வெயிலும், வெள்ளமும்... காலநிலை மாற்றத்தால் தத்தளிக்கும் இந்திய நகரங்கள்
உலகம் முழுவதும் நான்கு பருவ காலங்கள் இருப்பதாகப் படித்திருப்போம். அவை முறையே குளிர்காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம்.இதையே தமிழர்கள் இளவேனில், முதுேவனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறாகப் பிரித்தார்கள். ஆனால், இவற்றையெல்லாம் இன்று புரட்டிப்போட்டு விட்டது காலநிலை மாற்றம். சமீபமாக இந்தப் பருவ காலங்கள் இரண்டுதான் எனச் சொல்லும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டிருக்கிறது.
அதாவது ஒன்று அதீத வெயில் காலம். மற்றொன்று அதீத வெள்ளம் சூழ் மழைக்காலம். இவற்றுக்கிடையில்தான் வாழ்க்கையை நகர்த்தும்படியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இன்று இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் எதிர்கொண்டிருக்கும் சவாலான பிரச்னை இதுவே. இந்தக் காலநிலை மாற்றத்தால் ஒருபக்கம் அதிக வெயிலாலும், மறுபக்கம் அதிக மழையாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
கடந்த மே மாத இறுதியில் வடமேற்கு தில்லியின் முங்கேஷ்பூரில் பதிவான வெப்பநிலையின் அளவு 52.3 டிகிரி செல்சியஸ் என்கின்றன செய்திகள்.பின்னர் இது சென்சார் பிழையால் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகக் காட்டியதாகச் சொல்லப்பட்டது. தொடர்ந்து 49.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டது. எப்படியிருந்தாலும் இது தலைநகர் தில்லி வரலாற்றில் கண்டிராத வெப்பநிலை. இதேகாலத்தில் ராஜஸ்தானின் சுரு நகரில் 50.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இந்தியாவின் ‘ஹாட் சிட்டி’ என்ற பெயருடன் முதலிடம் பிடித்தது. இதற்கு அடுத்தபடியாக அரியானாவின் சிர்சா நகர் 50.3 டிகிரி செல்சியஸுடன் இரண்டாம் இடம் பெற்றது.
தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை தில்லியின் முங்கேஷ்பூர் (49.9 டிகிரி செல்சியஸ்), உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி (49), மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் (48.5), ஜார்க்கண்ட்டின் மேதினிநகர் (47.5), பஞ்சாப்பின் பாட்டின்டா (47.2), பீகாரின் டெஹ்ரி (47), சட்டீஸ்கரின் முங்கேலி (47), ஒடிசாவின் பௌத் (45.9) உள்ளிட்ட நகரங்கள் பிடித்தன.
இதில் அடைப்புக்குறிக்குள் உள்ள டிகிரி, செல்சியஸ் வெப்பநிலையைக் கொஞ்சம் கவனியுங்கள். எந்தளவுக்கு வெயில் தகித்திருக்கிறது என்பது புரியும். உண்மையில் இவை அதிக வெயில் அல்ல. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வெப்பம்.
இந்தக்காலத்தில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 41.3 டிகிரி செல்சியஸ்தான். இதையே நம்மால் தாங்கிக் கொள்ளமுடியாமல் தவித்தோம். ஈரோடு நகர் 43 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இதனுடன் ஒப்பிடும்போது மேற்சொன்ன வெப்பநிலை என்பதெல்லாம் ரொம்பவே அதீதம்.
இந்தாண்டு இந்த அதீத வெயில் உண்டாக்கிய வெப்ப அலையால் இந்தியாவில்1600க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயினர். சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹீட் ஸ்ட்ரோக்கால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையேதான் இந்தியாவின் பொதுத்தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா கனஜோராக நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தண்ணீர்ப் பிரச்னையும் தலைவிரித்தாடியது. இத்துடன் நிற்கவில்லை காலநிலை மாற்றம். கடந்த வாரத்தில் இந்த நிலைமையையும் அது சட்டென திருப்பிப் போட்டிருக்கிறது. தில்லியின் பல இடங்களில் அதீத மழையால் வெள்ளம் சூழ்ந்திருப்பதாகச் செய்திகள் வந்தன.
