தண்ணீர் தோழிகள்
மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி, புந்தேல்காண்ட். ஒரு காலத்தில் அடிக்கடி தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்பட்டது புந்தேல்காண்ட். இன்று அங்கிருக்கும் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தனியாக தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறை என்ற சொல்லே புந்தேல்காண்ட் மக்களின் வாழ்க்கையிலிருந்து அகன்றுவிட்டது.
சில பெண்களின் தீவிரமான செயல்பாட்டினால்தான் புந்தேல்காண்டின் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்திருக்கிறது. அந்தப் பெண்களை ‘தண்ணீரின் தோழிகள்’ அல்லது ‘தண்ணீரின் பாதுகாவலர்கள்’ என்று அழைக்கின்றனர். ‘பர்மர்த்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கொடுத்த பயிற்சிகளின் மூலம் தங்களுடைய ஊர்களின் தண்ணீர் பிரச்னைகளைச் சரி செய்திருக்கின்றனர்.
ஊர் மக்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும்படியாக நீல நிறச் சேலையில் வலம் வருகின்றனர் இந்த தண்ணீர் தோழிகள். தங்களின் செயல்பாட்டுக்காக ஒரு ரூபாயைக் கூட இந்தப்பெண்கள் வாங்கவில்லை என்பது இதில் சிறப்பு. அப்படிப்பட்ட தண்ணீர் தோழிகளில் சிலரைக் குறித்துப் பார்ப்போம்.
*சிர்குன்வார்
வாழ்க்கையில் சந்திக்கின்ற கடும் துயரங்களும், வேதனைகளும் பெரும்பாலானோரை மனச்சோர்விலும், தனிமையிலும் தள்ளும். இந்தப் பெரும்பாலானவர்களிலிருந்து விலகி சிலர் இருக்கின்றனர்.
அவர்கள் தங்களின் தனிப்பட்ட துயரங்களைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைப் பாய்ச்சுவார்கள். அப்படியான ஒருவர்தான், சிர்குன்வார் என்ற பெண்.
உத்தரப்பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உட்குவன் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர், சிர்குன்வார். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட சிர்குன்வாரின் குடும்பம் பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதனால் அவருடைய கணவர் இந்தூருக்கு வேலைக்குச் சென்றார். அப்படி வேலைக்குச் செல்லும்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு, நடக்க முடியாமல் போய்விட்டது.
கணவரின் நிலைதான் மோசமாகிவிட்டது; மகன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வான் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் சிர்குன்வார். ஆனால், மகனும் இளம் வயதில் இறந்துவிடவே, நிலைகுலைந்து போனார் சிர்குன்வார்.இவ்வளவு துயரங்களுக்கு எதிர்வினையாக சிர்குன்வார் என்ன செய்தார் தெரியுமா? தன்னுடைய குடும்பத்தின் நலனை மட்டுமல்லாமல், தனது கிராமத்தின் நலனையும் தன் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக மாற்றிக்கொண்டார். புந்தேல்காண்ட் பகுதியின் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்த தண்ணீர் தோழிகளில் முதல் தோழியே சிர்குன்வார்தான்தண்ணீர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஊரில் உள்ள பெண்களை அணி திரட்டியதே சிர்குன்வார்தான்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்துடன் இணைந்து பல பெண்களுக்கு வேலை வாங்கிக்கொடுத்தார். முக்கியமாக மூன்று தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். அவரது கிராமத்தில் கைகளால் அடித்து தண்ணீர் பெறும் குழாய்கள் வருவதற்கு சிர்குன்வார்தான் மூல காரணம்.
தண்ணீர் பாதுகாப்பு மட்டுமல்ல, அவரது கிராமத்தின் சுகாதாரம் மேம்படவும் சிர்குன்வார்தான் காரணம். ஆம்; பெண்களுடன் இணைந்து பல போராட்டங்களை நிகழ்த்தி, 120 வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதியையும், கிராமத்துக்குத் தேவையான சாக்கடை வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் சிர்குன்வார். மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகள் கிடைக்கவும் வழிவகை செய்து தந்துள்ளார். தனது கிராமம் மட்டுமல்லாமல், பக்கத்து கிராமங்களிலும் இவரது சேவை தொடர்கிறது. சிர்குன்வாரின் உந்துதலால் நூற்றுக்கும் மேலான பெண்கள் நீல நிறச் சேலையை அணிந்துகொண்டு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் சிர்குன்வாரை ‘நேதாஜி’ என்று அன்புடன் அழைக்கின்றனர்.
*சோனா சகாரியா
லலித்பூர் மாவட்டத்திலுள்ள பாம்ஹோரி எனும் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், சோனா சகாரியா. ஏராளமான விவசாய நிலம் சோனாவின் குடும்பத்துக்கு இருந்தது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் அவருடைய நிலம் பாலைவனம் போல மாறிவிட்டது. வாழ்வாதாரத்துக்காக சோனாவின் கணவர் இந்தூரில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றார். வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் சோனாவும் கணவருடன் சேர்ந்து செங்கல் சூளையில் வேலை செய்தார்.
