Must Watch



ஆடு ஜீவிதம்

திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டுகளையும், வசூலையும் அள்ளிய மலையாளப்படம், ‘ஆடு ஜீவிதம்’. இப்போது’நெட்பிளிக்ஸி’ல்  தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. கேரளாவைச் சேர்ந்தவர், நஜீப். நல்ல வருமானம் கிடைக்கும்; குடும்பம் செழிப்பாக இருக்கும் என்ற கனவில் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வருகிறார் நஜீப். ஆனால்,
மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு பாலைவனத்தில் ஆடுகளை மேய்த்து, பராமரிக்கும் வேலைக்குத் தள்ளப்படுகிறார்.  

தண்ணீருக்கு நடுவே வாழ்ந்த நஜீப்பிற்கு, குடிக்கக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை. நஜீப்பின் முதலாளி அவரை ஆடுகளில் ஒன்றாக நடத்துகிறார். நஜீப்பும் தன்னை ஓர் ஆடு போல உணர ஆரம்பிக்கிறார். வெளி உலகோடு அவரால் தொடர்பு கொள்ளவே முடியாது. 

அதே நேரத்தில் நஜீப்பால் தப்பித்துச் செல்லவும் முடியாது. இப்படியான துயரச் சூழலிலிருந்து நஜீப் எப்படி மீள்கிறார் என்பதே திரைக்கதை. பென்யாமின் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘ஆடு ஜீவிதத்’தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். நஜீப்பாகக் கலக்கியிருக்கிறார் பிருத்விராஜ். படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி.

கரடகா டமநகா

விடுமுறை நாட்களில் ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் ‘கரடகா டமநகா’ எனும் கன்னடப்படத்தைப் பாருங்கள்.  
விருபாக்‌ஷா என்ற கரடகாவும், பாலா என்கிற டமநகாவும் சின்னச் சின்ன திருட்டு வேலைகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாள் வசமாக காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சிறையில் ஒரு கைதி மாடியின் மீது ஏறி, தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். விருபாக்‌ஷாவும், பாலாவும் புத்திசாலித்தனமாகப் பேசி, தற்கொலையைத் தடுக்கின்றனர்.
விருபாக்‌ஷாவையும், பாலாவையும் ஜெயிலருக்குப் பிடித்துப்போகிறது. தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கிறார். அப்போது கிராமத்திலிருக்கும் ஜெயிலரின் அப்பாவும்அம்மாவும் அங்கே வந்திருக்கின்றனர்.

தனது வீட்டிலேயே அப்பாவையும் அம்மாவையும் தங்கச் சொல்லி கேட்கிறார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டு ஊருக்குக் கிளம்பிவிடுகின்றனர். தனது பெற்றோர்களைக் கிராமத்திலிருந்து, நகரத்திலிருக்கும் தனது வீட்டுக்கு அழைத்து வருமாறு விருபாக்‌ஷா மற்றும் பாலாவிடம் உதவி கேட்கிறார் ஜெயிலர். விருபாக்‌ஷாவும், பாலாவும் என்ன செய்கிறார்கள் என்பதே மீதிக்கதை. படத்தின் இயக்குநர் யோகராஜ் பட்.

தேங்க்ஸ் கிவிங்

ஒரு வித்தியாசமான திரில்லிங் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘தேங்க்ஸ் கிவிங்’ எனும் ஆங்கிலப்படம். பிளேக் பிரைடே தள்ளுபடி விற்பனைக்காக ஒரு சூப்பர் ஸ்டோரின் முன்பு பெருங்கூட்டம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது. கடைக்குள் கூட்டத்தை நுழையவிடாமல் செக்யூரிட்டிகள் தடுத்து வைத்திருக்கின்றனர். எல்லாரையும் உள்ளே அனுப்பிவிட்டால் சமாளிக்க முடியாது. தங்களை உள்ளே விடும்படி கூட்டத்தினர் கத்துகின்றனர்.

இந்நிலையில் கடையின் முதலாளியின் மகள் ஜெஸிகா தன்னுடைய நண்பர்கள் மூலம் கடைக்குள் செல்கிறாள். இது கூட்டத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, பெருங்கலவரம் வெடிக்கிறது. தடுப்பை உடைத்துக்கொண்டு கூட்டத்தினர் கடைக்குள் செல்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் நெருக்கி, மிதித்துச் செல்கின்றனர்.

இதனால் சில உயிர்கள் பலியாகின்றன. இந்தச் சம்பவம் நடந்து, ஒரு வருடம் கழித்து, கலவரத்துக்குக் காரணமான ஒவ்வொருவரும் வரிசையாக கொல்லப்பட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. அடுத்து என்ன நடக்கும், யார் கொலை செய்வது என்பதை யூகிக்க முடியாதபடி விறுவிறுப்பாக திரைக்கதையை எடுத்துச் சென்றிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் எலி ராத்.

ரங்க நீத்துலு

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப்படம், ‘ரங்க நீத்துலு’. தனக்குத் திருப்தியளிக்காத ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறான், சிவா. இதிலிருந்து மீள்வதற்காக ஊருக்குள் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக உள்ளூரில் பிரபலமான ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து, பெரியளவில் பேனர் வைக்கிறான்.

இன்னொரு பக்கம் கார்த்திக் என்ற இளைஞன் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக்கிடக்கிறான். வாழ்க்கையில் தோல்வியடைந்துவிட்டது போன்று எப்போதும் நினைத்துக்கொண்டு, மற்றவர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறான். இதற்கிடையில் பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், ஐஸ்வர்யா. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால், ஐஸ்வர்யாவோ வருணைக் காதலிக்கிறாள்.

வீட்டில் சொல்கின்ற மாப்பிள்ளையையும் அவளால் கல்யாணம் பண்ண முடியாது. வீட்டை மீறி காதலனையும் கைப்பிடிக்க முடியாது. சிவா, கார்த்திக், ஐஸ்வர்யா ஆகிய மூவரும் எப்படி தங்களின் பிரச்னைகளிலிருந்து மீள்கின்றனர் என்பதே மீதிக்கதை. தெலுங்கு மசாலா படங்களிலிருந்து விலகி, வித்தியாசமான ஓர் அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் பிரவீன்குமார் விஎஸ்எஸ்.

தொகுப்பு: த.சக்திவேல்