பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்... ஒரு முன்னோட்டம்...



ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள். ஒரு திருவிழாவாகக் களைகட்டும் இதில் மொத்தம் 45 விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தமுறை பிரேக் டான்ஸும் ஒரு போட்டியாக ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவைப் பொறுத்தவரை வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், பாக்ஸிங், ஹாக்கி, குதிரையேற்றம், கோல்ஃப், ஜூடோ, படகோட்டுதல், பாய்மரப் போட்டி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், டென்னிஸ்... எனப் பதினாறு விளையாட்டுகளில் மொத்தம் 117 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவிற்காக தமிழகத்திலிருந்து தகுதி பெற்றிருக்கும் வீரர்கள், வீராங்கனைகள் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

ஜெஸ்வின் ஆல்ட்ரின்

தூத்துக்குடி மாவட்டம் முதலூரைச் சேர்ந்தவர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். இவர் நீளம் தாண்டுதலில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ளார். கடந்த 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார். பின்னர் 2023 ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

அடுத்து நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் 11வது இடம் பிடித்தார்.  அவரின் தேசிய சாதனை 8.42 மீட்டராக ஆகும். இதன்படி இவர் உலக முன்னணி வீரர்கள் வரிசையில் இருக்கிறார். அதனால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரராக அறியப்படுகிறார் ஜெஸ்வின் ஆல்ட்ரின்.

ராஜேஷ் ரமேஷ்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் ஊரைச் சேர்ந்தவர் 25 வயதான ராஜேஷ் ரமேஷ். திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் இவர் தடகளத்திலும் தடம்பதித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அணியில் இவரும் ஒருவராக இருந்தார். இதே ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.

இதற்கு முன்பாக ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தது.இதில் முதல் சுற்றில் இந்திய தடகள அணியினர் 2 நிமிடம் 59.05 நொடிகளில் வந்து ஆசிய சாதனை படைத்தனர். அந்த அணியில் ஒருவராக ஜொலித்தார் ராஜேஷ் ரமேஷ்.
இதனால் ஒலிம்பிக் ஆண்கள் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் அணியில் இடம்பிடித்துள்ளார் அவர்.

சந்தோஷ்குமார் தமிழரசன்

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் சந்தோஷ்குமார் தமிழரசன். இவர் கடந்த ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 49.09 நொடிகளில் வந்து வெண்கலப் பதக்கம் வென்று கவனம் ஈர்த்தார். 
தொடர்ந்து உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் சுற்றில் 50.46 நொடிகளில் வந்து 7வது இடமே பிடித்தார். இருந்தும் ஒலிம்பிக்கில் அவரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

வித்யா ராம்ராஜ்

கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இரண்டிலும் ஜொலிப்பவர்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்தவர்.

அத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். அப்போது 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பி.டி.உஷா செய்த தேசிய சாதனையை சமன் செய்தார் வித்யா ராம்ராஜ். இதனால், நிறைய கவனம் பெற்றார். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் இந்தியக் குழுவில் இடம்பிடித்துள்ளார் அவர்.

பிரவீன் சித்திரவேல்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் ட்ரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அர்ஜென்டினாவின் தலைநகரான புவனர்ஸ் அயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று பெரும் கவனம் ஈர்த்தார்.கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று தேசிய சாதனை படைத்தார்.

அடுத்ததாக கியூபாவின் ஹவானா நகரில் நடந்த, ‘ப்ரூபா டி கான்ஃப்ரன்டேசியன் 2023’ போட்டியில் 17.37 மீட்டர் தாண்டி சாதனை படைத்ததுடன் தங்கமும் வென்றார்.
பின்னர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இவையெல்லாம் ஒலிம்பிக் போட்டிக்கு அவரைத் தகுதிபெற வைத்தன. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரராக வலம் வருகிறார் பிரவீன். 

சுபா வெங்கடேசன்

திருச்சியைச் சேர்ந்தவர் சுபா வெங்கடேசன். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வானபோதே நிறைய கவனம் பெற்றார். ஆனால், அந்த ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தகுதிச்சுற்றுடன் இந்தியக் குழு வெளியேறியது.

கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றது இந்திய அணி. இதில் சுபா வெங்கடேசனும் ஒருவராக ஜொலித்தார். இந்நிலையில் இந்த ஒலிம்பிக்கில் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் சுபா வெங்கடேசன்.