கடந்த ஆண்டு மழை பெய்யாமலேயே யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தில்லி வெள்ளக்காடானது. இப்போது ஓர் இரவில் 22.8 செமீ கொட்டி தீர்த்த மழையால் வெள்ளமாகக் காட்சியளிக்கிறது தலைநகர் தில்லி.
இதில் சுமார் 11 பேர் இறந்ததாக சொல்கிறது ஒரு செய்தி. இதுமட்டுமல்ல. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்தது இந்திய வானிலை மையம். இதில் அசாம் எதிர்பாராத, முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இடைவிடாமல் பெய்த மழையால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். இன்னும் அங்கே நிலைமை சீரடையவில்லை.இதேபோல கர்நாடகாவின் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. இங்கே இயல்பான மழை அளவைவிட அதிக மழைப்பொழிவை இந்தமுறை பெற்றுள்ளன சில மாவட்டங்கள்.
தென்மேற்குப் பருவமழையால் மும்பை நகரும் வெள்ளத்தால் சூழ்ந்திருக்கிறது. கோவா மற்றும் கேரளாவின் பல நகரங்களும், தமிழ்நாட்டில் ஊட்டி உள்ளிட்ட நகர்களும் அதீத மழைப்பொழிவைச் சந்தித்து வருகின்றன. இங்கேயும் அதிக மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி அதீத வெயிலால் இறப்புகள் இருக்கின்றனவோ அதுபோலவே மழையாலும் இறப்புகளும் அதிகம் நிகழ்கின்றன. அசாம் மாநிலத்தில் இதுவரை 109 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் எட்டுக்கும் மேற்பட்டவர்களும், கேரளாவில் நான்கு பேர்களும் மழைக்கு பலியாகி இருக்கின்றனர். இதுதவிர, சாதாரண வைரஸ் காய்ச்சலில் தொடங்கி டெங்கு வரை பல்வேறு தொற்றுநோய்கள் பரவி பாதிப்புகளையும் இறப்புகளையும் அதிகப்படுத்தி வருகின்றன.தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பெல்லாம் சென்னைதான் அதீத மழைப்பொழியால் வெள்ளக்காடாகும் என்ற பேச்சு இருந்துவந்தது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தென்மாவட்டங்கள் அதீத மழையால் பாதிக்கப்பட்டன.
ஒரே நாளில் சாத்தான்குளம் உள்ளிட்ட பல ஊர்கள் 25 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவைப் பெற்றன. இதனால், பல ஊர்களில் வெள்ளம்சூழ்ந்தது. வெள்ளநீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பவே பத்து நாட்கள் ஆனது. ஆனாலும் அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் பலர் மீளவில்லை என்பதே உண்மை.இதுதவிர, தற்போதைய தென்மேற்குப் பருவமழையால் சென்னை உள்பட தமிழகத்தின் பல ஊர்களும் வழக்கத்தைவிட மழைப்பொழிவைப் பெற்று வருகின்றன.
இவையெல்லாம் காலநிலை மாற்றத்தால் விளைந்தவை. இதனை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்பதே நம்முன் உள்ள சவால். இதுகுறித்து பேசும் சூழலியலாளர் ஒருவர், ‘பொதுவாக இந்தப் பாதிப்புகளை அதிகம் சந்திப்பது அடித்தட்டு மக்கள்தான்.
இது காலநிலை செய்யும் அநீதி’ என்கிறார்.‘கடந்த 2019ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகில் உள்ள ஏழரைக் கோடி மில்லியனர்கள் வெளியேற்றிய கார்பன் உமிழ்வு, சுமார் 500 கோடி ஏழை மக்களைப் பாதித்துள்ளது’ என மேலும் வேதனை தெரிவித்திருக்கிறார் அவர். பொதுவாக காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான கார்பன் உமிழ்வுதான். இதனை வளர்ந்த நாடுகள் அளவுக்கதிகமாக வெளியேற்றியதாலேயே புவி வெப்பமடைந்து இன்று அதற்கான பாதிப்புகளை வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வெப்பம் அதிகரிக்கக் காரணம், அதிகப்படியான புதைபடிவ எரிபொருளை எரிப்பதுதான். அதாவது நிலக்கரி, கச்சாஎண்ணெய், பெட்ரோல், டீசல் என நாம் நிலத்திலிருந்து எடுக்கும் பொருட்கள் புதைபடிவ எரிபொருள் (fossil fuel) எனப்படுகின்றன.
