளது இந்தத் தீவு. 1885ம் ஆண்டு வரை இந்தத் தீவில் யாரும் வசிக்கவில்லை. ஒரு லைட்ஹவுஸ் மட்டுமே எழுப்பப் பட்டிருந்தது.இந்நிலையில் 1880களில் ரிவர்சைடு மருத்துவமனை இந்தத் தீவில் சின்னம்மை மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மாற்றியது.
போலியோ தொற்று வந்தபோது 1916ம் ஆண்டு நிறைய நோயாளிகளை இந்த நார்த் பிரதர் தீவில் வைத்து சிகிச்சை அளித்தது ரிவர்சைடு மருத்துவமனை. ஒரு நீராவிக்கப்பல் இந்தத் தீவின் அருகே 1904ல் தீப்பிடித்து எரிந்தது.
இதில் ஆயிரம் பேர் தீயினாலும், தண்ணீரில் மூழ்கியும் இறந்தனர். இந்தத் தீவில் மேரி மலான் என்ற பெண்மணி இருபது ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் ஒரு சமையல்காரர். இவர், அறிகுறி இல்லாமல் டைபாய்டு நோயை உருவாக்கும் சால்மோனெல்லா டைஃபி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் அமெரிக்க நபர். சமையல் வேலையில் இருந்ததால் அதன்மூலம் 122 பேர் வரை நோயைப் பரப்பினார் என்கின்றன தகவல்கள். இதனால், டைபாய்டு மேரி என்ற புனைபெயர் இவருடன் ஒட்டிக்கொண்டது. மட்டுமில்லாமல் நோய் பரப்பும் நபர்களுக்கான புனைபெயராகவும் டைபாய்டு மேரி மாறிவிட்டது. பின்னர் 1950களில் போதை இளைஞர்களுக்கான மறுவாழ்வு மையமாகச் செயல்பட்டஇந்தத் தீவு 1963ல் மூடப்பட்டது. இப்போது கைவிடப்பட்ட தீவாக இருக்கிறது.
பேராச்சி கண்ணன்
|