விவாகரத்தைக் கொண்டாடும் மவுரித்தேனியா பெண்கள்!



விவாகரத்து ஒரு வேதனையான விஷயம் என்பதே நம் நாட்டு மக்களின் பொதுவான எண்ணம். அதுமட்டுமல்ல. நம் நாட்டில் குடும்பம் மற்றும் சமூக அமைப்புகளுக்குப் பயந்து தம்பதிகள் இருவரும் சகித்துக் கொண்டு தங்களின் வாழ்க்கையைத் தொடர்வார்கள். ஆனால், மவுரித்தேனியா நாட்டில் அப்படியில்லை. பெண்கள் பலரும் விவாகரத்தை அத்தனை சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். இசை, நடனம், விருந்து என அமர்க்களப்படுத்துகின்றனர்.

அத்துடன் விவாகரத்து முடிந்து தாய் வீட்டிற்கு வரும் பெண்களை அவ்வளவு அன்புடனும் உற்சாகத்துடனும் வரவேற்கின்றனர் அம்மாக்களும் மற்ற சகோதரிகளும்.
இதன்பிறகு அந்த விவாகரத்தான பெண்கள் மறுமணம் புரிந்துகொள்கின்றனர். சில பெண்கள் விவாகரத்து நடக்க, நடக்க அடுத்தடுத்து நான்கு முதல் ஐந்து திருமணங்கள் வரை செய்துகொள்கின்றனர். இது மவுரித்தேனியா கலாசாரத்தில் ஒன்றாக மாறியிருக்கிறது.  

இதற்கான காரணம் என்ன?

அதனைப் பார்க்கும்முன் பழைய ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் சலாமியா தேசம் போலான இந்த மவுரித்தேனியா வைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.  வடமேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள தேசம் மவுரித்தேனியா. இதன் 90 சதவீத நிலப்பரப்பு சஹாரா பாலைவனத்தினுள் இருக்கிறது. இதனால், பெரும்பாலான மவுரித்தேனியாவின் நகரங்கள் தென்பகுதியிலேயே அமைந்துள்ளன. அதுவும் மணற்பாங்கான பகுதிகள்தான்.

இதன் தலைநகரம் நுவாக்சாட் ஆகும். மொத்த மக்கள் தொகை சுமார் 43 லட்சம்தான். இதனை நலிந்த பாலைவன தேசம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். இயற்கை வளங்கள் இருந்தபோதும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது குறைவு. பெரும்பாலான மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடித்தல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபமாக இரும்புத்தாது, தங்கம், தாமிரம், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது மவுரித்தேனியா.

சரி, விவாகரத்து ஏன் நடக்கிறது?

சிறுவயது திருமணம், புரிந்துகொள்ளல் இல்லாததால் வரும் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பொதுவான விஷயங்களே விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இதில் முக்கியமாக கலப்புத் திருமணத்தை இவர்கள் ஆதரிப்பதில்லை. உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்றனர். சிறுவயது திருமணத்தால் மனம் ஒட்டாமல் அது உடனடியாக பிரிவை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், மவுரித்தேனியாவில் விவாகரத்து என்பது பொதுவானதாக மாறியுள்ளது.

ஒருகட்டத்தில் பெண்களும் இதனை புதிய சுதந்திரம் பெற்றுவிட்டதாகக் கருதி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஏனெனில், கடந்த காலம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதனைச் செய்தனர்.இந்த உற்சாகமாண மனநிலை ஒரு புதிய கலாசாரத்தை உண்டாக்கி உள்ளது. இதுகுறித்து குறிப்பிடும் மவுரித்தேனியாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர், ‘இது பழைய பழங்குடி முறை. தாய்வழி மூரிஷ் கலாசாரத்தின் பிரதிபலிப்பு’ என்கிறார்.

‘‘அந்தக் காலத்தில் மவுரித்தேனியா சமூகம் உருவாகி வந்தபோது பல்வேறு பகுதிகளில் பல பழங்குடிகள் இருந்தனர். அவர்களுக்குள் கலப்புத் திருமணம் செய்யாமல் தங்கள்
உறவுக்குள்ளேயே பெண்களைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் விவாகரத்து என்றதும் பெண்கள் தனித்து விடப்பட்டனர். அவர்களை சமூகம் ஒரு பொருட்டாக மதிப்பிடாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதுவே இன்று பெரிய கலாசாரமாக மாறிவிட்டது...’’ என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல. இப்போதும் தாங்கள் அழகுதான் என்பதை வெளிக்காட்டுவதற்கும் அடுத்த திருமணத்திற்காகவும் இந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
இதுகுறித்து பேசும் பெண் ஒருவர், தான் ஒன்பது திருமணம் செய்துகொண்டதாகச் சொல்கிறார். ஆனால், இப்போது மறுமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்கிறார். ஏனெனில், தனக்குத் திருமணம் வெறுத்துப்போய்விட்டது எனச் சிரிக்கிறார்.

இவருக்கு பல பார்ட்னர்களிடமிருந்து குழந்தைகள் உள்ளன. அது தனக்கு பெருமையாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். இப்படியாக நிறைய விவாகரத்தான பெண்களை மவுரித்தேனியாவில் பார்க்க முடியும். மவுரித்தேனியாவின் தலைநகரான நுவாக்சாட் நகரில் இவர்கள் ‘விவாகரத்து சந்தை’ என்ற பகுதியைத் தோற்றுவித்துள்ளனர். இந்தச் சந்தை என்பது விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் தங்கள் சமூக அந்தஸ்தை மீண்டும் நிலைநிறுத்தும் பொருட்டும், தாங்கள் மறுமணத்திற்குத் தயாராக இருப்பதாக அறிவிக்கும் வகையிலும் உள்ள இடமாகும்.

இந்தச் சந்தையில் பெண்கள் விவாகரத்து பெற்ற கணவரிடமிருந்து கொண்டு வந்த பொருட்களை விற்கின்றனர். அத்துடன் தாங்களும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை செய்து விற்பனை செய்கின்றனர். இதுபோல இங்கே சுமார் நானூறு கடைகள் உள்ளன. விவாகரத்தான பெண்கள் அதிகரிக்க அதிகரிக்க கடைகளும் அதிகரித்துவிட்டன என்கிறார் அங்குள்ள பெண்மணி ஒருவர். ஏற்கனவே விவாகரத்தான ஆண்களும் அடுத்ததாக இளம் வயது பெண்ணை நாடாமல் முதிர்ச்சியை அடைந்த பெண்களையே நாடி இங்கே வருகின்றனர்.

இதனால், மறுமணம் என்பது இந்தப் பெண்களுக்கு உடனடியாக நடந்துவிடுகின்றன. இதனை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வினோதமாகத் தோன்றலாம். ஆனால், விவாகரத்தால் பெண்களின் மதிப்பு குறையாத சமுதாயமாக மவுரித்தேனியா இருக்கிறது என்பது உண்மை. இருந்தும் இந்த முறையில் நிறைய சவால்களும் உள்ளன. முதலில் அதிக விவாகரத்து விகிதம் குழந்தைகள் மற்றும் குடும்ப ஸ்திரத்தன்மை மீது கேள்விகளை எழுப்புகின்றது.

பல திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளை அவர்கள் எப்படி பராமரிப்பார்கள், அதற்கு பொருளாதாரம் இடமளிக்கிறதா, போதிய நிதிக்கு என்ன செய்வார்கள் உள்ளிட்ட விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என இந்த விவாகரத்து  கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கவலை தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பேராச்சி கண்ணன்