இதை வளர்ந்த நாடுகள் அதிகளவில் பயன்படுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய அதிக அளவிலான கிரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல் நிற்கின்றன. பொதுவாக வளிமண்டலத்தில் இந்த பசுமை இல்ல வாயுக்கள் இருக்கின்றன.
அதுவே பூமியின் தட்ப வெப்ப நிலையை சரியாக இருக்க வைக்க உதவுகின்றன. இவை இல்லையென்றால் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது. ஆனால், இந்த பசுமை இல்ல வாயுக்கள் இப்போது அதிக அளவில் வளிமண்டலத்தில் இருப்பதுதான் இங்கே பிரச்னை. இந்த பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது கார்பன் டை ஆக்ஸைடு. அறிவியல் மற்றும் தொழில்புரட்சியின் காரணமாக இந்த கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியிடப்படுகின்றன.
இதனால், வெப்பம் அதிகரிக்கிறது. இதையே உலக வெப்பமயமாதல் என்கிறார்கள். இதில் முரண் என்னவென்றால் அறிவியல் மற்றும் தொழில்புரட்சி மூலம் பல்வேறு பயன்களைப் பெற்றுள்ளோம். இதனால் பொருளாதார வளர்ச்சியை பல நாடுகள் எட்டியுள்ளன. ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சிக்கு நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட புதைபடிம எரிபொருளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல்தான் பல்வேறு வளர்ச்சிகளுக்குக் காரணம். ஆனால், இவற்றை எரிப்பதால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து புவிவெப்பமடைகிறது. இந்தப் புதைபடிவ எரிபொருளைக் கட்டுப்படுத்தினால் வளர்ச்சி பாதிக்கப்படும். வளர்ச்சிதான் முக்கியம் என்றால் புவிவெப்பமடையதலைத் தடுக்கமுடியாது. இந்த முரண்பாட்டை சரிசெய்து தீர்வை எட்டவே வளர்ந்த, வளரும் நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.
இதற்காகவே உலக நாடுகள் இணைந்து 1992ம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டை உருவாக்கி பணிகள் செய்து வருகின்றன. இதன் வழியே 1995ம் ஆண்டிலிருந்து புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, ஐபிசிசி எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியலை மதிப்பிடுவதற்கான ஐநாவின் அதிகாரபூர்வ அமைப்பு பல்வேறு தரவுகளை அளித்துவருகிறது.
இதன்படி தொழிற்புரட்சிக்குப் பிறகிலிருந்து இப்போது வரை பூமியின் வெப்பநிலை என்பது 1.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. நம் பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த 11 ஆயிரம் ஆண்டுகளாக 13.9 டிகிரி செல்சியஸாகவே இருந்துவந்தது.இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததால் பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் என மாறியிருக்கிறது. இன்னும் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வை தடுக்க வேண்டும். அதற்கு கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தியாக வேண்டும்.
ஆனால், இந்த உயர்வு 2030ம் ஆண்டிற்குள்ளே வந்துவிடும் என எச்சரிக்கின்றனர் சூழலியல் நிபுணர்கள். ஆக, இன்னும் மோசமான விளைவுகளை உலகம் சந்திக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்குள் புதைபடிவ எரிபொருள் எடுப்பதை குறைத்து மாற்று எரிசக்திக்கு உடனடியாக திரும்ப வேண்டும். குறிப்பாக நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து சூரியசக்தி, காற்றாலை மூலம் மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிபொருளை நோக்கி நகர வேண்டும்.அரசின் திட்டங்களும் காலநிலை மாற்றத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதே வெப்பநிலை உயர்வை ஓரளவுக்குக் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். என்ன செய்யப் போகிறோம்?
பேராச்சி கண்ணன்
|