விஜய் ஆண்டனியை நம்பாதீர்கள்! எச்சரிக்கிறார் டாக்டர்



சமீபத்தில் ஓர் இசை வெளியீட்டு விழாவிற்கு செருப்பு அணியாமல் வந்த நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “செருப்பு இல்லாம நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும்.
சீரியஸ்ஸா சொல்றேன்...” என தெரிவித்திருந்தார்.இக்கூற்றை கடுமையாக மறுக்கிறார் இந்திய அளவில் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மரியானோ அன்டோ புருனோ. இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது.

“குடல் புழுக்கள் என்று சில உள்ளன. ஆங்கிலத்தில் Hook Worm. இவற்றில் பல இருந்தாலும் Ancylostoma duodenale, Necator americanus குடல் புழுக்கள் மனிதர்களைத் தாக்கும் வகைகள்.
இவை குடலினுள் இருந்தபடி தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். 

இரத்த சோகை (Anaemia) வரும்.நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்துச் சென்றால்தான் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்ய முடியும். இரத்த சோகை இருந்தால் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிராணவாயு (Oxygen) போதிய அளவு செல்லாது.

இதனால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். ஆனால், கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். ரத்த சோகை அதிகரித்தால் இதயத்திற்குக் கூட பாதிப்பு வரலாம் (Anaemia causing Heart Failure). 

ரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்னைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்திலும் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் (Maternal Mortality), பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) ரத்த சோகை முக்கியமான காரணம். அதேபோல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் (Stunted Growth).

சரி, இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன?

காலரா, டைஃபாய்டு போன்ற கிருமிகள் குடலினுள் வந்து பிரச்னை செய்கின்றன. காலரா கிருமி நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் உங்கள் குடலினுள் வரும். டைஃபாய்டு கிருமியும் அப்படியே. எனவே, நீரைக் காய்ச்சி குடித்தால் காலரா, டைஃபாய்டு ஆகியவற்றை தடுக்க முடியும்.ஆனால், குடற்புழுக்கள் அப்படி அல்ல. 

இந்த Necator americanus புழுக்களின் சிறுவடிவங்கள், உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து ரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில், ரத்தக்குழாயில் (venules) இருந்து காற்றுப் பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவுக்  குழாய் (Orsophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன.

ஒருமுறை குடலினுள் சென்ற Necator americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் ரத்தைத்தை உறிஞ்சும். காலரா, டைஃபாய்டு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்.அதுமட்டுமல்ல. ரத்தசோகையை தடுக்க நீரைக் காய்ச்சிக் குடித்தால் மட்டும் போதும். உங்கள் காலில் இந்தப் புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா - larva) தொற்றுவதைத்தவிர்க்கவேண்டும்.இதற்கு சிம்பிள் பதில்... செருப்பு அணியுங்கள் என்பதுதான்.

குடற்புழுக்களில் இரண்டு வகை மனிதர்களைத் தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா? இதில் Necator americanus என்பது கால்வழியாக மட்டுமே ஒருவரைத் தாக்கும். எனவே, நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால், Ancylostoma duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே, நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்னை, உங்கள் அருகில் இருக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை.

பள்ளிச் சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகுதான் நமது ஊரில் இரத்தசோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களைக் குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால், அது தான் அறிவியல்...” என்கிறார் டாக்டர் புருனோ.

காம்ஸ் பாப்பா