இஷ்டம் போல் வேலை... இஷ்ட நேரத்தில் வேலை...



கிக் பொருளாதாரம்  வரமா... சாபமா?

1810ல் முதல் முறையாக ஒரு நாளில் எட்டு மணிநேர வேலை என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார் ராபர்ட் அவன். அதற்குப் பிறகு, 1817ல் ‘8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு’ என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அப்போது இருந்து நடைமுறையில் இருந்து வருவது எட்டு மணிநேர வேலை. 
இந்த எட்டு மணிநேர வேலை என்பதும் நிரந்தரமாக இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான சலுகைகளாக இஎஸ்ஐ, பிஎஃப், போனஸ், கல்வி உதவித்தொகை ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஆனால், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிக் பொருளாதாரம் ஒன்று டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த கிக் எகனாமி (Gig Economy) என்றால் என்ன? அவற்றால் என்ன பயன்? என்ன தீமை? ஏன் தேவை?

கிக் பொருளாதாரம்

கிக் பொருளாதாரம் என்பது ஒரு சுதந்திரமான சந்தை அமைப்பு. இதில் தற்காலிக வேலைகள் பொதுவானவை. அவை நிரந்தரமானவை என நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இதனை எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ‘‘பொழப்புக்கு என்னப்பா பண்ற...’’ என சொந்தக்காரர்கள் கேட்பார்கள். அதற்கு சிலருடைய பதில், ‘‘யூடியூப் சேனல் வச்சுருக்கேன். அதுல ஏதோ வருது...’’ என்று கூறுவார்கள்.

‘‘ஏம்ப்பா அதுல நிரந்தரமா வருமானம் வருமா?’’ என்று கேள்வி எழும். அதாவது, வேலை கிடைக்கல. அதுனால கிடைக்கிற வேலையை பாக்குறேன்.
அந்த ‘கிடைக்கிற வேலைய பார்க்கிறேன்’ என்ற ஒரு பகுதியை எடுத்து இந்தப் பொருளாதாரம் உருவாகி உள்ளது.

இந்த வேலை முறை கொரோனா வைரஸ் பாதிப்பிற்குப் பின் உலகெங்கும் வேகமாகப் பரவியது. இதன் மூலம், தான் விரும்பிய நேரத்தில், விரும்பிய பணியை, விரும்பிய நிறுவனத்திற்காக செய்து கொள்வார்கள். இந்த முறையில் ஊழியர்கள் குறைவான நேரத்தில் தங்களுக்கு தேவையான வருவாயை ஈட்ட முடிவதால் தொழிலாளர்கள் கிக் பொருளாதார முறையில் பணி செய்வதை விரும்புகின்றனர்.

இந்த முறையில் ஊழியர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதும் சுயமாக வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
எப்படி வந்தது?

8 மணிநேரம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அந்த வருமானம் போதுமானதாக இருக்காது. அப்போது, தன் வேலை நேரம் போக மீதியிருக்கும் சில மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை ஈட்ட விரும்புகின்றனர். உதாரணத்திற்கு, சாலையோரங்களில் துரித உணவு கடைகள், ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது, உணவு டெலிவரி செய்வது என இவை அனைத்தும் தனக்கு கிடைக்கும் நேரத்தில் வேலை பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஒரு சூழலில்தான் கிக் பொருளாதாரம் வளரத் தொடங்கியது. இப்படியே நிரந்தரமற்ற தொழில் நிரந்தரம் என்ற மாயையில் கிக் பொருளாதாரம் உருவாகியுள்ளது.
யார், யார்?

கிக் பொருளாதாரத்திற்கான முக்கிய அளவுகோல் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பம். கிக் ஊழியர்களில் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் தற்காலிக அல்லது பகுதி நேர பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கேப் டிரைவிங், உணவு வழங்குதல், கன்டன்ட் ரைட்டர், பகுதி நேரப் பேராசிரியர்கள், நிகழ்வுகளைக் கையாளுதல், கலை & வடிவமைப்பு, ஊடகம் போன்ற பலதரப்பட்ட நிலைகளில் அடங்குவர். இந்த பொருளாதாரத்திற்கு ஸ்மார்ட்போன் மற்றும் வரம்பற்ற டேட்டாவுடன் கூடிய தொழில்நுட்பம் உந்து சக்தியாக உள்ளது.