இளவேனில் வாலறிவன்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளவேனில் வாலறிவன். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் உலகக் கோப்பையில் தங்கம் வென்று பெரும் கவனம் ஈர்த்தார். அதேபோல 2018ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு உலக பல்கலைக்கழக விளையாட்டிலும் 10 மீட்டர் ஏர் ரைபிளில் தங்கம் வென்றார். இதே விளையாட்டில் குழு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அர்ஜுனா விருதினைப் பெற்றுள்ள இளவேனில் வாலறிவன், இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.  

பிரித்விராஜ் தொண்டைமான்

பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட்கன் எனப்படும் டிராப் ஷூட்டிங் பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றுள்ளார். இவர் முன்னாள் திருச்சி மேயரான சாருபாலா தொண்டைமானின் மகன் ஆவார். 

இவரின் தந்தை ராஜகோபால தொண்டைமானும் ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் வீரர்தான். பிரித்விராஜ் தொண்டைமான் கடந்த ஆண்டு தோகாவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பையில் ஆண்கள் ஷாட்கன் டிராப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். பின்னர் அதே ஆண்டு இத்தாலியில் நடந்த ஷாட்கன் உலகக் கோப்பையிலும் வெண்கலம் வென்றார். இந்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரராக மின்னுகிறார் பிரித்விராஜ் தொண்டைமான்.

விஷ்ணு சரவணன்

வேலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் விஷ்ணு சரவணன். தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவர் ஆண்களுக்கான பாய்மரப் படகு விளையாட்டில் ஒலிம்பிக்கிற்கு இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றுள்ளார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ILCA 7 ரக பிரிவில் 20வது இடத்தில் வந்தார். அப்போதே கவனம் பெற்றார். கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இன்னும் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.   

ராம் பாலாஜி

கோவையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் பாலாஜி. இவர் ஒலிம்பிக்கில் டென்னிஸ் இரட்டையர் விளையாட்டில் ரோகன் போபண்ணாவுடன் கைகோர்க்க இருக்கிறார்.உலக இரட்டையர் தரவரிசையில் முன்னணியில் இருப்பவர் ரோகன் போபண்ணா. அவருடன் ஒலிம்பிக்கில் இணையப் போவது ஸ்ரீராம் பாலாஜியா அல்லது மற்றொரு டென்னிஸ் வீரரான யூகி பாம்பரியா என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் முன்னணி வீரர் என்ற முறையில் போபண்ணாவிடமே அவரின் பார்ட்னர் தேர்வு ஒப்படைக்கப்பட்டது. அந்நேரம் அவரின் பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து போபண்ணா டிக் அடித்த பெயர்தான் ஸ்ரீராம் பாலாஜி.உலக இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் 62வது இடத்தில் உள்ள ஸ்ரீராம் பாலாஜி, தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் கமல்

சரத் கமலுக்கு அறிமுகமே தேவையில்லை. சென்னையைச் சேர்ந்த அவர், டேபிள் டென்னிஸில் இந்தியாவின் முகமாக உலக அரங்கில் ஜொலிப்பவர். இந்தப் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் இணைந்து இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.

காமன்வெல்த் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், குழுப் பிரிவு, கலப்புப் பிரிவு என எல்லாவற்றிலும் தங்கம் வென்றவர். இதேபோல ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் பதக்கங்கள் பெற்றுள்ளார்.ஒலிம்பிக் பதக்கம்தான் அவருக்கு கைகூடவில்லை. இந்தமுறை பதக்கம் வெல்லும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறார் சரத் கமல்.

நேத்ரா குமணன்

சென்னையைச் சேர்ந்தவர் நேத்ரா குமணன். பெண்களுக்கான பாய்மரப் படகு விளையாட்டில் ஜொலிப்பவர். ILCA 6 பிரிவில் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றவர்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 35வது இடமே பிடித்தார். இருந்தும் மனம் தளராமல் பயிற்சி மேற்கொண்டார். 2021ல் ஓமனில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

தொடர்ந்து 2022ல் தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றார்.தற்போது இரண்டாவது முறை ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ள அவர் இந்தமுறை பதக்கம் வெல்லும் முனைப்பில் நம்பிக்கையுடன் இருக்கிறார்.  

பேராச்சி கண்ணன்