Must Watch



சத்யபாமா

‘ஜியோசினிமா’வின் டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தெலுங்குப்படம், ‘சத்யபாமா’. நேர்மையான, கடமை தவறாத ஐபிஎஸ் அதிகாரி, சத்யபாமா. இவரைக் கண்டால் குற்றவாளிகள் மட்டுமல்லாமல், காவல்துறையும் நடுங்கும். பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடித்து, அடித்து நொறுக்குகிறார்.

சத்யபாமாவிற்குக் காதலனுடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. திருமண நாள் அன்று சத்யபாமாவிற்கு முக்கியமான ஒரு வழக்கு வருகிறது. ஹசீனா என்ற இளம் பெண், தன்னுடைய கணவன் அடிப்பதாகவும், வேறு சில பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்து தன்னை அவமதிப்பதாகவும் வழக்கு தொடுக்கிறாள். ஹசீனாவின் கணவரை போனில் மிரட்டிவிட்டு, தன்னுடைய திருமணத்துக்குச் சென்று விடுகிறார் சத்யபாமா.  

இந்நிலையில் சத்யபாமாவிற்குப் பலமுறை போன் செய்கிறார் ஹசீனா. திருமண பிஸியில் இருந்ததால் அந்தபோனை சத்யபாமாவால் எடுக்க முடிவதில்லை. ஹசீனாவின் மிஸ்டு கால்களைப் பார்த்துவிட்டு, அவசரமாக அவளது வீட்டுக்குச் செல்கிறார். சத்யபாமாவின் கண் முன்பே ஹசீனாவின் கணவன் அவளைக் கொல்கிறான். சூடுபிடிக்கிறது திரைக்தை.சத்யபாமாவாக கலக்கியிருக்கிறார் சத்யபாமா. படத்தின் இயக்குநர் சுமன் சிக்கலா.

லேண்ட் ஆஃப் பேட்

அதிரடியான ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது ‘லேண்ட் ஆஃப் பேட்’ எனும் ஆங்கிலப்படம். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பயங்கரமான ஒரு தீவிரவாதக் கும்பல் வசித்து வருகிறது. அந்த இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அப்படியே நெருங்கினாலும் உயிருடன் திரும்பியவர்கள் யாருமில்லை.

அந்தக் கும்பல் அங்கிருந்தே பல சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. தீவிரவாதக் கும்பல் வசித்துவரும் பகுதியை ‘லேண்ட் ஆஃப் பேட்’ என்று அழைக்கின்றனர்.
லேண்ட் ஆஃப் பேடை அழிப்பதற்காக உலகிலுள்ள இராணுவ அமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. திறமையான நான்கு பேர் கொண்ட குழு லேண்ட் ஆஃப் பேடை நோக்கிச் செல்கிறது.

இந்தக் குழுவை ட்ரோன் பைலட் ரீப்பர் வழிநடத்துகிறார். நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை நான்கு பேரால் அழிக்க முடிந்ததா என்பதை ஆக்‌ஷனில் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
ஆக்‌ஷன் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. இதன் இயக்குநர் வில்லியம் எபாங்க்.

படி

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, ஹிட் அடித்த தமிழ்ப்படம், ‘டெடி’. இப்படத்தை தழுவிய தெலுங்குப்படம்தான், ‘படி’. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இந்தியாவிலிருந்து ஏழைகளைக் கடத்தி, அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை எடுத்து, ஹாங்காங்கில் பணக்காரர்களுக்கு விற்று வருகிறான் ஒரு மருத்துவன்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனின் மகனுக்கு அவசரமாக ஓர் இதயம் தேவைப்படுகிறது. அந்த மருத்துவனை நாடுகிறான் அந்தத் தலைவன். 100 மில்லியன் கொடுத்தால் உங்களது மகனை பிழைக்க வைக்கிறேன் என்கிறான் மருத்துவன். அதற்கு அந்த தலைவனும் சம்மதிக்கிறான். மகனுக்குப் பொருந்துகிற இதயம் இந்தியாவிலிருக்கும் பல்லவி என்ற பெண்ணிடம் இருக்கிறது. பல்லவியைக் கோமா நிலைக்குத் தள்ளி ஹாங்காங்குக்கு கொண்டு வருகிறார்கள். அப்போது பல்லவியின் ஆன்மா ஒரு டெடிபியர் பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அந்தப் பொம்மையின் பெயர் படி.

பல்லவியின் காதலனான ஆதித்யாவுடன் படி கூட்டு சேர்ந்து, எப்படி பல்லவியின் உடலுக்குள் திரும்பவும் அந்த ஆன்மா செல்கிறது என்பதே திரைக்கதை.  
ஜாலியாகச் செல்லும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் சாம் ஆண்டன்.

முஞ்யா

முப்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, ரூ.132 கோடி வசூலை அள்ளிய இந்திப்படம், ‘முஞ்யா’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய வருடங்களில் ஒரு கிராமத்தில் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. தன்னைவிட ஏழு வயது மூத்தவளான முன்னியிடம் காதல் கொண்டிருக்கிறான் கோத்யா. ஆனால், முன்னிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகிறது.

இதை தாங்க முடியாத கோத்யா விஷம் அருந்துகிறான். ஆனால், பிழைத்துக்கொள்கிறான். எப்படியாவது முன்னியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற வெறியில் காட்டுக்குள் இருக்கும் மந்திரவாதியைத் தேடி தன்னுடைய சகோதரியுடன் செல்கிறான் கோத்யா. தங்கையைப் பலிகொடுக்க வேண்டும் என்பது கோத்யாவின் திட்டம். அப்படி பலி கொடுக்கும்போது தவறுதலாக கோத்யா இறந்துவிடுகிறான்.

பிறகு அந்த காட்டில் உள்ள மரத்தில் முஞ்யா என்ற பேயாக அலைகிறான். பேயாக மாறியபிறகும் முன்னியுடன் சேரவேண்டும் என்ற கோத்யாவின் ஏக்கம் தீரவில்லை. முஞ்யாவும், முன்னியும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.பேய்க்கதையை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கின்றனர். இதன் இயக்குநர் ஆதித்யா சர்போட்தார்.

தொகுப்பு: த.சக்திவேல்