பெண் வேடமிடும் ஆணாலும் ‘ஜமா’ வாத்தியாராக முடியும்!



சர்வதேச விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த லர்ன் அண்ட் டீச் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக வெளியாகவுள்ளது ‘ஜமா’. கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை சொல்லப்போகும் இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார் பாரி இளவழகன். இசை இளையராஜா. இதன் டீசர், டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பாரி இளவழகனிடம் பேசினோம்.

இது கூத்துக் கலையின் பெருமையைச் சொல்லும் படமா?

டிரைலர் பார்த்தாலே இது என்ன மாதிரி படம்ன்னு புரிஞ்சிருக்கும். தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக பெண் வேடம் கட்டும் இளைஞனின் மனநிலையைச் சொல்லும் படம்.
இதற்குமுன் தெருக்கூத்து சார்ந்த படைப்புகள் சில வெளிவந்துள்ளன. அந்தப் படைப்புகள் தனிப்பட்ட விதத்தில் எனக்கு வருத்தத்தை உண்டாக்கியது. காரணம், தெருக்கூத்துக் கலை நலிஞ்சு போயிடுச்சு, வாழ்வாதாரம் இல்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அதை தவறான புரிதலாகப் பார்க்கிறேன்.

ஏனெனில், நானும் சரி, என் குடும்பம், உறவுகள் என அனைவரும் தெரு கூத்து பின்புலம் உள்ளவர்கள். அதுமட்டுமல்ல, கூத்துக் கலைஞர்கள் அனைவரும் கெளரவமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வருஷத்துல 300 நாட்கள் பிசியாக இருக்கிறார்கள். அவர்களிடம் கால்ஷீட் கேட்டபிறகுதான் இந்தப் படத்துக்கு ஷூட்டிங்  ஃபிக்ஸ் பண்ணினேன்.இத்துறையில் பெண் வேஷம் கட்டும் ஆண்கள் சந்திக்கும் கிண்டல், கேலி, அவமானம் அதிகம். அவர்களின் பேச்சு, உடல்மொழி எல்லாமே பெண்ணுக்கு நிகராக மாறியிருக்கும்.

காதல், திருமணம் என்று வரும்போதும் உளவியல் ரீதியாக பல பிரச்னைகளை சந்திப்பதுண்டு. அவர்களிடம் ஆளுமைத்தன்மை இருக்காது என்றெல்லாம் நினைத்து பல விஷயங்களில் நிராகரிக்கப்படுவார்கள். சுருக்கமா சொல்வதாக இருந்தால் பெண் வேடம் கட்டுபவர் ‘ஜமா’ வாத்தியாராக வர முடியாது. 

ஆண் வேடம் போடுபவர்தான் தலைவராக இருப்பார்.ஜமாவை வழிநடத்த சில லீடர்ஷிப் குவாலிட்டியை ஃபிக்ஸ் செய்திருப்பாங்க. அப்படி, பெண் வேஷம் கட்டும் இளைஞன் ஏன் ஜமாவுக்கு தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என்று நினைக்கிறான். அந்த இளைஞனின் லட்சியம்தான் ‘ஜமா’.  

லீடரா யார் வேண்டுமானாலும் வரமுடியும். கோபம், ஆளுமை அவசியம் இல்லை. நிதானம் பொறுமை இருந்தாலும் லீடரா வரமுடியும் என்பதுதான் படத்தோட மறைமுக லைன்.  அப்பா இழந்த இடத்தை மகன் மீட்பது ஓப்பன் லைன்.‘ஜமா’ டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?கிரிக்கெட் என்றால் டீம், மியூசிக் என்றால் பேண்ட். அது மாதிரி ஜமா என்றால் ட்ரூப். அப்படி பல ஜமாக்கள் உள்ளன. இது அம்பலவாணன் என்ற ஜமாவைப் பற்றிய கதை.

முதல் படத்திலேயே நடிச்சு இயக்கிய அனுபவம் எப்படி?

நடிகனாகவும் இயக்குநராகவும் சினிமாவுல சில வருஷங்களா இயங்கி வர்றேன். இது நான் நடிப்பதற்காகவே எழுதப்பட்ட கதை. என்னுடைய முதல் படத்தை எனக்குத் தெரிஞ்ச உலகத்திலிருந்து பண்ணனும்னு நெனைச்சேன். இந்தக் கதையை வேறு இயக்குநர்களும் இயக்கியிருக்கலாம். ஆனால், இந்தக் கதையை சரியாகச் சொல்லணும். எந்தவிதத்திலும் தவறாக சொல்லக் கூடாது. இந்தக் கலையைத் தெரிஞ்சவன் என்பதால் இரண்டு பொறுப்புகளையும் நானே ஏற்றுக்கொண்டேன்.

ஹீரோயின் யார்?

