ரஷ்ய இராணுவத்துக்கு பீகார் SHOE
உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய இராணுவப் படையைக் கொண்ட நாடு, ரஷ்யா. இராணுவத்துக்காக அதிகமாக செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அப்படிப்பட்ட ரஷ்ய இராணுவம் நினைத்தால் உலகின் முன்னணி ஆடம்பர பிராண்டுகளிடம் இருந்தே தங்களுடைய இராணுவ வீரர்களுக்கான காலணிகளை வாங்க முடியும்.
அந்தளவுக்கான பொருளாதார வசதி அதனிடமுள்ளது. ஆனால், ரஷ்ய இராணுவமோ பீகாரில் உள்ள ஹாஜிப்பூரில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்திடமிருந்துதான் காலணிகளை வாங்குகிறது. இன்னமும் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் முகாமிட்டிருக்கிறது. அங்கே ஹாஜிப்பூரில் தயாரான ‘Made in Bihar’ காலணிகளை அணிந்துகொண்டு, அணிவகுப்பு செய்திருக்கிறது. ரஷ்ய இராணுவம் இந்தியக் காலணிகளைப் பயன்படுத்துவதுதான் இப்போது இணையத்தில் ஹாட் டாக்.
மட்டுமல்ல, நீண்ட காலமாகவே இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மருந்துப்பொருட்கள் முதல் மெஷினரிகள் வரை ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்வதும், இறக்குமதி செய்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில் ஹாஜிப்பூரின் காலணியும் இணைந்திருப்பதால் இந்தியா - ரஷ்யாவுக்கு இடையேயான வணிக உறவு பலப்படும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
பீகாரின் தலைநகரான பாட்னாவிற்குப் பிறகு, அங்கே வேகமாக வளர்ந்து வரும் நகரம், ஹாஜிப்பூர். வேளாண்மைப் பொருட்களுக்கு பெயர் பெற்ற ஊர் இது. அங்கே இயங்கிவரும் ‘கம்பீட்டன்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற நிறுவனம்தான் ரஷ்ய இராணுவத்துக்குத் தேவையான காலணிகளைத் தயாரித்துக் கொடுக்கிறது. கடந்த வருடம் மட்டுமே 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 லட்சம் இராணுவ காலணிகளை ஏற்றுமதி செய்திருக்கிறது இந்நிறுவனம். ‘கம்பீட்டன்ஸி’ன் காலணிகள் சர்வதேச அரங்கில் ஹாஜிப்பூருக்கு ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
ரஷ்யாவைப் பார்த்து மற்ற நாடுகளும் ஆர்டர்கள் கொடுக்க முன்வந்துள்ளன. அதனால் ‘கம்பீட்டன்ஸ்’ காலணிகளுக்கு சர்வதேச அளவில் செம டிமாண்ட். ரஷ்ய இராணுவத்தினர் பல பிராண்டுகளைச் சேர்ந்த காலணிகளை அணிந்தாலும், ஹாஜிப்பூரின் காலணிகளைப் போல பொருத்தமான, பாதுகாப்பான காலணிகளை இதுவரை அணிந்ததில்லை என்கின்றனர். அதனாலேயே ஹாஜிப்பூரின் காலணிகளுக்கு ரஷ்ய இராணுவத்தினரின் மத்தியில் நல்ல பெயர்.
இராணுவத்திற்கான காலணிகளை மட்டுமல்லாமல், டிசைனர் ஷூக்களைத் தயாரித்து ஐரோப்பிய சந்தைகளிலும் கலக்கி வருகிறது ‘கம்பீட்டன்ஸ்’. ‘‘ஆறு வருடங்களுக்கு முன்புதான் ஹாஜிப்பூரில் நிறுவனத்தை ஆரம்பித்தோம். உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதுதான் எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. தரம் மற்றும் பாதுகாப்புதான் எங்களின் முக்கிய குறிக்கோள்.
இப்போது ரஷ்ய இராணுவத்தினருக்கான காலணிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம். விரைவில் உள்ளூர் சந்தைகளிலும் கால்பதிக்கப் போகிறோம்...’’ என்கிறார் ‘கம்பீட்டன்ஸ்’ நிறுவனத்தின் பொது மேலாளரான ஷிப் குமார் ராய். ‘‘ரஷ்ய இராணுவத்தினருக்காகத் தயாரிக்கப்படும் காலணிகள் எடை குறைவாக இருக்கும்.
எவ்வளவு ஈரமான பகுதிகளிலும் கூட வழுக்கி விடாது; 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட இதமான உணர்வைக் கொடுக்கும். ஒரு நாள் முழுவதும் அணிந்திருந்தாலும் கூட பெரிதாக வியர்க்காது, உயர்ந்த தரமான தோல்களைப் பயன்படுத்துகிறோம்...’’ என்று ரஷ்ய இராணுவத்தினருக்கான காலணிகளைப் பற்றியும் பகிர்ந்தார் ராய்.
திறமையான கைவினைக் கலைஞர்களைக் கொண்டு காலணிகளைத் தயாரிக்கிறது ‘கம்பீட்டன்ஸ்’. நன்கு பயிற்சி பெற்ற கைவினைக் கலைஞர்கள் அரிதாக இருப்பதால், ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிக்கும் நோக்கில் இருக்கிறது இந்நிறுவனம். இப்போது ‘கம்பீட்டன்ஸி’ல் 300 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் டிசைனர் ஷூக்களை ஏற்றுமதி செய்யப்போகிறது ‘கம்பீட்டன்ஸ்’.
‘‘ஹாஜிப்பூர் மாதிரியான ஓர் இடத்தில் ஃபேஷன் தொழிற்சாலையை நடத்துவது ரொம்பவே சவாலான விஷயம். அரசின் உதவி மற்றும் விளம்பரம் மூலமாகத்தான் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.
பீகார் அரசு தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல பல திட்டங்களைத் தீட்டி வருகிறது. அரசின் உதவியால்தான் ரஷ்யாவில் உள்ள இறக்குமதியாளர்களைச் சுலபமாகத் தொடர்புகொள்ள முடிந்தது. அடுத்த வருடம் ஏற்றுமதியை 50 சதவீதம் அதிகரிக்கப் போகிறோம்...’’ என்கிறார் ‘கம்பீட்டன்ஸ்’ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிர்வாகி பழுமயா. ஹவாய் செருப்பின் விலை ரூபாய் ஒரு லட்சம்!
சமீபத்தில் டுவிட்டரில் வெளியாகி, லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளி, ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது ஒரு வீடியோ. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
சவுதி அரேபியாவில் உள்ள ஆடம்பரமான ஒரு செருப்புக்கடை.
அந்தக் கடையிலுள்ள ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ரப்பர் செருப்புகளை விற்பனைக்காக வைத்திருக்கின்றனர். கடையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு ஜோடி செருப்பை வெளியில் எடுத்து அதிலுள்ள சிறப்புகளை விவரிக்கிறார். அந்தச் செருப்பின் விலைதான் அந்த வீடியோ வைரலாகக் காரணம். ஆம்; அதன் விலை 4590 ரியால். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 1.02 லட்ச ரூபாய். நம்ம ஊரில் கழிப்பறைக்குச் செல்ல பயன்படுத்தும் காலணிகளை நகல் எடுத்தது போல இருக்கிறது அந்த செருப்பு. அதனால் நெட்டிஸன்கள் அந்த செருப்பைக் கலாய்த்தும் வருகின்றனர். மட்டுமல்ல, இங்கே 100 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு செருப்பு, சவுதி அரேபியாவில் ஒரு லட்சத்துக்கு விற்கப்படுவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
த.சக்திவேல்
|