உலகின் நம்பர் ஒன் பணக்கார நாய்!
சொத்து மதிப்பு, சுமார் 3350 கோடி ரூபாய்!
சமீபத்தில் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்து வகையான ஊடகங்களிலும் வைரலானார் ஆறாம் குந்தர். காரணம், இவரது சொத்து மதிப்பு, சுமார் 3350 கோடி ரூபாய்!
இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா?
ஆறாம் குந்தர் என்பது மனிதன் அல்ல; ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த ஒரு நாய். உலகின் நம்பர் ஒன் பணக்கார நாயும் இதுவே. ஆடம்பரமான மாளிகை, பிரத்யேகமான சமையல் கலைஞரால் சமைக்கப்பட்ட உணவு, சொகுசு கப்பல், விலையுயர்ந்த கார்கள், மருத்துவக் கண்காணிப்பு, சொந்தமாக ஸ்போர்ட்ஸ் கிளப்கள் என பில்லினியர்களுக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் வாழ்ந்து வருகிறது இந்த நாய். இத்தாலியில் உள்ள ஒரு மாளிகையில் வசித்து வரும் ஆறாம் குந்தருக்குப் பணிவிடை செய்வதற்காக மட்டுமே 27 பேர் வேலை செய்கின்றனர் என்பதுதான் இதில் ஹைலைட்.
ஆறாம் குந்தரின் முக்கிய பொழுதுபோக்கே சொகுசான நீச்சல் குளத்தில் நீந்துவதுதான். அப்போது பிகினி உடையணிந்த இளம் பெண்கள் ஆறாம் குந்தரைச் சுற்றியிருப்பார்கள்.
இப்படி தினமும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகிறது இந்த நாய். ஆறாம் குந்தருக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன என்பதே பலரை ஆச்சர்யத்தில் உறைய வைத்திருக்கிறது.
இத்தாலியைச் சேர்ந்த பணக்காரப் பெண்மணி கொர்லோட்டா. இவருக்கு ஒரு மகன் இருந்தான். அந்த மகனும் இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ள, மூன்றாம் குந்தர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் வாழ்ந்து வந்தார் கொர்லோட்டா.
தனக்குப் பிறகு வாரிசு என்று சொல்லிக் கொள்ள கொர்லோட்டாவுக்கு இருந்த ஒரே சொந்தம் மூன்றாம் குந்தர் மட்டும்தான். தனது இறுதிக் காலத்தில், அதாவது 1992ம் வருடம் தன்னுடைய முழுச் சொத்தையும் மூன்றாம் குந்தரின் பெயரில் எழுதி வைத்துவிட்டார் கொர்லோட்டா. அந்த சொத்தின் மதிப்பு சுமார் 670 கோடி ரூபாய்.
தொண்ணூறுகளில் உலகின் நம்பர் ஒன் பணக்கார நாய், மூன்றாம் குந்தர் தான். சொத்தைப் பயன்படுத்துவதற்கான முழு உரிமையும் மூன்றாம் குந்தரிடம் மட்டுமே இருந்தது. ஆனால், ஒரு நாயினால் அதை செயல்படுத்த முடியாது. அதனால் மூன்றாம் குந்தரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மௌரிசியா மியான் என்பவருக்கு வழங்கப்பட்டது. கொர்லோட்டாவின் நண்பருடைய மகன்தான் மியான். மூன்றாம் குந்தரின் 670 கோடி ரூபாய் சொத்தினைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து, அதை 3350 கோடி ரூபாயாக வளர்த்தெடுத்தவர் மியான்தான். இப்போது மூன்றாம் குந்தரின் கொள்ளுப் பேரனான ஆறாம் குந்தர் சொத்துக்கு வாரிசாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் நான்காம் குந்தர், ஐந்தாம் குந்தர் என குந்தரின் இரத்த உறவுகள் மட்டுமே சொத்துக்கு வாரிசுகளாக இருந்தனர்.
ஆறாம் குந்தரின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக அறக்கட்டளையை ஏற்படுத்தியிருக்கின்றனர். மியான் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.
அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இருக்கும் வல்லுநர்கள், ஆறாம் குந்தரின் சொத்துக்களை சரியான இடத்தில் மூதலிடு செய்து, லாபத்தை ஈட்டி வருகின்றனர். உதாரணத்துக்கு, சில வருடங்களுக்கு முன்பு மியாமி நகரில் ஆறாம் குந்தரின் பெயரில் ஒரு வீடு வாங்கப்பட்டது. அப்போது இதன் மதிப்பு, 62 கோடி ரூபாய். சமீபத்தில் இந்த வீட்டை 243 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர்.
இன்னொரு பக்கம் கொர்லோட்டா என்று யாருமே இல்லை. இத்தாலியின் வரிச் சட்டங்களை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்வதற்காக மியானும், குடும்பத்தினரும் குந்தரின் மீது சொத்துக்களை எழுதி வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றன. குந்தரின் கதை ‘நெட்பிளிக்ஸி’ல் ‘Gunther’s Millions’ என்ற பெயரில் ஆவணப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.
த.சக்திவேல்
|