கொடைக்கானல்ல மதிகெட்டான் சோலை இருக்கு இல்லையா... அதுமாதிரி இடத்துல நடக்கும் கதை இது...
‘‘ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ‘பிளாக்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கிடைக்கும். பரவாயில்லையே... நம்ம ஊர்ல இந்த மாதிரி படங்களை டிரை பண்றாங்களே... என்ற எண்ணம் தோன்றும். நல்ல முயற்சின்னு ஆடியன்ஸ் பாராட்டுமளவுக்கு வித்தியாசமான படமாகவும் வெகுஜன படமாகவும் இருக்கும்...’’ நிதானத்துடன் பேச ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி. பொட்டன்ஷியல் ஸ்டூடியோ தயாரிக்கும் இதில் ஜீவா, பிரியா பவானி சங்கர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள்.
போஸ்டரில் யாரை அடிக்க உருட்டுக்கட்டையோடு நிற்கிறார் ஜீவா?
இது சயின்ஸ் ஃபிக்ஷன் மிஸ்ட்ரி ஸ்டோரி. ஓர் இரவில் நடக்கும் கதை. இரவு, இருள் என்பதைக் குறிக்கும் விதம், மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் கருப்பு பக்கங்களை குறிக்கும் விதம் என இரண்டு அர்த்தங்கள் பொருள்படும்படி இந்த டைட்டிலை வைத்தோம்.ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நம்ப முடியாத சில விஷயங்கள் இருக்கும். அதை சொல்லும்போது ஏதோ கற்பனையா சொல்றார், கதையளக்கிறார்னு நினைப்போம்.
அதே போன்ற நம்ப முடியாத சம்பவம் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்போது நாமும் நம்ப முடியாத கதை சொல்பவராக மாறிவிடுவோம். அப்போது ஏதோ காதுல பூ சுத்துறார்னு நம்மையும் காமெடியாக பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.அது மாதிரி இதில் ஹீரோ வாழ்க்கையில் நம்பமுடியாத சில விஷயம் நடக்கிறது. அது ‘டுவைலைட் சோன்’ என்ற காலகட்டத்தில் நடக்கிறது. அதாவது இருளும் இல்லாமல், வெளிச்சமும் இல்லாமல் இருக்கும் நேரத்தைத்தான்’ டுவைலைட் சோன்’ என்பார்கள்.
கொடைக்கானல் பகுதியில் ‘மதிகெட்டான் சோலை’ என்ற வனப்பகுதி இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். வெளிச்சம் விழாத அந்தப் பகுதியில் நுழையும்போது மதி மயங்குமளவுக்கு உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், அதனால் அந்தப் பகுதிக்கு அப்படியொரு பேர் வந்துச்சுன்னும் சொல்வதுண்டு.
உலகளவில் பெர்முடா டிரையங்கிள் என்ற இடத்தை அப்படி சொல்வதுண்டு. அந்த இடத்துக்கு விமானம், கப்பல் வழியாக பயணம் செய்த மக்கள் வித்தியாசமான அனுபவத்தை சந்திச்சதாக சொல்வதுண்டு. அதைத்தான் ‘டுவைலைட் சோன்’ என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான டுவைலைட் நேரத்தில் ஹீரோ சிக்கிக் கொள்கிறார். அப்போது அவர் சந்திக்கும் பிரச்னைகள், அனுபவங்கள்...அதிலிருந்து அவரால் தப்பிக்க முடிஞ்சதா, இல்லையா என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.
ஜீவா பக்கா லோக்கலா படம் பண்றவர். அவரை எப்படி இந்தக் கதைக்கு யோசிச்சீங்க?
அதுதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல். ஜீவா சார் கதைகேட்டதும் பண்ணலாம்னு பாசிடிவ்வா பதில் சொல்லி அனுப்பிவெச்சார். மரியாதைக்காக அப்படி சொல்றார்னு நெனைச்சேன். ஏனெனில், ஜீவா சார் கமர்ஷியல் கதைகள் பண்ணக்கூடியவர். இந்தக் கதை தனக்கு செட்டாகுமா என்று யோசிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு என்பதால் அவர் பண்ணுவாரா என்ற டவுட் இருந்துச்சு.
தயாரிப்பு கம்பெனியிலும் ஓகே சொன்னபோதுதான் என்னால் முழுசா நம்ப முடிஞ்சது. அதுமட்டுமல்ல, படப்பிடிப்பு சமயத்துலதான் அவருக்கு கதை பிடிச்சிருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஒருமுறை அவருடைய ஃபிரெண்ட்ஸ் ஸ்பாட்டுக்கு வந்தப்ப, ‘நானும் எவ்வளவு நாள்தான் கமர்ஷியல் கதை பண்ணுவது. இது ஹாலிவுட் ஸ்டைலில் உள்ள கதை’ என்று தன் நண்பர்களிடம் பெருமையா பேசியதை கேட்க முடிஞ்சது.
