இந்தியன் எகனாமி இஸ் ஆல்ஸோ மேங்கோ எகனாமி!
இந்தியாவில் 4000 வருடங்களுக்கு முன்பே மாம்பழம் விளைவிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. மட்டுமல்ல, மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான் என்றும் நம்பப்படுகிறது.
மகாபாரதம் மற்றும் இராமாயணத்தில் கூட மாம்பழத்தைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அந்தக் காலத்திலிருந்து இன்று வரை இந்தியக் குடும்பங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் மாம்பழங்களும் இடம் பிடிக்கின்றன.
குறிப்பாக முகலாயப் பேரரசர்களின் விருப்பமான பழமாக மாம்பழம் இருந்தது. இந்தியாவில் பலவகையான மாம்பழங்களை அறிமுகப்படுத்தியதும் முகலாயர்கள்தான் என்று சொல்லப்படுகின்றது. மௌரியப் பேரரசும் மாம்பழங்கள் இந்தியா முழுவதும் பரவலாக ஒரு காரணம். இந்தியாவைச் சேர்ந்த புத்த துறவிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் மூலமாக அங்கே மாம்பழம் அறிமுகமாகியிருக்கிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்கள் சாலையோரத்தில் மாம்பழ மரங்களைத்தான் அதிகமாக நட்டு வைத்திருக்கின்றனர்.
இப்படி இந்தியாவுக்கும் மாம்பழத்துக்குமான உறவு தொடர்கதை போல நீண்டு கொண்டே செல்கிறது. தவிர, உலகளவில் உற்பத்தியாகும் மாம்பழங்களில் 42 சதவீத மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைகின்றன. ஒவ்வொரு வருடமும் மாம்பழ விவசாயிகளின் எண்ணிக்கையும், உற்பத்தியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் சுமார் 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், மில்லியன் கணக்கான விவசாயிகளால் மாம்பழம் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக சமீபத்திய நிதியாண்டில் மாம்பழ உற்பத்தி 14 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆம்; இந்தியாவில் 2023 - 24ம் நிதியாண்டில் 24 மில்லியன் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகியிருக்கின்றன. 2022 - 23ம் நிதியாண்டில் 21 மில்லியன் டன்கள்தான் உற்பத்தியாகியிருந்தன. 2030ல் இந்தியாவில் மாம்பழ உற்பத்தி 30 மில்லியன் டன்களைத் தொட்டுவிடும் என்று கணித்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் மன்னர்களின் காலத்திலிருந்து இன்று வரை ஏழைகளின் முக்கிய உணவாக மாம்பழம் இருக்கிறது.
உதாரணத்துக்கு லக்னோவில் வாழும் பெரும்பாலான ஏழைக்குடும்பங்கள் கிரேவி தயாரிப்பதற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாதபோது, ரொட்டிக்கு கிரேவி போல தொட்டுக்கொள்ள மாம்பழங்களை பயன்படுத்துகின்றனர். பீகாரில் பல ஏழைக்குடும்பங்களின் இரவு உணவே மாம்பழங்கள்தான். இதனால்தான் இந்தியாவில் ‘பழங்களின் ராஜா’ என்று மாம்பழத்தை அழைக்கின்றனர்.
ஏழை மக்களின் உணவாக மட்டுமல்லாமல், இந்தியப் பொருளாதாரத்திலும் முக்கிய அங்கம் வகிக்கிறது மாம்பழம். நேரடியாகவும், மறைமுகமாகவும் மாம்பழத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. தவிர, உலகிலேயே அதிகமாக மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். மட்டுமல்ல, ஆயிரத்துக்கும் மேலான மாம்பழ வகைகள் விளையும் ஒரே நாடும் இந்தியாதான்.
இந்திய மாம்பழங்களின் தனித்துவமான சுவைக்கு வெளிநாட்டினர் மத்தியில் செம மவுசு. அதனால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2023 - 24 நிதியாண்டில் மட்டும் 495.46 கோடி ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 2019 - 20ம் நிதியாண்டில் சுமார் 410 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியிருந்தது. ஐக்கிய அரபு நாடுகள், குவைத், இங்கிலாந்து, அமெரிக்கா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகியிருக்கின்றன.
இப்படி ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி நேரடியாக இந்தியப் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்கிறது. உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் அதிகமாக மாம்பழம் விளைகிறது. இந்த மாநிலங்களில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் மாம்பழம் மூலம் தங்களின் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
குறிப்பாக 2023 - 24ம் நிதியாண்டில் இந்தியாவில் விளைந்த மாம்பழங்களில் 25.76 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் விளைந்தவை. தவிர, அந்நியச் செலாவணி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது இந்த மாம்பழம்.மாம்பழ விவசாயிகள், அறுவடையின்போதும், நடவின் போதும் மாம்பழத்தோட்டத்தில் வேலை செய்பவர்கள், தள்ளுவண்டியில் வைத்து மாம்பழங்களை விற்பனை செய்பவர்கள் முதல் ஏற்றுமதி செய்பவர்கள் வரையிலான அனைத்து வகையான மாம்பழ வியாபாரிகள், ஏற்றுமதிக்காக மாம்பழங்களை பேக்கிங் செய்பவர்கள், மாம்பழங்களை மதிப்பு கூட்டி நிறுவனங்களை நடத்துபவர்கள் என சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வாழ்வாதாரம் மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த இயக்கம் மறைமுகமாக இந்தியப் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்கிறது. ‘‘இந்தியாவில் மாம்பழத்தை அடிப்படையாக வைத்து ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் மட்டும் மாம்பழத்தால் 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்...’’ என்கிறது வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்.
ஏப்ரல், 2011லிருந்து மார்ச் 2012 வரையிலான நிதியாண்டிலிருந்து, ஏப்ரல் 2020லிருந்து மார்ச் 2021 நிதியாண்டு வரையிலான ஆண்டுகளில் மாம்பழம் எந்த அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்திருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்திருந்தது ‘ஸ்டேடிஸ்டா’ என்ற தளம். இதன்படி 2011 - 12 நிதியாண்டில் 33,700 கோடி ரூபாய்க்கும் மற்றும் 2020 - 21 நிதியாண்டில் 41,900 கோடி ரூபாய்க்கும் பங்களிப்பு தந்திருக்கிறது மாம்பழம்.
தவிர,பல்வேறு கால நிலைகளிலும், சூழல்களிலும் கூட மாமரங்கள் வளரக்கூடியவை. அத்துடன் வருடந்தோறும் நிலையான வருமானத்தைக் கொடுக்கிறது, மாம்பழ வியாபாரம். அதனால்தான் மாம்பழ விவசாயிகள் ஒருபோதும் விவசாயத்தைக் கைவிடுவதில்லை.
தள்ளுவண்டியில் மாம்பழங்களை விற்பவர்களிலிருந்து, பல டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்பவர்கள் வரை எல்லோருக்குமே நல்ல லாபம் கிடைக்கிறது. மாம்பழ வியாபாரத்தில் நஷ்டம் என்பது ரொம்பவே அரிது. ஐம்பது வருடங்களுக்கு மேல் மாம்பழ வியாபாரம் மட்டுமே செய்து வாழ்க்கையை நடத்துபவர்களும் இருக்கின்றனர். 2040க்குள் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மாம்பழத்தின் பங்களிப்பு ஒரு லட்சம் கோடியை எட்டும் என்கின்றனர்.
த.சக்திவேல்
|