பொருளாதாரக் காரணிகள்

முதல் காரணமாக வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை பார்த்துக்கொண்டே பொருளாதாரத்தை ஈட்டுவது. இரண்டாவது, என் இஷ்டத்திற்கு, எனது நேரத்திற்கு ஏற்ப வேலையை நானே முடிவெடுக்கும் நிலையில் இருப்பேன் என்பது. மூன்றாவது, இப்போது கிடைப்பதைவிட இந்த கிக் பொருளாதாரம் மூலம் கூடுதலாக பணம் கிடைக்கிறது. நான்காவது, இருக்கும் வேலையையும், குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஐந்தாவது காரணம், வேறு வழியில் இல்லை, பணம் சம்பாதிக்க வேண்டும். இதன் மூலமாக வருமானம் வருகிறது என கிக் பொருளாதாரம் உருவாக பல்வேறு காரணிகள் உள்ளன.

இந்தியாவில் எத்தனை பேர்?

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை அடுத்து இந்தியாவில் கிக் பொருளாதாரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2019 - 20ம் ஆண்டில் இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 68 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 75 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், வரும் 2029ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக மொத்த பணியாளர்களில் 4.1% கிக் தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2030ல் 2.35 கோடிநிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியாவில் கிக் பொருளாதாரம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. தற்போது 77 லட்சம் மக்கள் கிக் பொருளாதாரத்தில் பணியாற்றி வரும் நிலையில் வரும் 2030ம் ஆண்டில் இது சுமார் 2.35 கோடியாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. மேலும், சில்லரை வர்த்தகம், விற்பனைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் நிதி - காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் நிதி ஆயோக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிரந்தரப் பணியாளர்களுக்கு பாதிப்பா?

இந்த கிக் பொருளாதாரம் வேலையில்லாமல் இருப்போர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக இருந்தாலும், நிரந்தரத் தொழிலாளர்களின் வேலைக்கும் அவர்களுக்கான சலுகைகளுக்கும் ஆபத்தாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கிக் பொருளாதாரத்தின் தாக்கம் என்பது தனியார் துறை சார்ந்தே இயங்குவதால், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிரந்தரமற்ற ஒரு நடைமுறைக்கு மாற்றப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவற்றை நாம் வழங்க வேண்டுமா என நிறுவனங்கள் யோசிக்கும். நிரந்தமில்லாத பணிகளை நம்பி பெரிய அளவில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. சொந்த வீடு வாங்குவது, தொழில் தொடங்குவது, கார் வாங்குவது என எதனையும் முழுவதுமாகச் செய்ய முடியாது.

நன்மைகள்... சவால்கள்...

கிக் பொருளாதாரம் நெகிழ்வுத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. பல வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் மூலம் எளிதாக அணுக முடியும். இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல. வணிகங்களுக்கும், நுகர்வோருக்கும் பலனளிக்கிறது. ஏற்கனவே கூறியது போல முழுநேர ஊழியர்களைப் பணியமர்த்த முடியாத நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டங்களுக்கு பகுதி நேர அல்லது தற்காலிக ஊழியர்களை நியமிக்கலாம்.

பணியாளரின் தரப்பில் அதிக வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனாலும், இந்தியாவில் கிக் பொருளாதாரம் இன்னும் மிக ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 90% இந்திய கிக் தொழிலாளர்கள் கொரோனா காலகட்டத்தில் வருமானத்தை இழந்துள்ளனர். அவர்களின் பொருளாதார எதிர்காலமும் கேள்விக்குறியானது.

கிக் தொழிலாளர்களின் முக்கிய கவலைகளில் ஒன்று மருத்துவ செலவுகள் போன்ற பாதுகாப்பு சலுகைகள் கிடைக்காது, பென்சன் ஆகியவை கிடைக்காது. இவை நிலையானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பாரம்பரிய வேலை கலாசாரத்தின் மாத சம்பளத்துடன், இனி வரும் கிக் பொருளாதாரம் அடுத்து இயல்பானதாக மாறப்போகிறது என்றால் அதற்கான சட்டங்களை அரசாங்கம் ஒழுங்குபடுத்த வேண்டும்.

இந்த கிக் பொருளாதாரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 22 சதவீதம் மட்டுமே ஹை ஸ்கில்டு தொழிலாளர்களாகவும், 47 சதவீதம் மீடியம் ஸ்கில்டு தொழிலாளர்களாகவும், 31 சதவீதம் லோயர் ஸ்கில்டு தொழிலாளர்களாகவும் உள்ளனர். தங்களுக்குத் தேவையான பொருளாதாரத்தை தாங்களே இஷ்ட நேரத்தில் உருவாக்கிக் கொள்ளலாம் என்றாலும், நிரந்தரமற்றவையை எப்படி நிரந்தரம் என்று நம்புவது என்பதுதான் இங்கு பலருக்கும் குழப்பமாக உள்ளது.

சேவற்கொடி செந்தில்