செங்கல் சூளையில் கடுமையாக வேலை வாங்கிவிட்டு, குறைவான வருமானத்தைக் கொடுத்தனர். இந்நிலையில் சோனாவின் கிராமத்துக்கு அடிக்கடி ‘பர்மர்த்’ என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வந்து, போனார்கள். இந்த அமைப்பினரின் உதவியுடன் பாம்ஹோரியைச் சேர்ந்த பெண்களை ஒன்றிணைத்து தடுப்பணையைக் கட்டினார் சோனா.
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் கிராமத்துக்குத் தேவையான தண்ணீர் பாதுகாப்புக் கட்டுமானங்களைக் கட்டினார்கள். ஊர் மக்களுடன் இணைந்து கிணறுகளையும், குளங்களையும் புனரமைத்தனர். வீட்டுக்குத் தேவையான தண்ணீர்க் குழாய்களும் பொருத்தப்பட்டன. சோனாவுடன் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். அவர்களும் தண்ணீர் தோழிகள் வட்டத்துக்குள் வந்தனர்.
ஊரில் ஏதாவது பிரச்னை என்றால் முதலில் இந்த தண்ணீர் தோழிகளிடம்தான் முறையிடுகின்றனர். இன்று சோனாவின் விவசாய நிலம் பசுமையாகக் காட்சியளிக்கிறது. காய்கறிகளையும், பழ வகைகளையும் விவசாயம் செய்து வருகிறார். சோனாவும், கணவரும் வெளியில் வேலைக்குப் போவதில்லை. இப்போது பாம்ஹோரியில் தண்ணீர் பிரச்னையே இல்லை.
*ஷர்தா வன்ஸ்கார்
சமீபத்தில் குடியரசுத் தலைவரிடமிருந்து ‘Catch the Rain’ என்ற விருதைப் பெற்றவர் ஷர்தா. புந்தேல்காண்டில் உள்ள விஜய்புரா எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். சோனாவைப் போலவே ஷர்தாவின் நிலமும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயிருந்தது. கிராமத்துக்கு அருகிலிருந்த நதியில் மணல் கொள்ளை நடந்தது; அத்துடன் தடுப்பணை பழுதாகியிருந்தது. தண்ணீர் பெருக்கெடுத்து அருகிலிருந்த பயிர்கள் சேதமடைந்தன.
இன்னொரு பக்கம் தண்ணீரே சுத்தமாக இல்லை. கிராமத்திலுள்ள 30 பெண்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திடம் முறையிட்டு மணல் கொள்ளையைத் தடுத்தார் ஷர்தா. பிறகு தடுப்பணை கட்டுவதற்கான நிதி கேட்டு பல போராட்டங்களை நிகழ்த்தினார். யாரும் நிதி உதவி செய்யவில்லை. இந்நிலையில் ‘பர்மர்த்’ அமைப்பு மூலம் 5000 சாக்குப்பைகளை வாங்கி, அதில் மணல் நிரப்பி தடுப்பணை அமைத்தனர்.
இதற்கு ஷர்தாவின் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் உதவி செய்தனர். கிராம ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துடன் சேர்ந்து பல நீர்த் தேக்கங்களை அமைத்து தண்ணீர் பாதுகாப்புக்கு வழிவகை செய்தார். பல வருடங்களாக வீணாகிப் போன மழை நீர் ஷர்தாவின் முயற்சியால் நீர்த் தேக்கங்களில் பாதுகாக்கப்பட்டு கிராம மக்களுக்குப் பயன்பட்டது. ஷர்தாவும் தண்ணீர் தோழியாக மாறினார்.
*புஷ்பா
மத்தியப்பிரதேசத்தில் உள்ள டிகம்கத் மாவட்டத்தில் அமைந்துள்ள காக்ரான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய கிராமத்திலேயே முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண் புஷ்பாதான். ஆம்; சமூகப்பணி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் புஷ்பா. தான், படித்த படிப்பு சார்ந்து இயங்க ஆரம்பித்தார். முதலில் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க வாய்ப்பு கிடைக்காத குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்தார்.
புஷ்பாவைப் பற்றிக் கேள்விப்பட்ட ‘பர்மர்த்’ அமைப்பு அவரையும் தண்ணீர் தோழிகள் படையில் இணைத்துக்கொண்டது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்குத் தேவையான பொருளாதார உதவி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
தன்னுடைய கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் ஏழு கிராமங்களுக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக குளம் அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற பல செயல்களைச் செய்திருக்கிறார்.
புஷ்பா, சோனா, சிர்குன்வார், ஷர்தா மாதிரியான ஆயிரத்துக்கும் மேலான தண்ணீர் தோழிகளின் தன்னலமற்ற முயற்சியால்தான் புந்தேல்காண்டின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியிருக்கிறது. சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள அங்ரவுதா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, அருகிலுள்ள மலையை 107 மீட்டர் தூரம் குடைந்து, கால்வாய் அமைத்து தங்களின் வறண்டுபோன கிராமத்துக்குத் தண்ணீரைக் கொண்டு வந்திருக்கின்றனர். இந்தியா முழுவதும் தண்ணீர் தோழிகள் உருவாகினால் எங்கேயும் தண்ணீர் பிரச்னையே இருக்காது.
த.சக்திவேல்
|