இந்திய சினிமா உருவாகிட்டு இருக்கு... விளக்குகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி



அகல்யா (‘கார்கி’), பூங்குழலி (‘பொன்னியின் செல்வன்’), அமுதா என்கிற அம்மு (‘அம்மு’), கீர்த்தி நாயர் (‘கட்டா குஸ்தி’)... இப்படி கேர்ள் நெக்ஸ்ட் டோர் கதாபாத்திரங்களாக அல்லாமல் லேடி இன்சைட் த டோர் என தனது கேரக்டர்களில் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கும் அளவிற்கு தொடர்ந்து கதாபாத்திரங்க ளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி. தமிழ், மலையாளம், தெலுங்கு என படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவரிடம் ஹாய் சொன்னோம்.

‘‘‘லேடி இன்சைட் த டோர்’... இந்த வார்த்தைகளுக்கு முதல்ல நன்றி. ஆக்சுவலி இந்த ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கேரக்டர் எல்லாம் ஒரு வயது வரைக்கும்தான். 24 வயது வரைக்கும் நடிக்கலாம். அதைத் தாண்டிட்டாலே நடிப்பு மட்டும் இல்லை, வாழ்க்கையிலும் நாம சார்ஜ் எடுக்கணும். குடும்பம்,கரியர், தன்னம்பிக்கை, நமக்கு நாமே சப்போர்ட்... இதெல்லாம் எல்லா பெண்களுக்குமே தேவை. யாரும் வர மாட்டாங்க, நம்மை நாமதான் பார்த்துக்கணும்...’’ பக்குவப்பட்ட மனநிலையில் பேசுகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.  

‘பொன்னியின் செல்வ’னுக்கு முன் மற்றும் பின் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கு?

எண்ணிக்கைக்குபடம் செய்யக்கூடாது என்கிற மிகப்பெரிய மாற்றத்தை எனக்குள்ளேயே நான் உருவாக்கிக்கிட்டேன். அதே போல் தமிழ் சினிமா ஆடியன்ஸ்கிட்ட எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைச்சிருக்கு. 

மணி சார் கூட வேலை செய்ததுக்குப் பிறகு ஒரு காட்சியின் முக்கியத்துவம் என்னனு புரிஞ்சிக்கிட்டேன். அவர் நினைச்சபடி காட்சி வரும்வரை விட மாட்டார்.
வரும் படத்தில் எல்லாம் நடிக்காமல் ப்ரொஃபஷனலா கதைகளை எப்படித் தேர்வு செய்யணும் என்கிற பக்குவம் அடைஞ்சிருக்கேன்.  

மம்முட்டி, மணிரத்தினம், கமல்ஹாசன்... போன்று ஜாம்பவான்களுடன்கள் பணிபுரியும்பொழுது கிடைத்த பலன்கள் என்ன?

பயிற்சி. சினிமா என்றால் இதுதான் என்கிற பயிற்சி கிடைச்சிருக்கு. இன்னமும் கமல் சாருடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு வரவில்லை. ‘தக் லைஃப்’ படத்தில் எனக்கான காட்சிகள் இனிமேதான் படமாக்கப் போறாங்க. விரைவில் சாரை சந்திக்கும் பொழுது நிச்சயம் அவரிடம் இதுவரையிலும் இல்லாத பல பாடங்கள் எனக்குக் கிடைக்கும். 

கதைத் தேர்வில் துவங்கி, கேரக்டர் தேர்வு வரை அத்தனையிலும் பக்குவமாக செயல்படணும்னு இவர்கள்தான் கற்றுக் கொடுத்தாங்க. ஒரு படத்தில் நடிப்பது மட்டும் ஒரு கலைஞனின் வேலை கிடையாது. அதைக் கொண்டு போய் சரியான பார்வையாளர்கள்கிட்ட சேர்க்கறதும் கலைஞர்களுடைய கடமை என்பதையும் புரிஞ்சுகிட்டேன்.

மொழிகள் கடந்த சினிமாக்கள் உருவாக்கத்தை எப்படிப் பார்க்கறீங்க?

ஒரு மலையாள நடிகையாகத்தான் என் கரியரைத் துவங்கினேன். ஆனால், இன்னைக்கு எங்கே தமிழ்நாட்டில் ஷூட் வைத்தாலும் என்னை பூங்குழலியாகவும், ‘கட்டா குஸ்தி’ கீர்த்தியாகவும் பார்த்து பல அம்மாக்கள், அக்காக்கள் பேசுறாங்க. பொள்ளாச்சியில் ஷூட்டிங் நட்டந்தபோது ஒரு 7 வயது குழந்தை என்கிட்ட வந்து பேசினாங்க. இதைக் காட்டிலும் என்ன வேணும்.  ‘கார்கி’ படத்தைப் பாராட்டறாங்க.

