Must Watch



எ ஃபேமிலி அஃபேர்

ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘எ ஃபேமிலி அஃபேர்’ எனும் ஆங்கிலப்படம்.

ஹாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், கிறிஸ் கோல். ஆனால், காதல் உறவில் அவரால் நிலைத்து இருக்க முடியவில்லை. அடிக்கடி காதல் முறிவு ஏற்படுகிறது.

கிறிஸ்ஸுக்கு பர்சனல் உதவியாளராக வேலை செய்து வருகிறார், ஜாரா. கிறிஸ்ஸுக்கும், ஜாராவுக்கும் இடையில் கூட அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இருந்தாலும் பொறுமை காத்து கிறிஸ்ஸுடன் வேலை செய்கிறாள் ஜாரா.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் பெரிதாக பிரச்னை வெடிக்க, ஜாராவை வேலையைவிட்டு நீக்கிவிடுகிறார் கிறிஸ். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஜாராவும் கிறிஸ்ஸைவிட்டு விலகிவிடுகிறாள்.  தனது தவறை உணர்ந்து, ஜாராவை மறுபடியும் வேலைக்கு அழைப்பதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறார் கிறிஸ். 

வீட்டில் ஜாராவின் அம்மா ப்ரூக் மட்டுமே இருக்கிறார். ஜாராவின் வருகைக்காக வீட்டிலேயே கிறிஸ் காத்திருக்கிறார். ப்ரூக்கும், கிறிஸ்ஸும் உரையாட, அவர்களுக்குள் காதல் மலர்கிறது. சூடுபிடிக்கிறது ரொமான்டிக் காமெடி திரைக்கதை. படத்தின் இயக்குநர் ரிச்சர்ட் லாகிரேவினிஸ்.  

ஸ்ரீகாந்த்

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திப்படம், ‘ஸ்ரீகாந்த்’. தொண்ணூறுகளின் ஆரம்ப வருடங்களில் படத்தின் கதை தொடங்குகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் வாழ்ந்துவரும் ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறக்கிறது ஓர் ஆண் குழந்தை. 

முதல் குழந்தையே ஆண் என்பதால் குஷியில் துள்ளிக் குதிக்கிறார் தந்தை. குழந்தையையும், அம்மாவையும் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் இடி விழுந்ததைப் போல எந்தவித மகிழ்ச்சியுமில்லாமல் மௌனமாக அமர்ந்திருக்கின்றனர்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தைப் போல தனது மகன் வரவேண்டும் என்று குழந்தைக்கு ஸ்ரீகாந்த் என்று பெயர் வைக்கிறார் தந்தை. குழந்தையைக் கையில் எடுத்துப் பார்க்கும்போதுதான் குழந்தைக்கு கண்கள் தெரியாது என்ற விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. உடைந்துபோகும் தந்தை, உயிருடனே குழந்தையைப் புதைக்க தயாராகிறார்.

 அதைத் தடுத்து, குழந்தையை வளர்க்கலாம் என்கிறார் அம்மா. பல்வேறு சிரமங்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த எப்படி பெரிய ஆளாகிறார் என்பதே இன்ஸ்பிரேஷன் திரைக்கதை.தொழில் அதிபர் ஸ்ரீகாந்தின் நிஜ வாழ்க்கையைத் தழுவி இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. படத்தை இயக்கியவர் துஷார் ஹிராநந்தனி.

பாப் மார்லி : ஒன் லவ்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற ஆங்கிலப்படம், ‘பாப் மார்லி: ஒன் லவ்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக் கிடைக்கிறது.
எழுபதுகளின் மத்தியில் நிலவிய மோசமான அரசியல் சூழலில் ஜமைக்கா மக்களின் அன்றாட வாழ்க்கையே சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஓர் இசைக் கச்சேரியை நடத்த திட்டமிடுகிறார் பிரபல ரெகே பாடகரான பாப் மார்லி.

இந்தக் கச்சேரிக்காகத் தயாராகும்போது சில மர்ம நபர்களால் அவரும், குழுவினரும் சுடப்படுகின்றனர். உயிர்ச் சேதம் இல்லை.  இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மார்லியின் மனைவியும் காயமடைகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கச்சேரிக்குத் தயாராகிறார் மார்லி. 

தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களே தன்னைச் சுட முயற்சி செய்தது மார்லிக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. இது மாதிரி பல்வேறு துன்பங்களைக் கடந்து, எப்படி அவர் புரட்சிகர இசைக்கலைஞனாக மாறுகிறார் என்பதே திரைக்கதை.பிரபல இசைக்கலைஞரான பாப் மார்லியின் வாழ்க்கையின் சில பக்கங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப்படம். இதன் இயக்குநர் ரெனால்டோ மார்கஸ் கிரீன்.

மான்ஸ்டர்

சமீபத்தில் வெளியான குழந்தைகள் குறித்த படங்களில் மிகச் சிறந்தது, ‘மான்ஸ்டர்’ என்று விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, இரண்டு
விருதுகளைத் தட்டியிருக்கிறது இந்தப் படம். இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த ஜப்பானிய மொழித்திரைப்படம். ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான், மினாட்டோ. சில நாட்களாக விசித்திரமான முறையில் மினாட்டோ நடந்துகொள்கிறான்.

தானாகவே முடியை வெட்டிக்கொள்கிறான், ஒரேயொரு காலணியுடன் வீட்டுக்கு வருகிறான், அடிக்கடி வீட்டுக்கு வராமல் எங்கேயோ போய்விடுகிறான், மறு பிறவி பற்றிப் பேசுகிறான்...

மினாட்டோவின் இந்த விசித்திர நடவடிக்கைகளால் அவனது அம்மா மிகவும் பதற்றமடைகிறாள். மகனது இந்த மாற்றத்துக்குக் காரணமாக அவனது ஆசிரியர் ஹோரி இருப்பாரோ என்று பள்ளிக்குச் சென்று சண்டையிடுகிறாள்.

உண்மையில் மினாட்டோவுக்கு ஏதாவது பிரச்னையா என்பதைத் தெரிந்துகொள்ள படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.சிறுவர்களின் உலகத்தை ஒரு கவிதை போல படமாக்கியிருக்கின்றனர். பெரியவர்களால் ஒருபோதும் நெருங்கமுடியாத தூரத்தில் சிறுவர்களின் உலகம் இருப்பதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் கொரீடா.  

தொகுப்பு: த.சக்திவேல்