ஜீவா சார் கேரக்டர் பேர் வசந்த். ஐடியில் வேலை செய்பவரா வர்றார். ஜீவா சாருக்கு தெனாவட்டு மாதிரி ஒரு லுக், ‘நீதானே என் பொன்வசந்தம்’ மாதிரி ஒரு லுக் என இரண்டுவிதமான லுக் இருக்கு. அந்தவகையில் இதில் அவருடைய லுக் ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களின் தொடர்ச்சியா இருக்கும்னு சொல்லலாம். பெரும்பாலும் நைட்ல எடுத்தோம். ஆனால், எந்த இடத்திலும் சோர்வை வெளிக்காட்டமாட்டார்.
பெர்ஃபாமன்ஸ்லயும் பெஸ்ட் தருவார். என்ன பண்ணணும்னு கேட்பாரே தவிர இப்படி பண்ணட்டுமான்னு கேட்டதில்லை. அந்தவிதத்துல ஜீவா சார் இயக்குநரின் டிலைட். பிரியா பவானி சங்கர்?
ஆரண்யா என்ற கேரக்டர்ல வர்றார். அவரும் ஐடியில் வேலை பார்க்கிறவர். புதுசா குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகள் அவர்களுக்கும் இருக்கும். அதை அழகா உள்வாங்கி பண்ணினார். ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட். ஈஸியா ஹேண்டில் பண்ணலாம்.
தன் கேரக்டரில் ஷார்ப்பா இருப்பாங்க.இவர்களுடன் விவேக் பிரசன்னா, யோக் ஜேப்பி, ஸ்வயம் சித்தா, ஷாரா இருக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். பொட்டன்ஷியல் கம்பெனியின் ஆஸ்தான கேமராமேன். ‘பர்ஹானா’, ‘மான்ஸ்டர், ‘இறுகப்பற்று’ என பல படங்கள் பண்ணியுள்ளார். மிஸ்ட்ரி த்ரில்லரா இது அவருக்கு முதல் படம் என்பதால் ஸ்கிரிப்ட் பிடிச்சு உள்ளே வந்தார்.
சாம் சி.எஸ்.மியூசிக். மலையாளம், தெலுங்கு மொழிகளில் பெரிய படங்களில் பிசியா இருக்கிறவர். ரெண்டு பாடல்கள். பிரமாதமா கொடுத்தார். பின்னணி இசை என்றால் அது சாம் சி.எஸ். என்று பேர் வாங்கியவர் என்பதால் பின்னணி இசை பற்றி சொல்ல வேண்டியதில்லை. எடிட்டிங் பிலோமின்.
மோஸ்ட் வான்டட் எடிட்டர். ரஜினி சாரின் இரண்டு படங்களுக்கும் அவர்தான் எடிட்டர். கதைக்கு என்ன தேவையோ அந்த ஷாட்டை மட்டுமே வெச்சிருப்பார். எடிட்டிங்ல கிங் என்பதாலோ என்னவோ, தனக்கு எல்லாம் தெரியும் என்ற மேதாவித்தனத்தை எங்கும் காட்டவில்லை.
பொட்டன்ஷியல் ஸ்டூடியோ பற்றி சொல்லணும். புது இயக்குநரா எல்லா தயாரிப்பு கம்பெனியிலும் கதை சொல்லியிருக்கிறேன். எல்லோருக்கும் கதை பிடிச்சிருந்துச்சு. அல்டிமேட் கதை என்றெல்லாம் சொன்ன கம்பெனி உண்டு.
படமா வந்தா பார்க்கலாம் என்ற மூட்ல இருந்தாங்களே தவிர யாரும் தயாரிக்க முன் வரல.அப்போதுதான் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் பொட்டன்ஷியல் ஸ்டூடியோவுல அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்தார். பிரகாஷ் பாபு சார் கதை கேட்டார். சில மாற்றங்கள் செஞ்சு கொண்டுவரச் சொன்னார். நானும் வழக்கமான பதில்னு நினைச்சேன். ஒரு வாரம் கழிச்சு அவரே ஃபோன் பண்ணி கரெக்ஷன் பண்ணிட்டிங்களான்னு கேட்டார். சார் கேட்டது இதுவாதான் இருக்கும்னு நெனைச்சு கரெக்ஷன் பண்ணிட்டுப் போனேன். நல்ல நாள் பார்க்கிற பழக்கம் இருக்கான்னு கேட்டுட்டு அக்ரிமென்ட்ல சைன் பண்ணச் சொல்லிட்டார்.
யாரிடம் சினிமா கத்துக்கிட்டீங்க?
சொந்த ஊர் திருப்பூர். டிகிரி முடிச்சதும் சினிமா கனவோடு சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்தில் யாரிடமும் உதவி இயக்குநரா சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நானாகவே குறும்படங்கள் எடுத்து சினிமா பழகினேன்.ஒரு கட்டத்தில் ‘ராட்சசன்’ ராம்குமாரிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது.
அங்குதான் ‘ராட்சசன்’, ‘மரகதநாணயம்’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் நட்பு கிடைச்சது. அவரிடம் எதேச்சையா கதை சொன்னேன். கதை கேட்டு இம்ப்ரஸ் ஆனவர் வேற எங்கேயும் கதை சொல்ல வேண்டாம், பொட்டன்ஷியல் ஸ்டூடியோவில் கதை சொல்ல உட்கார வைக்கிறேன்னு சொன்னவர் சில நாட்களிலேயே கதை சொல்ல வைத்தார்.
எஸ்.ராஜா
|