இதெல்லாம் மொழிகள் சினிமாவுக்கு ஒரு தடையில்லை என்கிற நிலை வந்ததால்தான். திறமைக்கு மொழி ஒரு தடை கிடையாது என்கிற சூழல் உருவாகியிருக்கு.
இதனால் இந்திய கலைஞர்கள், இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் உருவாக்கம், இந்திய சினிமாவின் உருவாக்கம் நடந்திட்டு இருக்கு. இது ஆரோக்கியமான விஷயம். மேலும் வாய்ப்புகளும் அதிகரிச்சிருக்கு.

தயாரிப்பாளராக அடுத்த படம் என்ன? இயக்குநர் கனவு இருக்கா?

ஹைய்யோ... இப்போதைக்கு அந்தத் திட்டமே கிடையாது. மம்முட்டி சார் எனக்கு செய்த மிகப்பெரிய அட்வைஸ்... ‘நீ ரொம்ப ஸ்பீடா போற, இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை. முதலில் நமக்கான இடத்தையும், அங்கீகாரத்தையும் சம்பாதிக்கணும். அப்பறம்தான் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்கணும்...’ இப்படித்தான் சார் சொன்னார்.

 ‘கார்கி’ படம் முடியறதுக்குள்ள ஒருவித மன அழுத்தமே வந்திடுச்சு. அதனால்தான் ‘கார்கி’ பிரஸ் மீட்டில் என்னையே மறந்து அழுதேன். மேலும் ‘குமாரி‘ படத்திலும் கோ- புரொடக்‌ஷன்ல இருந்தேன். இந்த ஸ்டேஜ்ல இவ்வளவு பெரிய பொறுப்பு, ரிஸ்க் வேண்டாம்னு தோணுது. ஒரு பத்து வருஷத்துக்கு நோ புரொடக்‌ஷன். இயக்குநர் பெரிய பொறுப்பு. அதெல்லாம் ஐடியாவே இல்லை. ஆனால், எழுதப் பிடிக்கும். அப்பப்போ எழுத முயற்சி செய்திட்டு இருக்கேன்.

ஒரு நடிகையாக எந்த நடிகையின் வளர்ச்சி ஆரோக்கியமா இருக்கறதா நினைக்கிறீங்க?

நிறைய பேர் இருக்காங்க. அதுவும் இப்போதைய சினிமா நடிகைகளுக்கு நிறைய கதவுகளைத் திறந்திருக்கு. குறிப்பா நயன்தாரா மேம் வளர்ச்சி இன்ஸ்பிரேஷனா இருக்கு. அவங்கதான் ஹீரோயின் அடிப்படையிலான கதைகள்ல நிறைய நடிச்சு இன்னொரு மார்க்கெட்டிற்கு ஆரம்பப் புள்ளி வைச்சாங்க. 

சாய் பல்லவி நினைச்சிருந்தா ஜாலியா கமர்ஷியல் படங்கள், நாலு டூயட் இப்படி நடிச்சிருக்கலாம். ஏன் ‘கார்கி’ படத்துக்கு சம்மதிக்கணும்? ஒரு தயாரிப்பாளரா அன்னைக்கு சாய் பல்லவி அந்தப் படத்துக்கு ஓகே சொல்லலைன்னா நிச்சயம் இப்படி ஒரு மைல்கல் படம் கிடைச்சிருக்காது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எத்தனையோ தடைகள், பிரச்னைகள் அத்தனையும் கடந்து இந்திய மார்க்கெட்ல மாஸ் காட்டறாங்க சமந்தா. ராஷ்மிகா மந்தனா எவ்வளவோ பிஸி ஹீரோயின் ஆனாலும் அவங்களுக்கான நேரம் கொடுப்பாங்க. 

எப்போதுமே சிரித்த முகம்.அடுத்து மிருணாள் தாக்கூர். இவங்க கேரக்டர் தேர்வு எனக்குப் பிடிக்கும். இவங்களுடைய வளர்ச்சி எல்லாமே அடுத்து வர்ற நடிகைகளுக்கு நல்ல உதாரணம்.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

மணி சார் கூட ரெண்டாவது படம் ‘தக் லைஃப்’. கனவு புராஜெக்ட்னு சொல்லலாம். மலையாளத்தில் ‘ஹெல்லோ மம்மி’ படத்தின் வேலைகள் முடிஞ்சிடுச்சு. அந்தப் படம் காமெடி + சூப்பர்நேச்சுரல் ஹாரர் படமாக இருக்கும். மலையாளத்தில் மேலும் ரெண்டு படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கு. தெலுங்கில் சாய் தரம் தேஜுடன் அவருடைய 18வது
படத்துல ஒப்பந்தம் ஆகியிருக்கேன். அப்புறம் ஓடிடியில் ‘தீவினை போற்று’ தமிழ் வெப் சீரிஸ் உருவாகிட்டு இருக்கு.

ஷாலினி நியூட்டன்