அம்மு அபிராமி. ரொம்ப அழுத்தமான கேரக்டர். என்னுடைய கேரக்டருக்கு நேர் எதிராக அவர் கேரக்டர் இருக்கும்.ஜமா தலைவராக சேத்தன் வர்றார். அவரைவிட வேற யாரும் சிறப்பா பண்ணமுடியாதளவுக்கு அசத்தினார். ஆண் வேஷம் போடுபவர்கள் கிரீடம் கட்டி ஆடுவது உடல் ரீதியா சவாலானது. ஆடையை இறுக்கமா கட்டணும். அப்படி கட்டும்போது மூச்சு விட சிரமா இருக்கும். கிரீடத்தை இறுக்கமா கட்டும்போது 18 முடிச்சுப் போடுவாங்க. பத்து நிமிஷத்துல வாந்தி, மயக்கம் வந்துவிடும்.

கூத்துக் கலைஞர் தாங்கல் சேகரிடம் நுட்பமான அடவுகளை கத்துக்கிட்டு பண்ணினார். லைவ் சவுண்ட் என்பதால் தெருக்கூத்துப் பாடல்களை பிசிறு தட்டாம பாடி அமர்க்களப்படுத்தினார். இவர்களுடன் ஸ்ரீ கிருஷ்ணதயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து இருக்கிறார்கள். படத்துல நடிச்ச எல்லாரும் என்னுடைய விஷனைப் புரிஞ்சு சப்போர்ட் பண்ணினார்கள்இளையராஜா?

ராஜா சாரிடம் கதையை சொல்லவே இல்லை. பைலட் காட்டிதான் ஓகே வாங்கினேன். அதுவே அவருக்கு திருப்தியா இருந்ததால என் பேர், ஊர், யார் கிட்ட ஒர்க் பண்ணினேன் என எதையும் கேட்காம ஒர்க்கை மட்டும் பார்த்துட்டு பண்ணலாம் என்றார். ராஜா சாரிடம் போவதற்கு காரணம் இந்தக் கதைதான். அவர் இசையமைக்கும்போதுதான் படம் சரியாக இருக்கும். க்ளைமாக்ஸ் தெருக்கூத்துப் பாடல் பேசப்படும்.

சாரிடம் சில யூடியூப் ரெஃபரன்ஸ் காட்டினேன். ‘சினிமாப் பாடலா பண்ணிக் கெடுக்க வேண்டாம். ஒரிஜினல் கலைஞர்களை வெச்சு பண்ணுவோம்’ன்னு சொல்லி படத்துல ஒர்க் பண்ணின நிஜக் கலைஞர்களை வரவழைச்சு ரிக்கார்டிங் பண்ணினார். அந்தப் பாடலை ராஜா சார் பிறந்த நாளன்று டெடிகேட் பண்ணினோம். சார் எங்கிட்ட சொன்னது ‘உன் ஸ்டைலில் அவர்களிடம் வேலை வாங்காதே, அவங்க ஸ்டைலில் பண்ணவிடு’ என்று. ஒரிஜினல் இசைக்காக நிறைய ஆலோசனை கொடுத்தார்.

நான்கு பாடல்கள். எல்லாமே ஹிட் ரகமா வந்திருக்கு. கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து அழகை மிஸ் பண்ணாம ஆர்வமா ஒர்க் பண்ணினார்.  
தயாரிப்பாளர் சாய் தேவானந்த் சார் சினிமா பேஷன் உள்ளவர். எனக்கான முழு சுதந்திரம் கொடுத்தார்.

தெருக்கூத்துக் கலையில் ஆபாச நெடி வீசுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?

அப்படிச் சொல்லிட முடியாது. அது அவர்கள் இயல்பு மொழி. ‘மகாபாரதம்’ சொற்பொழிவு நடத்தினா அங்கு கூட்டம் குறைவா இருக்கும். தெருக் கூத்து என்று வரும்போது
கூட்டம் அதிகமா இருக்கும். நீங்க சொல்ற மாதிரி சில வார்த்தைகள் இருக்கலாம். ஆனால், கிராமத்து மனிதர்கள் நகரத்தில் உள்ளவர்களைப் போல் அளந்து பேசுவதில்லை. யதார்த்தத்தை அப்படியே போட்டு உடைச்சுடுவாங்க.

சினிமாவில் அப்படியே காட்டவில்லை. அப்படிக் காட்டினால் சென்சார் தாண்ட முடியாது. கூத்துக் கலையில் இருக்கும் கெட்ட வார்த்தைகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் நம் கலை, பாரம்பரியம், இதிகாசங்களை தலைமுறைகளைக் கடந்து எடுத்துச் செல்கிறார்கள்.

உங்களுக்கு அறிமுகம் கொடுங்கள்?

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டாபட்டுதான் சொந்த ஊர். படிச்சது என்ஜினியரிங். ஸ்கூல் டைம்ல இலக்கியத்துல ஆர்வம் அதிகம். அதுதான் என்னை சினிமா பக்கமா திருப்புச்சு. மைம் கோபி சாரிடம் ஆக்டிங் கத்துக்கிட்டேன். ‘ரம்’ படத்துல உதவி இயக்குநர். சில குறும்படங்களை இயக்கி நடித்தேன். இப்போது டைரக்டர் கம் ஹீரோ அவதாரம்.

எஸ்.ராஜா